*உயிர் மீட்கும் மருத்துவம்*
50.அனைவருக்கும் பயனளிக்கும்
ஆறுவிதமான பயிற்சிகள்
" ஓடும் நீரே ஆறு
இயங்கும் உடலே
ஜீவன் …
தேடும் பொருளே
ஆரோக்கியம் …
தெளிந்த நல்லறிவே
ஞானம் … !
1.தோப்புக்கரணம்
கால்களை சற்று அகலமாக வைத்துக் கொண்டு நிற்கவும்
வலது கையால் இடது காதையும் இடது கையால் வலது காதையும்
பிடித்துக் கொண்டு மூச்சை இழுத்து
பின் மூச்சை வெளியேற்றியபடியே முடிந்த வரை முட்டியை மடக்கி கீழே அமரவும், பிறகு மூச்சை
இழுத்துக் கொண்டே எழுந்து கொள்ளலாம். இதுபோல் ஒரு தடவைக்கு 5 முதல் 20 எண்ணிக்கை
விதம் மொத்தம் 5 சுற்றுகள்
வரை செய்து கொள்ளலாம்.!
2.தண்டால்
படுத்து கால்களை சேர்த்து வைத்துக் கொண்டு அவரவர் கைகளில்
நான்கு ஜான் அகலத்தில்
அளவெடுத்து கைகளை ஊன்றிக் கொண்டு நின்று மெதுவாக பிறகு மூச்சை வெளியேற்றியபடியே கை முட்டிகளை மடக்கி மார்பு தரையில் படும் வரை மெதுவாக கீழ் நோக்கி வந்து, பிறகு மூச்சை இழுத்தபடியே மேல் நோக்கி வரலாம். மீண்டும் மூச்சை
வெளியேற்றியபடியே கீழே வந்து மூச்சை இழுத்துக்கொண்டே மேலே வரலாம். இதுபோல் ஒரு முறைக்கு 5 முதல் 20 எண்ணிக்கைகள் விதம் மொத்தம் ஐந்து சுற்றுகள் வரை செய்து நிறைவு செய்யலாம்.!
இரண்டு வகையான
பயிற்சிகளின் பயன்கள்
1.கால் முட்டி எலும்புகள் பலப்படும்
2.உடல் எடை சீராக இருக்கும்
3.காதுகளை பிடித்துக் கொண்டு தோப்புக் காரணம் போடுவதால்
மூளையின் அதிர்வு நிலைகள் சீரடையும். [இந்தப் பயிற்சி இப்பொழுது சூப்பர் பிரெய்ன் யோகா என்று வெளிநாடுகளில் பிரபலமாக இருக்கிறது]
4.மூச்சு அறைகளில் தேங்கியுள்ள
கரியமிலா வாய்வு வெளியேறும்
5.உள்ளுறுப்புகளில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
6.கை எலும்புகளின் பலம் அதிகரிக்கும்
7.தோள் மற்றும் மார்புக் கூட்டின் விரிவுத் தன்மை அதிகரிக்கும்
8.கவன குவிப்புத் திறன் அதிகரிக்கும்
9.நிமிர்ந்த தோற்றத்தையும் நல்ல தன்னம்பிக் கையையும் தரும்
10.உடல் திறன் அதிகரிக்கும்
11. இந்த இரண்டு பயிற்சிகளையும் சேர்த்து செய்வதால் முழு உடலுக்கும் முழுமையான பயிற்சியாக அமைகிறது
12.ஆரோக்கியமாக அதிகமான யோகா பயிற்சி, விளையாட்டு, உடற்பயிற்சி, வேலைகளை செய்வதற்கான மனபலத்தை தருகிறது.!
நாம் தினமும் இந்த இரண்டு பயிற்சிகளையும் காலை எழுந்ததும்
ஒவ்வெரு சுற்று செய்து வந்தால் கூட மிகுந்த பயனைப் பெற முடியும்.!
அற்புத யோகாசனங்கள்
3.அர்த்த உத்தானாசனம்
1.மெதுவாக மூச்சை இழுத்துக் கொண்டே இரண்டு கைகளையும்
தலைக்கு மேலாக உயர்த்தவும்
2.மெதுவாக மூச்சை வெளியேற்றிக் கொண்டே முன்பக்கமாக குனியவும்
<இப்பொழுது கைகள் காதுக்கு நேராக நீட்டப்பட்ட நிலையிலேயே
இருக்க வேண்டும்>
3.அதே நிலையில் மூச்சை இழுக்காமல் 10 எண்ணிக்கைகள்
வரை நிற்கவும்
4.பிறகு மெதுவாக மூச்சை இழுத்துக் கொண்டே இடுப்பை நிமிர்த்தவும்
5.மெதுவாக மூச்சை வெளியேற்றிய வாறே கைகளை பக்கவாட்டில் கீழே இறக்கவும். இதுபோல் இரண்டு முறைகள் செய்து விட்டு
அடுத்த ஆசனத்தை செய்யலாம்.
3.அர்த்த சக்கராசனம்
1.காலை சற்று விரித்த நிலையில் கைகளை இடுப்பில் வைத்த வாறு
நிமிர்ந்து நிற்கவும்
2.அதே நிலையில் இரண்டு மூறை மூச்சை இழுத்து விடவும்
3.அடுத்து சாதாரண மூச்சுடன் மெதுவாக இடுப்பை கைகளால் சற்று தாங்கியவாறே பின்னோக்கி
வளைக்கவும்
4.இதே நிலையில் 10 முதல் 15 விநாடிகள் சாதாரண மூச்சில் காத்திருக்கவும்
5.பிறகு மெதுவாக இடுப்பை மேலே நிமிர்த்தி முதல் நிலைக்கு வரவும்
இதுபோல் இரண்டு முறைகள் செய்து நிறைவு செய்யலாம்.
பயன்கள்
1.முதுகுத் தண்டு பலப்படும்,முதுகுவலி குணமாகும்.
2.சிறுநீரகம் கல்லீரல் இதயம் போன்ற இராஜ உறுப்புகளுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
3. மூச்சிறைப்பை போக்கும்
4.கை கால் எலும்புகள் பலப்படும்
5.காது, மூக்கு, தொண்டையின் ஆற்றல் அதிகரிக்கும்.!
அடுத்து ஹூ க்ரியா
சமீபத்தில் உலக மருத்துவ
ஆராய்ச்சி கழகத்தினர்,
ஓர் ஆராய்ச்சி முடிவை வெளியிட்டனர். அதில் ,ஒருவர் தனது வயிற்று தசைகளை எந்த அளவிற்கு இயக்குகிறாரோஅந்த அளவிற்கு ஆரோக்கியமாகவாழ்வார் என்று குறிப்பிட்டுள்ளனர்.! யோகாவில் வயிற்றுப் பகுதியை இயக்கவும்.உள் அவயங்களை சுத்திகரிக்கவும் பலப்படுத்தவும் உட்டியானா, நௌலி,அக்னிசாரா,குண்டலினி க்ரியா போன்ற பல்வேறு அருமையான பயிற்சிகள் உள்ளன. அதில் ஒன்றுதான் ஹூ க்ரியா.!
இது செய்வதற்கு மிக எளிய பயிற்சி. ஆனால்,இதன் பயன்கள் மிக அதிகம். ஹடயோகா, தாந்த்ரா யோகா,தற்காப்பு கலை, மத வழிபாடு போன்ற பல்வேறு இடங்களில் ஹூ க்ரியா செய்யப் படுகிறது.! நல்வினை இருப்பவர்கள் இப்பயிற்சியை
பயின்று பயனடைக.!
5.ஹூ க்ரியா செய்முறை
1.ஒரு விரிப்பில் சுகாசனம், வஜ்ராசனம் அல்லது
சித்தாசனத்தில் அமர்ந்து கொள்ளவும்.
2.கைகளில் சின் முத்திரை வைத்துக்கொள்க
3.அடி வயிற்றை உள்ளிழுத்து உதட்டை குவித்து ஹூ என்ற ஒலியுடன் வயிற்றில் உள்ள மொத்த காற்றையும் வாய்வழியாக வெளியேற்றவும்.
4. மீண்டும் இதுபோல் வாயை மூடாமல் தொடர்ந்து 30 முதல் 50 எண்ணிக்கைகள் செய்யலாம். பிறகு சிறிது ஓய்விற்கு பின் மீண்டும் இதுபோல் இரண்டு சுற்றுகள் செய்து முடிக்கலாம்.!
பயன்கள்
1.உடலில் உள்ள கெட்டகாற்று வேகமாக வெளியேறும்.
2.வயிற்று தசைகளின் இயங்குத் திறன் அதிகரிக்கும்.
3.உடல் எடைக்குறையும்
4.சுவாசம் சீராக நடைபெற உதவும்.
5.உடலில் உள்ள மின்சார ஆற்றல், உடல் தாங்கு திறன் அதிகரிக்கும்.
6.குண்டலினி ஆற்றல் விழிப்படையும்.
7.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
8.கவன குவிப்புத் திறன் அதிகரிக்கும்.
9.உள்ளுணர்வின் ஆற்றல் மேம்படும்.
இது போன்ற பல்வேறு பயன்களை உடைய அற்புத ஹூ க்ரியாவை அனைவரும் பயின்று ஆரோக்கியமாய் வாழ்க.!
திருமூலர் அருளிய ஒர் அற்புத
பிராணாயாமம்
6.இடகலை நாடிசுத்தி
நேராக நிமிர்ந்து அமர்ந்து கொண்டு இடது நாசியில் மூன்று எண்ணிக்கை காற்றை இழுத்து 12 எண்ணிக்கைகள் இரண்டு மூக்கையும் மூடி உள்நிறுத்தவும் அந்த நேரத்தில் ஆசனவாயையும் இறுக்கிக் கொள்ளவேண்டும்
பிறகு ஆசனவாயை விட்டு ஆறு எண்ணிக்கைகள் வலது நாசியில் காற்றை வெளிவிடவேண்டும். <3,12,6 >இது ஒரு சுற்று இதுபோல் பத்து சுற்றுகள் செய்ய வேண்டும். அதாவது இடதில் இழுத்து , உள்நிறுத்தி , வலதில் வெளிவிடுவது ஒருசுற்று.! <வலது நாசியில் மூச்சை வெளிவிடலாம். ஆனால், வலதுநாசியில் இழுக்கலாகாது.!
அதுபோல் இடதுநாசியில் இழுக்கலாம் ஆனால், வெளிவிடக்கூடாது>
அடுத்து கையை மாற்றி இடது நாசியில் 3 எண்ணிக்கை இழுத்து
வலதுநாசியில் 6 எண்ணிக்கை வெளியேவிட்டுவிட்டு பிறகு இரண்டு மூக்கு மற்றும் ஆசனவாயை இறுக்கி 12 எண்ணிக்கைகள் காத்திருக்கவும். இது ஒருசுற்று. பிறகு மீண்டும் 3,6,12 என்ற விதத்தில் இதுபோல் 5 சுற்றுகள் செய்து பயிற்சியை நிறைவு செய்ய வேண்டும்.!
பயன்கள்
1.உடலில் உள்ள கெட்டகாற்று வேகமாக வெளியேறும்
2.நுரையீரலின் இயங்கு சக்தி அதிகமாகும்
3.உடல் மிதக்கும் சக்தி ஏற்படும்
4. இரத்தஅழுத்தம் சீராகும்
5.இளமையான தோற்றம் கிடைக்கும்
6.உடல் எடை சீரான நிலையில் பாதுகாக்கப்படும்
7. குண்டலினி ஆற்றல் மேம்பட்டு ஆன்ம விழிப்பு நிலை ஏற்படும்
8.கவனகுவிப்பு திறன் மேம்படும்
9.நாளமில்லா சுரப்பிகளின் இயக்கம் சீராகும்
10.அதிக நேரம் தியானம் செய்யும் ஆற்றல் வளரும்.!
இது ஆரம்ப நிலையினருக்கு கொஞ்சம் கடினமான பயிற்சியாக தெரியும். ஆனால், தொடர்ந்து பிராணாயாமம் பயில்பவர்களுக்கு மிகவும் சுலபமாக செய்ய வருவதோடு நீடித்த ஆரோக்கியத்தையும் வழங்கும் அற்புத பயிற்சி இது.!
இந்தப் பயிற்சியை காலை,மதியம்,மாலை உணவிற்கு முன் தொடர்ந்து ஆறுமாதம் செய்துவந்தால் தீராத ஆரோக்கிய குறைபாடும் எதுவும் நீங்கும்.!
7.சாந்தியாசனம்
சாந்தியாசனம் என்ற சவாசனத்தை பயிலும் முன் ஒரு சில யோகாசனத்தை செய்தபின்னோ அல்லது உடல் களைத்துப் போகுமளவு சில உடற்பயிற்சிகளை செய்தபின்போ செய்தால் அதிக பலனை உணர்வதோடு இரத்த அழுத்தமும் சீரான நிலைக்கு வருவதை உடனே உணரமுடியும். இது எப்படியெனில் நன்றாக வேலை செய்து கடுமையான தாகம் ஏற்பட்ட பிறகு நீர் குடித்தால் எப்படி உடல் நீரின் தன்மையை வேகமாக ஈர்த்துக் கொள்வதோடு அதன் சுவையும் நமக்கு ஆனந்தத்தை தருவதுபோல் இருக்கிறதோ அதுபோல் தான் இதுவும். அப்படி இல்லாமல் சும்மா கால் மணி நேரத்திற்கு ஒருமுறை நீரையோ, பாட்டில் பானங்களையோ இடையறாது உள்ளே தள்ளிக் கெண்டிருப் பவர்களுக்கு நீரின் சுவை எப்படி தெரியும், இவர்களின் உடல் உறுப்புகளான நுரையீரலும்,சிறுநீரகமும், கல்லீரலும் ஆனந்தத்தை உணருமா அல்லது அடேய் ஆர்வக்கோளாறு, எனக்கு கொஞ்சம் ஒய்வு கொடுடா … என்று கதறுமா? அதுபோலவே நன்றாக பகலெல்லாம் உழைத்து களைத்து இரவில் தூங்கும் தொழிலாளியின் உறக்கத்திற்கும் வட்டிக்கடையில் வெங்கலப் பானைபோல் ஏதோ ஒரு இடத்தில் அசையாமல் இருந்துவிட்டு போனாப் போகுதுனு அரைமணி நேரம் வெட்டிக் கதையடித்துக் கொண்டே நடைப்பயிற்சி செய்துவிட்டு இரவில் தூங்க செல்லும் செல்வந்தனின் தூக்கத்திற்கும் எத்தனை வேறுபாடு உள்ளது. என்பதை நாம் சொல்லியா தெரிய வேண்டும்.! இன்றைக்கு யோகா என்று பெயரை வைத்துக் கொண்டு, இதுபோன்ற பல வெங்கலப் பாத்திரத்தை வரிசையாக நிற்கவைத்து தொட்டு விளையாட்டு, பந்து எரிதல் என்று பல விளையாட்டுகளை கற்று கொடுத்துவிட்டு பிறகு உடல் களைத்தவுடன் அமைதியாக உட்காரச் சொல்லி, அதோ நெற்றிக் கண் திறக்கிறது பார், இதோ தியானவெளி தெரிகிறது பார் என்றெல்லாம் சொல்வது இதற்காகத்தானே.! அதுசரிங்க ஆனால், எங்களுக்கு நேரமே குறைவாகத்தான் உள்ளது.! பத்துநிமிடம் சாந்தியாசனம் செய்துவிடலாம் ஆனால், உடல் களைப்படைய வேறு என்ன செய்வது என்றால் சாந்தியாசனம் செய்வதற்கு முன் சர்வாங்காசனம், விபரீதகரணி, ஹலாசனம், அதோமுக சவானாசனம், அர்த்த சிரசாசனம் போன்ற ஆசனங்களில் ஏதேனும் ஒன்றை மூன்று முறை 15 விநாடிகள் விதம் செய்துவிட்டு புஜங்காசனம் இரண்டு முறை 15 விநாடி விதம் அல்லது மட்ச்யாசனம் ஒருமுறை 30 விநாடிகள் வரை செய்து பிறகு சாந்தியாசனம் செய்தால் உடனடியாக உடல் பூரண ஓய்வை உணர்ந்து நோய்களை படிப்படியாக குணமாக்குவதோடு,சாந்தியாசனம் செய்த உடன் நாள்முழுக்க மனமும் உடலும் உற்சாகமாக இயங்கும்.! மற்ற ஆசனங்களை நேரில் கற்று கொள்ளுங்கள்.!
அல்லது நாம் மேற்கூறிய 6 பயிற்சிகளை செய்துவிட்டு ஏழாவதாக
ஒகோ ஆசனமான சாந்தியாசனத்தை செய்யலாம்.! இதில் பல முறைகள் உள்ளது ஆனால், பயன்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை தான்.! ஆயினும் மண்பாண்ட சமையலுக்கு ஆரோக்கியமும் ருசியும் அதிகம் அலுமினியத்திற்கு குறைவு. என்பது போல நமது உடல் நிலைக்கேற்ப பயனுண்டு.!
செய்முறை
1.விரிப்பில் மல்லாந்து படுத்து கொள்ளவும். 2.தலையை ஏதாவது ஒருப்பக்கம் லேசாக சரித்து வைத்து கொள்ளவும்.! 3.உடலை தளர்வாகவும் மனதை அமைதியாகவும் வைத்து கொள்ளவும்! 4. கண்களை மூடியபடி வைத்து கொண்டு மூன்று முறை மூச்சை ஆழமாக இழுத்து மெதுவாக வெளிவிடவும்.5. மூன்று முறை கண்களை நன்றாக சுருக்கி விரித்துப் பார்க்கவும். 6.மூன்றுமுறை கண் கருவிழியை பக்கவாட்டில் வல இடமாக நகர்த்தவும். 7.இப்பொழது புருவ மத்தியிலிருந்து கண் கருவிழியை வலதுபக்கமாக சுத்தி புருவமத்திக்கு கொண்டு வரவேண்டும், பிறகு இதுபோல இடதுபக்கமாக சுத்தி புருவமத்திக்கு வரவேண்டும். இது ஒரு சுற்று இதுபோல் இன்னும் இரண்டு சுற்றுகள் செய்ய வேண்டும்.
8. அடுத்து மூக்கு நுனியை 5 விநாடிகள் புருவ மத்தியை 5 விநாடிகள் என்று மொத்தம் மூன்று சுற்றுகள் செய்துவிட்டு, கண்களை மெதுவாக மூடிக்கொள்ளலாம்.9. உடனே மூன்று முறைமூச்சை ஆழமாக இழுத்து வெளிவிடவும்.
10. இப்பொழுது கால்கட்டை விரல் , கணுக்கால், முட்டிக்கால், ஆசனவாய், சிறுநீரகம், வயிறு, இதயம், நுரையீரல் ,தொண்டைக்குழி, வாய், மூக்கு, கண்கள், புருவமத்தி, உச்சந்தலை என்று உடலில் உள்ள ஒவ்வெரு பகுதியையும் தனித்தனியாக இறுக்கி அந்த இடம் ஓய்வாக, பலமாக ஆரோக்கியமாக இருப்பதாக ஒவ்வெரு பகுதிக்கும் 2 முறை மனதில் நினைத்துக் கொள்ளவேண்டும். 11. பிறகு உச்சந்தலையை நினைத்து முடித்ததும் உடலில் உள்ள எல்லா பகுதிகளையும் இறுக்கமாக்கி என் உடலில் உள்ள ஒவ்வெரு பகுதியும் ஓய்வா, பலமா, ஆரோக்கியமா இருக்கு என்பதாக 3 முறை மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும்.!
12. மெதுவாக இரண்டு முறை மூச்சை இழுத்து விட்டு விட்டு இரண்டு உள்ளங் கைகளையும் எடுத்து தொப்புளை மையப்படுத்தி விரித்து வைக்கவும். 13.இரண்டு கட்டைவிரல்களும் ஒன்றைஒன்று தொட்டதுபோன்றும் , இரண்டு ஆள்க்காட்டி விரலும் ஒன்றைஒன்று தொட்டது போலும் இருக்க வேண்டும். 14. அப்படியே உங்கள் வயிற்றினுள் ஒரு ஒளி வட்டம் இருப்பதாக நினைத்து கொண்டே படுத்திருக்க வேண்டும். இப்படியே முழுகவனத்தையும் வயிற்றிலேயே வைத்துக் கொண்டு, மூச்சு உள்ளே போவதையும் வெளியே போவதையும் கவனித்து கொண்டே இருங்கள்.
15. இப்படியே 5 நிமிடம் படுத்திருங்கள். அந்நேரம் உங்களையறியாமல் தூக்கம் வந்தால் தூங்கிவிடுங்கள் . 16 . பிறகு கைகளை கீழே எடுத்து 3 முறை மூச்சை ஆழமாக இழுத்து மெதுவாக வெளி விடவும். 17.மெதுவாக வலதுகையை தலைக்கு நேராக நீட்டி உடம்பை வலப்பக்கமாக ஒருக்களித்து, எழுந்து அமரவும்.! அம்மாடியோ … 17 நிலைகள் கொண்ட ஒரே ஆசனம் இதுதான் போல.! இந்த முறை சவாசனம் பல்வேறு யோகாசன குருமார்களின் முறையை உள்ளகத்தில் கொண்டு நம்மால் உருவாக்கப்பட்ட புதிய முறை.! இரத்த அழுத்தம், உடல் பருமன், சக்கரை வியாதி, மனஅழுத்தம், பக்கவாதம் போன்ற பல்வேறு நோய்களுக்கு நாம் யோகா & இயற்கை வாழ்வியல் பயிற்சியளித்து … பலரின் செயற்கை இன்சுலின், இன்ஹேலர் மற்றும் தள்ளி வண்டிகளுக்கு ஒய்வு கொடுத்து ஆரோக்கியமாக்க உதவிய முக்கிய காரணங்களில் இந்த ஓகோ ஆசனமும் மிக முக்கியமானது.! ஏனெனில், சாந்தியாசனத்தில் உடலுக்கானப் பயிற்சி, மனப்பயிற்சி, பிராணப்பயிற்சி அதோடு தியான நிலையும் இணைந்த முழுமையான ஆசனமாய் இது விளங்குகிறது.! மரணப்படுக்கையில் இருப்பவர் கூட இந்த ஆசனத்தை முறையாக செய்தால் மூன்றுநாளில் எழுந்து அமர்ந்துவிடுவார்.!
மேற்கூறிய ஏழு பயிற்சிகளையும் தினமும் செய்து வந்தால் வியக்கத் தகுந்த அளவில் உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.!
-ஏகப்பிரியன் D.Y.T
தொடரும் …
amyogatrust.blogspot.in
No comments:
Post a Comment