*உயிர் மீட்கும் மருத்துவம்*
36.வாழ்வின் அர்த்தம்
பணத்தின் மதிப்பு தெரியும்
செல்வத்தின் மதிப்பு தெரியும்
செல்பேசியின் மதிப்பு தெரியும்
*தாயின் மதிப்பு தெரியாது*
வாகனத்தின் மதிப்பு தெரியும்
இல்லத்தின் மதிப்பு தெரியும்
தொழிலின் மதிப்பு தெரியும்
*தந்தையின்மதிப்பு தெரியாது*
அழகின் மதிப்பு தெரியும்
ஆசையின் மதிப்பு தெரியும்
அறிவின் மதிப்பு தெரியும்
*மனைவியின் மதிப்பு தெரியாது*
முடியின் மதிப்பு தெரியும்
புத்தக மதிப்பு தெரியும்
உடையின் மதிப்பு தெரியும்
*குருவின் மதிப்பு தெரியாது*
மின் விசிறியின் மதிப்பு தெரியும்
குளிர்பெட்டியின் மதிப்பு தெரியும்
கட்டிலின் மதிப்பு தெரியும்
*இயற்கையின் மதிப்பு தெரியாது*
அரசின் மதிப்பு தெரியும்
அதிகாரத்தின் மதிப்பு தெரியும்
நீதியின் மதிப்பு தெரியும்
*மனித வாழ்வின் மதிப்பு தெரியாது*
ஒருமுறை சார்லி சாப்ளின் ஒரு விருந்தில் கலந்துகொள்ள போனபோது ,கோட் போடாமல் போனதால் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார்களாம்.! உடனே தனது இல்லத்திற்கு வந்து கோட்டை அணிந்து சென்றவர் விருந்தில் அனைவரும் உணவை கரண்டியில் எடுத்து வாயில் வைக்க,
சாப்ளின் மட்டும் உணவை கையில்
எடுத்து கோட்டுக்கு ஊட்டிக் கொண்டிருந்தார் " அழகான கோட்டே சாப்பிடு, விலையுயர்ந்த கோட்டே சாப்பிடு " என்று;அவர் கோட்டின் மேல் உணவை கொட்டிக்
கொண்டே இருந்தாராம்.! இதைப்பார்த்த பலரும் அவர் ஏதோ
சிரிப்பு காட்டுவதாக எண்ண ஒரு சிலருக்கு மட்டுமே " கோட்டுக்கு உணவு தேவையில்லை மனிதனுக்கே உணவு தேவை " என்ற உண்மை புரிந்தது.! ஒரு கல்லூரி மாணவனிடம்
கல்லூரி முதல்வர் கூறியுள்ளார் " முடியை ஒழுங்காக வெட்டிக்கொள்,பெண் பிள்ளைகளுக்கு தொல்லை தராதே" என்று. அவனோ அந்த முதல்வரையே குத்திக்கொன்றுவிட்டு இன்று பாளையங்கோட்டை சிறையில் சிக்கன் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறான்.!
தனது முடியின் மதிப்பும் வாலிப
ஆசைக்குள்ள மதிப்பையும்
உணர்ந்த அந்தப் பையனுக்கு.ஒரு உயிரின் மதிப்பு தெரியவே இல்லை.!
அது போன்றே அரசு கலந்தாய்வில் சேலம் SVS இயற்கை மருத்துவக்கல்லூரியில் இடம் பெற்ற மாணவ,மாணவிகளிடம் அந்தக் கல்லூரி நிர்வாகம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட 5 மடங்கு கட்டணம் அதிகமாக வசூலித்து வந்தது. இதற்கு எதிராக பல மாணவ, மாணவிகள் எம்ஜிஆர் பல்கலை கழகம்,ஆட்சியர் அலுவலகம்,தலைமைச் செயலகம்,நீதிமன்றம் என்று பல்வேறு இடத்தில் முறையிட்டு வந்தனர் … இறுதியில் கல்லூரி நிர்வாகம் மூன்று பெண் பிள்ளைகளை அடித்துக்கொன்று கிணற்றில் வீசியது.! மருத்துவராக கனவு கண்ட அந்த பிள்ளைகளின் வாழ்க்கையை பறித்த அந்த கல்லூரி இப்பொழுது மீண்டும் செயல்படத் தொடங்கி உள்ளது.!
நீதியை கூட நிதியை கொண்டு கொன்று போடும் போக்கு தமிழகத்தில் தொன்றுதொட்டே நடந்து வருகிறது.!
மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை வந்தபோது இனியும் இதுபோன்ற கொலையும்,தற்கொலையும் ஊழலும் எங்கும் நடக்காது என்று முட்டாள் தனமாக நம்பிய அப்பாவி பெற்றோர்களில் நானும் ஒருவன்.! ஆனால்,தற்போதும் நான் வேறு ஒரு இயற்கை மருத்துவக்கல்லூரியில் கலந்தாய்வில் இடம்பெற்ற எனது மகனுக்கு மூன்று மடங்கு கட்டணம் அதிகமாகவே வழங்கி வருகிறேன்.! நீட் தேர்வு என்ற உடனேயே இதுபோன்ற அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி கொள்ளையர்கள் பலர் மேலும் வசூலை தீவிரப்படுத்தி உள்ளனர்.!
ஹூ … ம் கோடிகோடியாய் ஊழல் செய்து தண்டனைப் பெற்ற தன் தலைமை போனபோது, நோய்முற்றி,காலை இழந்து வதைப்பட்டும் ஒன்றுமே கொண்டு போகவில்லை. என்பதைப் பார்த்த பின்னும் அந்தக் கட்சி அமைச்சர்கள் பள்ளி,கல்லூரி கட்டணம் முதல் குட்கா ஊழல் வரை இன்றும் பல்வேறு அழிச்சாட்டியங்களை தொடர்ந்து செய்துவருவதைப் பார்க்கும் போது பணத்தின் மதிப்பு தெரிந்த இந்த அரசியல் எத்தர்களுக்கு கல்விக்காக உயிர்நீத்த எத்தனையோ மாணவ மாணவிகளின் உயிரின் மதிப்பு தெரியவில்லையே,உண்மை, நீதி எவற்றின் மதிப்பும் தெரியவில்லையேனு நினைத்தால் நெஞ்சமெல்லாம் பற்றியெறிகிறது.!
தனது மகனை வெறுத்து. மருமகளை தொட்டதற்கெல்லாம் குறைகூறிய எனது உறவினர் ஒருவர் புனித பயணமாக மெக்கா செல்கிறேன் என்றார்.!
நான் கேட்டேன் " எதற்கு மெக்கா செல்கிறீர்கள், இறைவனை அங்கிருந்து துரத்தவா அல்லது மிரட்டவா "
என்று; அதன்பிறகும் அவர் என்னோடு ஒரு அரைமணி நேரம்
தன் மார்க்கம் பற்றியும், இறைவன் மற்றும் இறைதூதர் மேல் தான் வைத்துள்ள அன்பு பற்றியும் கதையடித்தார்.! நேரில் தன் முன்னால் உயிராய் உலவும் பிள்ளைகளை நேசிக்கத் தெரியாத
இதுபோன்ற தாய்மார்கள்,தந்தைமார்கள் எல்லாம் இறைவன் மேல் அன்பு வைத்திருப்பதாய் கூறுவது.! அவன் நேரில்
வந்து தன்னை சந்திக்கமாட்டான்
என்ற ஒற்றை தைரியத்தில் தான்போல.! மனிதன் மேல் அன்பும் கருணையும் இல்லாத மனிதர்களை மனிதர்கள் என்றே கூறமுடியாத போது இவர்களை எப்படி இறை
அடியார்கள், பக்தர்கள் என்று மதிக்க முடியும்.!ஆயிரம் தர்ம நியாயங்களை போதித்த நமது பாரததேசத்தில் கூட இன்று சாதி மதத்திற்காக, பணத்திற்காக போலி கவுரவத்திற்காக,தங்கள் சுயநலத்திற்காக எத்தனையோ கொலைகளும்
கொள்ளைகளும் இயற்கை சுரண்டல்களும், ஊழல்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.! கடந்த நூற்றாண்டு வரை தீண்டாமை,தேவதாசி முறை,பெண்கள் மேலாடை அணிய தடை, உடன்கட்டை ஏறுதல் போன்று எத்தனையோ கொடுமைகளை நிகழ்த்தி வந்த நமது சமூகத்தில்
இன்றும் அதன் எச்சங்கள் மிஞ்சியுள்ளது. என்றே தோன்றுகிறது.!
அதனால் தான் சாதி,மத,கொள்கை கொலைகள் உட்பட பல்வேறு வன்முறை வெறியாட்டம் திட்டமிட்டு
நிகழ்த்தப் படுகிறது.!
ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார்
கோவில் ஆண்டி என்பதைப்போல
விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்த இந்த காலத்திலும் எளிய மக்களை மலம் சுமப்பவர்களாகவும்,பிச்சை எடுப்பவர்களாகவும், அடிமை ஊழியம் செய்பவர்களாகவும் தொடர்ந்து வைத்துக்கொண்டுள்ளது இந்த சமூகம்.!
ஒரு வேலைக்காரன் என்றால் முதலாளிக்கு காப்பி முதல் சரக்குவரை வாங்கிக் கொடுக்க
வேண்டும். முதலாளின் முன்
அமரக்கூடாது. தனக்கு கீழே பணிபுரிபவர், மனுகொடுக்க வந்தவர்கள்,யாசிப்பவர்கள்,எளியவர்கள் என்றால் எவ்வளவு நேரம்
வேண்டுமானாலும் அவர்களை காத்திருக்க வைக்கலாம். என்று; இன்றும் பலர் எண்ணிவருகிறார்கள்.! உண்மையில் இது மனித
தன்மையற்ற செயல் இந்த குணமும் பகட்டும் நம்மிடம் இன்னும் தொடர்ந்து வருவதலேயே
பணம்,அதிகாரம் இந்த இரண்டையும் கைப்பற்ற அனைவருமே முயல்கிறார்கள்.!
இந்த அடிப்படை வேரிலிருந்து பிறப்பது தான் அனைத்து சுயநலப் போக்குகளும்.! சில ஆண்டுகளுக்கு முன்பு நான் பணிபுரிந்த ஒரு கடை முதலாளி எப்பொழுதும் புகைப்பிடித்துக் கொண்டே இருப்பார். ஆனால்,எனக்கு புகைக்கும் பழக்கம் இல்லை. அதனால் இது எனக்கு
மிக வருத்தத்தை கொடுத்தது.
ஒருநாள் அவர் புகைப்பிடித்துக் கொண்டே பத்திரிகையில் வந்த மும்பையில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலைப் பற்றி விவரித்துகொண்டே வந்தார்.! நான் அவரிடம் கூறினேன் " குண்டு வைப்பவன் மட்டுமல்ல புகைப்பிடிப்பவனும் பயங்கரவாதிதான் … புகைப்பிடிக்கும் ஒவ்வெருவரும் 80% வரை புகையை வெளியவே விடுகிறார்கள். இதை சுவாசிக்கும், புகைக்காத என்னைப் போன்றவர்கள்,பெண்கள்,குழந்தைகள் மட்டுமல்லாது இயற்கையும்
கூட பெருமளவு இந்த பயங்கரவாதத்தால் பாதிக்கப்படுகிறது,
குண்டு வைப்பவன் ஒரு வகையில் உங்களை விட நல்லவன்.எப்படின்னா, அவன் உடனே
கொலை செய்துருவான்.! ஆனா,
நீங்க உங்கள சுத்தி இருக்கறவங்கள அணுஅணுவா வதைச்சி கொல்றீங்க " இப்படி நான் கூறியதும் கொஞ்சம் திகைப்பா என்னைப்பார்த்த
முதலாளி " நாளைக்கு நீ இங்க வேலைக்கு வராதனு சொன்னார் "
"நாளைக்கு என்ன நாளைக்கு,நீங்க அடுத்த சிகரெட்ட எப்ப என் பக்கத்துல வெச்சி பத்தவச்சாலும் கிளம்பிருவேன் இந்த மாசம் சம்பளம் போனாலும் பரவாயில்ல "
அப்டினு சொன்னதும் அமைதியானார். அன்று முழுவதும் என் அருகில் அவர் புகைப் பிடிக்கவில்லை. கொஞ்சம் தள்ளி நின்று பிடித்தார்.! அன்று இரவே எனது சம்பளப் பாக்கியை கொடுத்து என்னை வேலையை விட்டு
அனுப்பிவிட்டார்.!
என் மனைவியிடம் இந்த விசயத்தை கூறியதும், " சரியான லூசுங்க நீங்க, அவரு முதலாளி, நீங்கதான் அணுசரிச்சுப் போகனும்னு கடிந்து கொண்டார்.!
<பெண்களின் பலமும் பலவீனமும் இதுதான் எல்லாவற்றையும் கூடுமானவரை சகித்துகொள்வார்கள்> புகைப்பிடிப்பவர்கள், குடிகாரர்கள் எல்லாம் தனது போதையை விட தம்மை சுற்றி
உள்ள பெற்றோர்,மனைவி, குழந்தைகள், இயற்கை அனைத்தும் பெருமதிப்பிற்குறியது என்பதை உணரவேண்டும்.!
யார் மனிதனின் மேல் தோற்றத்தை கண்டு மயங்காமலும் வெறுக்காமலும் அவனின் உள்ளிருக்கும் பரமாத்வாவிற்காக அவனை மதிக்கிறானே அவனே என் பக்தன் என்கிறது பகவத்கீதை.!
உன்னில் சிறியவனுக்கு நீ எதை செய்தாயோ அதை எனக்கே செய்தாய் என்கிறது பைபிள்.!
உழைத்தவனின் வியர்வை துளிகள்
காய்வதற்குள் அவனுக்குள்ள
ஊதியத்தை வழங்கிவிடு என்கிறது நபிமொழி.!
தத்துவங்கள் எல்லாமே அழகாக இருக்கிறது.! ஆனால்,பக்தர்கள்
செய்யும் மனிதவதைகளே
மிகமிக அதிகமாக இருக்கிறது.!
எனக்கு 10 வயதாய் இருக்கும் போது நான் ஒரு வேற்று மதத்தினரின் திருமண விருந்தில் அழைப்பில்லாமல் கலந்துகொண்டேன்.!
அது கொஞ்சம் பஞ்சகாலம் ஊளை மூக்கும் கிழிஞ்ச கால்சட்டையுமாக இருந்த என்னை அனைவருக்கும் இலைப் போட்டுக் கொண்டே வந்த மலைக்கு மாலைப்போட்ட
ஒருவர் என்னை கவனித்து சட்டென்று காதைப்பிடித்து
திருகி வெளியே போக கூறினார் …
நான் வேளியேறாமல் அப்படியே அடம்பிடித்து அமர்ந்திருந்தேன், என் அருகில் இருந்த சிலர் சின்னப்பையன் பாவம் சாப்பிட்டு போகட்டும் என்றார்கள் ,அப்படியும்
அவர் காதை விடாமல் இழுத்து
வாசலை நோக்கி தரதரவென்று இழுத்து வந்துகொண்டிருந்த போது
ஒருவர் ஓடிவந்து " இவன் சாப்பிடட்டும் விடு" என்று கூற என்னை இழுத்துவந்தவர் அதை கேட்கவில்லை … உடனே எங்கிருந்துதான் அந்த இளைஞருக்கு அவ்வளவு கோபம் வந்ததோ தெரியவில்லை. வேகமாக என்னை இழுத்து வந்தவனை பிடித்துதள்ளிவிட்டுவிட்டு " இந்தப்பையன் சாப்பிட்டா இங்கு உணவு பற்றாக்குறை வந்துரும்னுதானே இப்படி செய்றீங்க? அப்ப, நாங்களும் சாப்பிடாமலே போறோம்னு சொல்லி என்னை வெளியே கூட்டி வந்தார்.! அப்பொழுதுதான் கவனித்தேன் அவர் கூடவே கல்லூரி மாணவர்கள் தோற்றத்தில் மேலும் நான்கைந்து
பேர் இருந்தனர்.! அவர்கள் என்னை வெளியே உள்ள ஒரு உணவகத்திற்கு கூட்டி வந்து ஒன்றே கால் ரூபாய் கொடுத்து ஒரு சாப்பாடு வாங்கிகொடுத்து விட்டு சென்றனர்.!
உண்மையில் நன்மை செய்வதற்கும்
பிறருக்கு உதவுவதற்கும் பணமோ பொருளோ பிரதானமல்ல.!
பிற உயிரை தன்னுயிராய் பாவிக்கும் அன்பு மட்டுமே தேவை.!
அன்பை விதைப்பவர்கள் அதை ஆயிரம் மடங்கு அறுவடை செய்வார்கள்.! ஒரு இடத்தில் இல்லாவிட்டாலும் ஒரு இடத்தில் அவர்கள் விதைத்த விதை பல நன்மைகளை செய்தே தீரும்.!
எனது நெஞ்சில் விதைக்கப்பட்ட அந்த கருணை விதை இதுவரை 1000 பேருக்கு குறையாமல் உணவளித்துள்ளது.! நான் எம்ஜிஆரோ,விஜயகாந்தோ அல்ல ஆயினும் நான் சென்னையில் பணிபுரிந்த பத்து ஆண்டுகளில்
ஒருநாள் கூட தனியாக உணவருந்தியது இல்லை.தினமும் எனது உணவை நான்கு பேரோடு பகிர்ந்தே உண்டேன்.!
எனது திருமணத்தின் போது
உறவினர், நண்பர்கள் அனைவரிடமும் எவ்வளவு அருவெறுப்பாய்
இருந்தாலும் கூட பந்தியில் இருந்து யாரையும் எழுப்பிவிடாதீர்கள் என்று அன்பு கட்டளையிட்டிருந்தேன்.!
எனது தங்கைகளின் திருமணத்தின் போது உறவினர்கள் நண்பர்களைப்போலவே சும்மா சாப்பிட வந்தவர்களையும் அதிகம் கவனித்தேன்.!
ஒரு பத்துவயது பையனின் கழுத்தைப்பிடித்து தள்ளி மிச்சம் செய்த உணவு என்றோ மலமாகி
மறைந்துவிட்டது.! ஆனால்,அதே சிறுவனுக்காக பரிந்துபேசி உணவகத்தில் உணவு வாங்கிகொடுத்த ஒரு இளைஞனின் இதயம் இன்னும் பல இதயங்களின்
பசியை தீர்த்துவருகிறது.!
அதனால் தான் கூறுகிறேன்
ஒரு மனிதனின் வாழ்வை விட
இந்த உலகத்தில் மதிப்பு மிக்க விசயம் எதுவுமில்லை.!
நம்மை சுத்தி உள்ளவர்களிடம் அன்பையும்,நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் விதைப்போம்.!
அதுமட்டுமே இந்தப்பூமி பந்தை இடையறாது சுத்த செய்து நமது தலைமுறையை வாழ்விக்க இருக்கும் ஒரேவழி.!
தொடரும் …
-ஏகப்பிரியன் DYT
100% இயற்கை மூலிகை
தயாரிப்புகளுக்கு
AUM HERBALS
Mobile & Whats app
9629368389
amyogatrust.blogspot.in
aumherbals.blogspot.in
You tube
amyogatrust yoga for all
No comments:
Post a Comment