I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: இயற்கையும் நானும்

Wednesday, 30 August 2017

இயற்கையும் நானும்

*உயிர் மீட்கும் மருத்துவம்*

53.நானும் இயற்கை வாழ்வியலும்

சுடுமணல் நெடும்பயணம்
கண்ணிருட்டி நாவறண்டு
உயிர்போகும் நேரம்
பெருமழையாய் வந்தாய் 
உயிர் மீட்டுத்தந்தாய் "

சிறுவயதில் எனக்கு கடுமையான மலச்சிக்கல் இருந்தது. மாதத்திற்கு அதிகபட்சம் மூன்றுநாள் மலம் கழிப்பதே எனது வழக்கம். சிறுவயதில்
பெரிய உணவு கிடைத்துவிடாது. என்றாலும் கூட, பள்ளியில் மதிய உணவு உட்பட மூன்று வேளையும்
ஏதோ ஒன்றை உள்ளே தள்ளிக் கொண்டேதான்  இருந்தேன். ஆனால்,கழிவைவெளித்தள்ளும் இயக்கம் மிகவும் மந்தமாக இருந்ததால் கடுமையான வியர்வை,சிரங்கு,மந்தப்புத்தி,மஞ்சள்காமாளை போன்ற பல கோளாறுகளால் பிடிக்கப்பட்டிருந்தேன்.கழிவு வெளியேறும் நாளில், ஆசனவாயில் கடுமையான வலி இருக்கும். கழிவு இறுகி இரத்தக் கசிவுடன் துண்டுத்துண்டாக வந்து விழும்.இஞ்சிச்சாறு,விளக்கெண்ணெய்,கடுக்காய் பொடி போன்ற எந்த வழிமுறையும் எனக்கு  அப்பொழுது மலச்சிக்கலில் இருந்து முழு தீர்வை தரவில்லை.அதிகப்பட்சம் 17 நாட்கள் வரை நான் மலம் வெளியேறாமல் அவதிப்பட்டுள்ளேன்.இறுதியில் யோகாசனம் செய்தால் இதிலிருந்து விடுபடலாம்.என்று ஒரு குடும்ப நண்பரின் வழிகாட்டுதலின் படி, எனது பதிமூணாவது வயதில், கன்னியாகுமரி மாயம்மா சமாஜத்தில் இருந்த சூரியச்சித்தர் சுவாமி வெங்கட் ரமணா அவர்களிடம் , யோகசனப் பயிற்சி ஆரம்பித்த ஒருசில நாட்களிலேயே  இந்த சிக்கல் சீரானது. ஆனாலும், இப்பவும் ஒருநாள் யோகாசனம் செய்யாவிட்டால் கூட ,மலம் முழுவதும் வெளியேறாத உணர்வு வந்துவிடும்.என்னைப் பொருத்தவரை இது ஒரு பரம்பரை வியாதி. எனக்கு முன்பு,எனது தந்தைக்கும் தற்போது எனது மகனுக்கும் கூட இந்த மலச்சிக்கல் வியாதியின் தன்மைகள் உள்ளன. தனூராசனம்,மட்ச்யாசனம்,யோகமுத்ரா போன்ற ஆசனங்கள், ஆசனவாய் கழிவுகளை வெளியேற்ற பெரிதும் உதவக்கூடியவை.ஆனால்,நான் என் குருவிடம் முதன்முதலில் கற்றது சிரசாசனமும் சர்வாங்காசனமும் தான்.இன்றுகூட இந்த  ஆசனங்களை 10 நிமிடம் செய்தால் போதும் இரண்டாவது முறையாக , வயிற்றில் தேங்கியுள்ள கொஞ்சநஞ்ச கழிவுகளும், உடனே நான் வெளியேறி விடுகிறேனே, என்று கெஞ்சும்.
உண்மையில் யோகத்தை நான் அறியாது போயிருந்தால் ஒரு தலைமுறையே இந்த நோயால் நாறிப்போயிருக்கும்.என்பதே மறுக்க முடியாத உண்மை.!
அதுபோல், எனது 15 வது வயதில் நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில்  வைத்து, நான் நடந்து சாலையை கடக்க முயன்றபோது, ஒரு ஆட்டோ வேகமாக வந்து தனது முன் சக்கரத்தை என் வலது படங்காலில் ஏற்றி நிறுத்திவிட்டது.!
ஓட்டுனர் பதறி வண்டியை எடுக்க, எனது கால் சதைந்த காய்போல் நைந்து இரத்தம் கொட்டியது.நான் ஓவென்று கதறி  அழ,என்னைச்சுற்றி  ஒரு பெரிய கூட்டமே கூடிவிட்டது  … பிறகு ஒருவழியாக  பஞ்சாயத்து எல்லாம் முடிந்து எனக்கு முதலுதவி செய்து வீட்டில் இறக்கி விட்டதோடு ஆட்டோ ஓட்டுனர் ஓடிவிட்டார்.
அதன்பின் தினமும் அரசு மருத்துவமனையில் போய்கட்டு போடுவது, மருந்து,மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடுவது போன்ற பல்வேறு முயற்சிகள் செய்தும் புண் ஆறாததோடு விரல்களுக்கும் கணுக்காலுக்கும் நடுப்பட்ட பகுதியில் ஒரு பெரிய குழியும் விழுந்து வருத்தியது. அதில் ஒரு மூன்று தேக்கரண்டி எண்ணெய் விடுவதற்குறிய அளவில் பள்ளம் வந்துவிட்டது. நாகர்கோவிலில் உள்ள அரசு, தனியார்  மருத்துவர்கள் எல்லாம் கால் முழுவதும் அழுக ஆரம்பித்துவிட்டது. காலை எடுக்க வேண்டிய நிலை வரலாம் என்று அச்சப்படுத்திய நிலையில் , நான் குணப்படுத்துகிறேன் என்று, நம்பிக்கை அளித்த ஒரு பெண் மருத்துவர். என்னையும்,என் தாயையும் திருநெல்வேலி, மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தங்கி இருக்க வைத்து,ஒரு மாதம் வரை  பென்சிலின் ஊசியைப்போட்டே எனது காலை காப்பாற்றி தந்தார்.! ஒர் அலோபதி மருத்துவத்தாய்.!
எங்கள் வறுமை நிலையை உணர்ந்த அவர், மருத்துவத்திற்காக  எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டாம். என்று கூறியதோடு மேலும் பல உதவிகளை செய்து தந்தார்.!
காலம் அவரின் பெயரை மறந்துவிட செய்துவிட்டது. ஆனால்,
எனது வலது காலில் கருணையின் தழும்பாய் அந்த மருத்துவரின் முகம் இன்றும் பதிந்துள்ளது.!
இதுபோல நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள மீனா கிளினிக் Dr.இராமலிங்கம் அவர்கள் பலமுறை  எங்கள் குடும்பத்திற்கே பொருள் கருதாது சேவை புரிந்துள்ளார்.ஒரு முறை ,ஒரு  மத வெறிக்கும்பல் நடத்திய வன்முறை தாக்குதலில் சிக்குண்டு எனது கீழுதடு நாடிவரை கிழிந்து விட்டது.
ஏதோ ஒரு நம்பிக்கையில் உதட்டை வாயோடு சேர்த்துப்பிடித்துக் கொண்டே, மீனா கிளினிக்கை நோக்கி ஓடினேன். அவர் அன்று அந்த இடத்தில் ஒரு எட்டு தையலும் எனக்கே தெரியாமல் உச்சந்தலையில் இருந்த காயத்தில் உள்ள முடியை வெட்டிவிட்டு அதில் ஒரு ஆறு தையலும் போட்டுவிட்டார்.!
இந்தத் தாக்குதலில் பலரும் படுகாயம் அடைய நாகராஜன் என்ற ஒரு நண்பர் தனது வலதுகையை இழந்தார். இவர்தான் இந்த தாக்குதலை ஏற்பாடு செய்தவர் என்று பின்னால் தான் தெரிந்தது.
இராமனுக்கு கோவில் கட்டுங்க,பாபருக்கு மசூதி கட்டுங்க
இல்லனா இரண்டையும் இடிச்சி பள்ளிக்கூடம் கட்டுங்க. அத விட்டுட்டு அப்பாவிகள ஏன்டா வெட்ட வாறீங்க, பின்னால் நீங்களே ஏன்டா வீணா சாகுறீங்க?
இப்படி ஒரு கேள்வி அப்பவே எனது மனதில் ஒலிக்க ஆரம்பித்திருந்தது.
<இது 1993ஆண்டு வாக்கில் கோட்டார் சௌராஷ்ட்ரா - இஸ்லாமியர் மோதலில் நடந்தது.>
அய்யோ,எதையோ சொல்ல வந்து எங்கேயோ போய்ட்டேன் பாருங்க.! ஒரு முறை நாசி வலியென்று கோட்டார் DVD பள்ளிக்கு செல்லும் பாதையில் உள்ள ஒரு காது,மூக்கு,தொண்டை நிபுணரிடம் நண்பர் ஒருவர் அழைத்துச் சென்றிருந்தார். மருத்துவர் மூக்கை பரிசோதித்து பார்த்து வலது மூக்கு எலும்பு வளைந்துள்ளது, உடனே அறுவை சிகிட்சை செய்வது நல்லது. என்று கூறி; தற்போது இதை சாப்பிடு என்று சில மாத்திரைகளை தந்து அனுப்பினார். பிறகு அடுத்த நாள் மீனா கிளினிக் டாக்டரிடம் நாசியை சோதித்ததில் வளைவு ஒன்றும் இல்லை,வெறும் சளிதான் அடைத்துள்ளது. என்று கூறினார்,நானும் நண்பரும் மீண்டும் அவரை பல சந்தேகங்களை கேட்க "அப்படினா, ஒரு எக்ஸ்ரே எடுத்துவா " என்று எழுதி தந்தார். பிறகு அதைப் பார்த்துவிட்டு,"நான் கூறியதைதான், எக்ஸ்ரேவும் கூறுகிறது. இங்கே பார் எவ்வளவு சளி உள்ளது பார். எலும்பு சரியாகத்தான் இருக்கு " என்று கடிந்து அனுப்பினார். அன்றுதான், சில மருத்துவர்கள் பணத்திற்காக தேவையில்லாத அறுவை சிகிட்சையை பரிந்துரைப்பார்கள் என்ற உண்மையை தெரிந்துகொண்டேன்.!

எனது 23 வது வயதில் நான் நுரையீரலில் சுருக்கம் மற்றும் இதயநோயால் பிடிக்கப்பட்டு  ஒருசில நாட்கள் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தேன். அப்பொழுது நாகர்கோவிலிலேயோ உள்ள பெரிய மருத்துவமனைக்கு செல் என்று எனக்கு சிலர் வழிகாட்ட  நானும் போனேன்.அங்கு எல்லா பரிசோதனைகளையும் முடித்த மருத்துவர்கள். இனி யோகா,உடற்பயிற்சி,எடை தூக்குதல் கடின பணிகள் எதையும் செய்யக்கூடாது. அப்படி மீறிச்செய்தால் உயிருக்கே ஆபத்தாகிவிடும், ஆறுமாதம் வரை நாங்கள் கொடுக்கும் மாத்திரை,மருந்துகளை சாப்பிடுங்கள்.அதில் முன்னேற்றம் இல்லாவிட்டால் இரண்டு அறுவை சிகிட்சை செய்ய வேண்டி வரலாம். என்று கூறி அனுப்பினர்.  இது எனக்கு மிகுந்த சிரமத்தை கொடுத்ததால் , எனது முதல் யோககுரு சூரியச்சித்தரின் வழிகாட்டுதலின் படி மாத்திரை,மருந்து அத்தனையையும் தூக்கி கடலில் வீசிவிட்டு யோகா,உடற்பயிற்சி,தற்காப்புகலை போன்றவற்றை அதிகமாக செய்தேன். இதன் பலனாக எனது நுரையீரல் சுவாசப்பிரட்சனை
ஒரு மாதத்திலேயே சீராகிவிட்டது.!
அதன் பிறகு திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகளும் பெற்றாயிற்று இப்ப மூத்தவன் நேச்சுரோபதி டாக்டருக்கும் இளையவன் கப்பல் இன்ஜினியரிங்கிற்கும் படித்து வருகிறான்.அதன்பிறகு ஒரு சுவாச குறைபாடும்
வரவில்லை.நான் சிறு வயதிலேயே யோகா,சித்தா வகுப்புகளுக்கு போயிருந்தாலும் யாரும் என்னிடம் இயற்கையைப் பற்றியே,மருத்துவ உண்மைகள் பற்றியோ எதுவும் கூறவில்லை. இதனால், யோகா செய்துகொண்டே கண்ட இரசாயண உணவுகளையும்  உண்டு வந்தேன். இதனால் அடிக்கடி தலைவலி,பல்வலி,காய்ச்சல்,காலரா,மலேரியா,டைபாய்டு போன்ற பல்வேறு நோய்களால் பிடிக்கப்பட்டு அவதிப்பட்டேன்.! சிக்கன் பிரியாணி,
புரோட்டா,கோக்,டீ,ஐஸ்கிரீம் போன்றவையே எனது முக்கிய உணவு. அதுவும் சென்னை போன்ற பெரு நகரில் வசித்ததால் பல பொழுதும் ஓட்டல் சாப்பாடுதான்.!
வருடத்திற்கு குறைந்தது இரண்டு முறை ஏதாவது ஒரு நோய்க்காக நாகர்கோவில் வந்து ஒரு மருத்துவமனையில் தங்கி,பத்துநாள் பதினைந்து நாள் என்று சிகிட்சை எடுத்துக் கொள்வேன்.அப்பொழுது எனக்காக எனது மனைவி,பிள்ளைகள் உறவினர்களும் வந்து மருத்துவமனை அறைகளில் தவம் கிடப்பார்கள்.! இப்படியே தான் நான் சென்னையில் பணிபுரிந்த பத்து ஆண்டுகளில் எட்டு ஆண்டு கழிந்தது.
மீதி இரண்டு ஆண்டுகள் மற்றவர்களுக்கு ஆரோக்கியம் கற்பிக்கும் ஆசானாய் மாறிவிட்டேன்.   சென்னையில் நான் சில திரைப் இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளேன். ஆனால்,அங்கு எப்பொழுதும் வேலை இருக்காது. அதனால்,கேட்டரிங் வேலை,ஏர்டெல் கம்பெனியில் கலெக்சன் வேலை, தனியார் திரைப்படக்கல்லூரியில் லெக்சர் வேலை என்று பல தளங்களில் ஒரே நேரத்தில்
இயங்கி உடலை சல்லடையாய் வதைப்பேன். பகல் முழுவதும் பணி செய்த களைப்பிருந்தாலும் இரவில் தங்கும் அறைக்கு வந்து குளித்துவிட்டு மீண்டும் ஏதோ ஒரு எதிர்ப்பார்ப்பில் ஏதேனும் ஒரு திரைப்பட இணை இயக்குனர் நடத்தும் கதை விவாதத்திலும் கலந்து கொள்வேன்.குறிக்கோள் உள்ள மனிதன் அத்தனை பேருமே அக்னிகுஞ்சுகள் தான். அதுவும், சினிமாவை குறிக்கோளாய்  கொண்டவனை உழைப்பாலும் சரி,தவத்தாலும் சரி மற்ற எவராலும் மிஞ்சமுடியாது.! இப்படி உடலை சல்லடையாய் வதைத்துப் பிழிவதோடு,இரசாயண மருந்தின் கேட்டையும் தொடர்ந்து ஊட்டியதன் விளைவாக ஒருநாள் குளித்து கொண்டிருந்த போது இரண்டு கையளவு சளி வாந்தியாய் வந்து வாஷ்பேசனில் கரைந்து போனது. பயங்கர குமட்டலுடன் காலையில் குடித்த  பிஸ்கெட்டும் தேநீரும் கூட வெளியே வந்ததோடு, நான்கைந்து முறை பேதி வேறு போய் உடல் நடுங்க ஆரம்பித்தது. பிறகு பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சில மாத்திரைகளை வாங்கிப்போட்டேன்.அதிலும் வாந்திபேதி சரியாகாமல் போக பயணச்சீட்டு இருந்தும் ஆரோக்கியம் இல்லாததால்,கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் கழிவறை பக்கத்திலேயே  அமர்ந்து நாகர்கோவில் வந்து சேர்ந்தேன்.
இங்கு இறங்கும் போதே காய்ச்சல் உச்சத்தில் இருந்ததால் உடனே அருகில் உள்ள சுபம் மருத்துவமனையில் சேர்த்து விட்டனர். பத்து நாள் கிட்டத்தட்ட 120 இராசயண மாத்திரைகள் பத்துபாட்டில் குளூக்கோஸ்,எண்ணற்ற ஊசி மருந்துகள்.
உடல் ஒருவாறு தேறி,நாளை வீட்டுக்குப்போகலாம் என்றிருந்த ஒரு மாலை வேளை சென்னையில் இருக்கும் போது வந்தது போல் - ஒரு குமட்டல் அதோடு என்னாலேயே நிதானிக்க முடியாத அளவிற்கு நான்கைந்து முறை படுக்கை அருகே இருந்த ஒரு பாத்திரத்தில் வாந்தியெடுத்தேன் … அதில் ஒரு ஐந்து கையளவு இரத்தம்  கொட்டி,இதுவே உனது சரீரம். உனது  அந்திமகாலம் ஆரம்பித்துவிட்டது. என்றுகூறி என்னைப் பார்த்து சிகப்பு பல் காட்டியது. என் மனைவி கதறுகிறாள் … சில நர்சும் மருத்துவர்களும் ஓடி வந்தார்கள்,
மருத்துவர் உடனே ஒரு ஊசியைப் போட்டுவிட்டு, இனிமேல் பயமில்லை.என்று; வாயைத்திறப்பதற்குள் ,அடுத்தடுத்து நான்கைந்து முறை வாந்தியெடுத்து, படுக்கையையும் பக்கத்தில் நின்ற செவிலியரின் உடையையும் சிவப்பாக்கினேன்.
மருத்துவர் பதற்றமுடன் இவரை உடனே ஜெயசேகரன் மருத்துவ மனைக்கு கூட்டிச்சென்று விடுங்கள். என்று என் மனைவியிடம் கூற, இந்த நேரத்தில் ஏன் இரத்தவாந்தி வருகிறது, என்று; யோசித்துக் கொண்டிருந்த என் சிறுமூளை அதற்கான விடையை கூறியது. அதாவது இரசாயண மருந்து வேண்டாம்,வேண்டாம் கொடுக்காதே. என்று,பலமுறை நமது கல்லீரல்  எச்சரித்தும் அதைக்கேளாமல் தொடர்ந்து அவற்றை கொடுத்து வந்ததால் உடலின் இரத்த வெள்ளையணுக்கள் அதிகமாகி, மண்ணீரல் வீங்கி உடலில் சேர்ந்துவிட்ட அத்தனை கழிவுகளையும் வெளியேற்ற உடல் முனைந்து செயல்படுகிறது. இதனாலேயே இரத்தவாந்தி வருகிறது. இப்படி ஒரு சிந்தனை எனக்குள் ஓட, நான்  மருத்துவரிடம் " அய்யா, எனக்கு ஏற்கனவே மாத்திரை அலர்ஜி உண்டு. இந்த மாத்திரைகளின் ஒவ்வாமையால் தான், இரத்தம் வருகிறதுனு நினைக்கிறேன். இதுவரை சாப்பிட்ட மாத்திரைகள் அத்தனையும் வயிற்றைப் புண்ணாக்கி இரத்தமாக வந்து விட்டது. இனி மாத்திரை கொடுக்காவிட்டால்,இரத்த வாந்தி வராது. அச்சப்பட ஒன்றுமில்லை. என்று;நான் கூறியதும் நிலமை சற்று சீரானதை உணர்ந்த, மருத்துவரும் இதை முதலிலேயே கூறி இருக்கலாம். என்றபடியே அங்கிருந்த மாத்திரை மருந்துகளை  எடுத்துவிட்டு மீண்டும் வெறும் குளுக்கோஸை மட்டும் ஏற்றிவிட்டு சென்றார்.!
பிறகு இரண்டு நாளில் குணம்பெற்று வீடு திரும்பிவிட்டேன்.! புத்தனுக்கு அரச மரத்தடியில் ஞானம் கிடைத்தது போல எனக்கு  மருத்துவ மனையில் ஞானம் கிடைத்தது. அன்றைக்கு என்னைவிட்டு ஓடிய இரசாயண அரக்கன், அதன் பிறகு என்னை தீண்டவே இல்லை,
இனி தீண்டப்போவதும் இல்லை.!
2008 ஆண்டு முதல் முழு இயற்கை விரும்பியாய் மாறிவிட்டேன். அசைவ உணவு,இரசாயண உணவு,பாட்டில் பானங்கள் மற்றும் இரசாயண மருந்து மாத்திரை போன்ற எல்லவற்றையும் விட்டுவிட்டேன். பல் தேய்க்க,குளிக்க,குடிக்க,குணப்படுத்த வேண்டிய அத்தனை இயற்கை மூலிகை தயாரிப்புகளையும் நானே தயாரித்து பயன்படுத்துகிறேன்.!2010 ஆண்டு முதல் யாம்பெற்ற இன்பம் அனைவரும் பெருக என்ற நோக்கில் யோகா & இயற்கை வாழ்வியல் முறைகளை பலருக்கும் கற்பித்து இயற்கையின் அற்புதத்தை பகிர்ந்து வருகிறோம்.!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மழைநாளில் பாதாள சாக்கடைக்காக, தோண்டியிருந்த குழியில் இருசக்கர வாகனத்தோடு விழுந்து அடி பட்டதால், சிலமாதங்கள் கடுமையான வலியில் ஆசனங்கள் பண்ண முடியாமல் அவதிப்பட்டேன். அதன்பிறகு நாபியாசனம்,புஜங்காசனம்,சக்கரவாகாசனம் போன்றவற்றை செய்தும், நமது இயற்கை ஊட்டச்சத்து மாவை தினமும் சாப்பிட்டும் இரண்டு மாதத்திலேயே பூரணகுணம் பெற்றேன்.!

முதல் யோகா தினத்தன்று நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் உலக வரலாற்றிலேயே முதல் முறையாக 32 நிமிடங்கள் சிரசாசன நிலையில் நின்று கொண்டே யோகா வகுப்பெடுத்து சாதனை புரிந்தேன்.!
அப்பொழுது கூட சில அலோபதி மருத்துவ நண்பர்கள், தலைகீழாக நின்று 40 நிமிடங்கள் பேசிக் கொண்டே இருந்தால் மூளைக்கு செல்லும் இரத்தக்குழாய்கள் வெடித்து விடும். ஆபத்திருக்கிறது.
என்று; எச்சரித்தனர்.  " நானோ நாள்ப்பட்ட பயிற்சியின் மூலம் செய்யும் எந்த முயற்சியும் ஆபத்தானது அல்ல. " என்று கூறி வெற்றிகரமாக அதை நிரூபித்துக் காட்டினேன்.!

ஒரு ஆறு மாதத்திற்கு முன்பு  அடி வயிற்றில் ஓரத்தில் ஒரு சிறிய புடைப்பு போல் இருந்தது. அதை மருத்துவ சோதனைக்கு உட்படுத்திப்பார்த்த போது அது குடலிறக்கம் என்றும் மேலும் பித்தப்பையில் கல்,கல்லீரலில் கொழுப்பு போன்ற மொத்தம் நான்கு வியாதி உள்ளது. இவற்றை எல்லாம் யோகாவாலோ இயற்கையாலோ குணப்படுத்தவே முடியாது. அதனால்,உடனே அறுவை செய்துவிடுங்கள்.இல்லை என்றால் உயிருக்கே ஆபத்து என்றார்கள்.! அதை நானும் பார்க்கிறேன், அறுவை சிகிட்சை செய்யமாட்டேன் என்று கூறவில்லை.எதற்கு முடியாத பட்சத்தில் இறுதி தீர்வாய் ஒருவேளை அதுவே இருக்கட்டும்.
ஆனால்,உயிருக்கு பயந்து வேண்டாத சிகிட்சைகளை மேற் கொள்வோரில் நானில்லை. என்பதை தெளிவாக கூறி வந்துவிட்டேன். இப்போது குடலிறக்கம் படிப்படியாய் சீராகி வருவதை என்னால் உணரமுடிகிறது. வழக்கமா மூன்று மாதத்திற்கு ஒரு முறை வரும் காய்ச்சல் மூன்று ஆண்டுகளுக்கு பின் முந்தாநாள் <26/08/17> வந்தது இன்றைக்கு முழுதாய் குணமாகிவிட்டது.!
ஆனா,இன்னும் சில நண்பர்கள் டெங்கானு செக் பண்ணுங்க  அப்டின்னு தகவல்கள் அனுப்புகிறார்கள்.!
டெங்கு போன்ற நோய்கள் எனக்கு இந்த ஜென்மத்தில் வராது.அப்படியே வந்தாலும் அதை இரண்டு நாளில் குணப்படுத்தும் வழி நமக்குத் தெரியும்.!
இதுவன்றோ, இயற்கையின் பேரருள்.!

-ஏகப்பிரியன் DYT

தொடரும் …

aumherbals.blogspot.in

*பகிரவேண்டாம்*

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான&#127919;தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...