மனதோடுபேசுகிறேன்
--ஏகப்பிரியன்---
26.நேரம் கொல்லும் செயலிகள்
"பழகுவதற்கு ஒரு செயலி
பகிர்வதற்கு ஒரு செயலி
பணத்தையும் பொருளையும் பரிமாற ஒரு செயலி
பாடுவதற்கு ஒரு செயலி
பலானதை பார்ப்பதற்கு
ஒரு செயலி
படுக்கையை பகிரவும் ஒரு
செயலி உள்ளதாம்
பாளும் அரசாங்கம் கூட
அரிசியை இறக்கும் ஒரு
செயலியை தேடுதாம்"
இப்படி மனித தேவைகள் அனைத்தையும் நிறைவேற்ற எத்தனையோ செயலிகளை இறக்கி விட்டுள்ளது
நவீன உலகம்.
எதையும் இருந்த இடத்தில் இருந்தே பெறத்துடிக்கும் சோம்பல் இது போன்ற கணிணி வசதிகளை பயன்படுத்தி ஆனந்தம் கொள்கிறது.
விளையாட,உடற்பயிற்சி செய்ய,யோகா செய்ய எதிர் பாலினத்தின் அழகை இரசிக்க அரசியல் கட்சி தொடங்க என்று எல்லா தளத்திலும் செயலி வேகமாக செயல்படுகிறது.
என்னது, செயலினா என்னவா? நல்லா கேட்டீங்க போங்க.! சரி தமிழில் சொல்றேன். செயலி என்றால் APP. நமது ஆரோக்கியத்திற்கும் நேரத்திற்கும் நாமே வைக்கும் ஆப்பு.இது என்றால் அது மிகையாகாது.
முகநூல், வாட்ஸ்அப் போன்ற சில APP கள் மனிதர்களுக்கு பல உதவிகளை செய்வது உண்மைதான்.
ஆனால்,சமீபகாலமாக நிறைய,நிறைய செயலிகள் வந்து கொண்டே உள்ளன.
ஒரு செயலியை வடிவமைத்து அதை லட்சக்கணக்கானவர்களை பயன்படுத்த வைத்து விட்டால் அதை தயாரித்தவர்களுக்கு கோடிகளில் வருமானம் குவிய வாய்ப்புள்ளது.
ஆனால், இதனால் அப்பாவி மக்களில் பலரும் கணிணி அடிமையாகவும் நோயாளிகளாகவும் மாறிவருகிறார்கள். ப்ளுவேல் போன்ற அப்களால் பலரும் தற்கொலை கூட செய்துள்ளனர்.
சைனா போன்ற ஒரு சில நாடுகளில் வாட்ஸ் அப்,பேஸ்புக் போன்ற சாதாரண செயலிகளை கூட எல்லோரும் பயன்படுத்த முடியாதபடி தடுத்து முறைப்படுத்தி உள்ளனர்.
உலக குப்பைகளை விலை கொடுத்து கொட்டச் சொல்லும் நமது இந்தியாவில் வலை இணைப்பு மட்டும் இருந்தால் போதும். எல்லா அப்புகளையும் மடியில் கட்டிக்கொள்ளலாம்.
இதெல்லாம் ஒரு பெரிய காலக் கொடுமை. மக்கள் பெரும்பாலும் அப்பாவிகள். தங்களுக்கு என்னப் பிடிக்குமோ அவை எல்லாவற்றுக்கும் ஒரு செயலி இருப்பதால் அனைவரும் அதில் இயல்பாகவே இணைந்து விடுவதோடு தங்கள் நேரத்தையும் இழந்து,உடல் நலத்திற்கும் பெரிய கெடுதலை செய்து கொள்கிறார்கள்.
சூதாட்ட அப்பில் சேருபவர்கள் இதோடு இலட்சக்கணக்கில் பணத்தையும் இழக்கிறார்கள்.
பாட்டுப்பிடிக்காத, ஏதோ ஒரு பாட்டை முணுமுணுக்காத மனிதர்களை காண்பது அபூர்வம். இப்படிப்பட்டவர்களுக்காகவே smule என்ற பெயரில் பிரபலமான ஒரு செயலி இருக்கிறது.
ஆன்ராய்டு கைப்பேசியில் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். பிறகு தேவையானால் சிறிய தொகையை கட்டினால் vip ஆக்கிவிடுவார்கள். நாட்டில் நீங்கள் ரெம்ப முக்கியமான நபராக மாறனும்னா பல சாதனைகளையோ, கோல்மால்களையோ அல்லது இரண்டையும் சேர்த்தோ பண்ணணும். ஆனா,ஸ்மூல் ஆயிரத்து நூறு கட்டினா உங்களை ஒரு வருசம் முக்கிய பிரமுகர வைக்கிறது.
ஒரு வருசம் கழிச்சிப்பார்த்தால் உங்கள் SPB குரல் கூட MR.ராதா குரலா மாறி இருக்கும் வாய்ப்புண்டு.!
ஆமாங்க,தினமும் உங்களை ஐம்பது பேர் பாட கூப்பிடுவாங்க. (அப்பில்) நீங்களும் அய்யோ சித்ரா,கூப்டுறாங்க,ஜானகி கூப்டுறாங்க, ஜேசுதாஸ் கூப்பிடுறாருன்னு தினமும் குறைந்தது பத்து பாடலாவது பாடுவீங்க. இதுல G.V.பிரகாஷ், சின்மயி எல்லாம் தனியா பாடின டிராக் இங்க போன உடனேயே உங்க தளத்தில் வரும். தேவைனா அவங்களோடவும் நீங்க பாடி உங்கள் நண்பர்களிடம் காட்டி பெருமை பட்டுக்கலாம்.
இதுபோக தமன்னா,எலியானா,நயன்தாராவை விட அழகழகான பொண்ணுங்க சிங்கப்பூர்,மலேசியா,இங்கிலாந்து போன்ற பல நாடுகளில் இருந்து வந்து உங்களை ப்ளீஸ் ஜாய்ன்னு சொல்லி பாடக் கூப்பிடுவாங்க.!
(ச்சே அவசரப்பட்டு இளமையிலேயே கல்யாணம் பண்ணிட்டமோ?)
அட, உண்மைதாங்க.! இளம் பெண்கள் மட்டும் இல்லை. சின்னஞ்சிறு பிள்ளைகள் வயதான பாட்டிகள் எல்லாம் கூட "என்னோட பாடுங்க, என்னோட பாடுங்கனு " உங்களத் துரத்துவாங்க போங்க.!
பெண்களையும் இப்படி பலரும் விரும்பி பாட கூப்பிடுங்க. அவங்க ஏற்கனவே பாடின வீடியோவை எடுத்து நாமளும் பாடினா அப்படியே இரண்டும் ஒன்றாகி நமக்கு வந்து விடும்.
ஒவ்வெரு பொண்ணுக் கூடவும் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் சேர்ந்து பாடின பாடல் எல்லாம் இங்க சாதாரணமா கிடைக்கும்.
உங்கள் இளவயது பொண்ணோ,பையனோ பல ஜோடிகளோடு சேர்ந்து மன்மத ராசா மன்மத ராசானு பாடுன வீடியோ ஒவ்வென்றையும் தனித்தனியா பார்த்தா எவ்வளவு அழகா இருக்கும் தெரியுமா.!
வெளியில பர்தா போட்டு முகத்தை மூடிட்டுப் போற பல இஸ்லாமிய பெண்கள் கூட ஸ்மூலில் கட்டிப்பிடி கட்டிப்பிடிடானு ஒரு நூறு பேரோட சேர்ந்து பாடின வீடியோ இங்கன கிடக்கு.!
என்ன ஒரு சவுகரியம்னா, அவங்க வீட்டில் உள்ளவர்களோ உறவினர்களோ யாராவது ஸ்மூலில் இருந்தால் தான் இது வெளிய தெரியும். (அந்த தாடி வாலக்கள் தான் இங்கன வரமாட்டாய்ங்களே)
இங்கனக்குள்ள இப்படி பாடிட்டு, பாடுனவன் கூட ஒடுனதுகளும் உண்டு. கணவனுக்கு பாடத் தெரியலைனு நல்லாப் பாடுனவனோட கூடுனதும் உண்டு.உள்ளே (இன்பாக்ஸ்) தனியாக பேசுதல்,வழிதல் அழுதல் எல்லாம் இங்கு சகஜம்.!
ஒரு அம்மா என்கிட்ட சொல்லுது.
"என் புருசன் தான் எனக்கு மட்டும் தான்னு, நான் உள் கதவை மூடிட்டி வேற ஒருத்தி புருசனோட பாடிட்டு இருந்தேன். அந்த நேரம் பார்த்து வீட்டுக்கு வந்த என் புருசன் கதவை வெளிப்புறமா பூட்டிவிட்டு மூன்று மணி நேரம் கழிச்சிதான் திறந்துவிட்டார்." அப்படின்னு; அப்புறம் என்னாச்சினு நான் கேட்டா " வெறென்ன,இன்னும் நாலஞ்சி பாடல் பாடிட்டு வந்து அந்த பாவத்துக்கு சோறுபோட்டு குடுத்தேன்னு சொல்லுது.!
(பொண்ணு பாக்கும் போது ஸ்மூலில் பாடுவியானு கேட்டுக்கங்கப்பா நேரத்துக்கு சோறு முக்கியம்)
ஒருத்தர் மளிகை கடையில் உட்கார்ந்துகிட்டு கைப்பேசியில் " விழியிலே உன் விழியில் மௌனமொழி பேசும் அன்னம்னு " SPB பாடலை கவுண்டமணி குரலில் பாடிகிட்டு இருக்கும் போது ஒரு பெண் கடைக்கு வந்து " அண்ணாச்சி ரெண்டு கிலோ அரிசி கொடுங்கனு பல முறை கேட்க, இவரும் பாட்டை பாதில விட்டுட்டு அரிசிய எடுத்துக் கொடுத்ததும்; "ஏம்ணாச்சி வீட்ல உலய வெச்சிட்டு அரிசி வாங்க வந்தா,கடய தொறந்து வெச்சிட்டு,பழய பாட்டப்பாடி எந்தப் பாட்டிய கவுத்துட்டு இருக்கிய? காலக்கொடும சீக்கிரம் கல்யாணம் பண்ணுவே." என்று அந்தப்பெண் சொல்லி விட்டு போன பின்,மீதி பாடலையும் பாடி வெக்கமே இல்லாம அதையும் தனது தளத்தில் வைத்துள்ளார் அந்த நண்பர்.!
எனக்குத் தெரிஞ்சி ஸ்மூலில் பாடுவதில் 90% காக்கா குரலில் தான் பாடுது.
ஒரு சிலருக்கு நல்ல குரல்வளமும், சங்கீத ஞானமும் இருந்தால் கூட தொடர்ந்து பல பாடல்களை, தொண்டைக் கட்டிக்கொண்ட பின்னும் பாடி பயமுறுத்துகிறார்கள்.
ஒரு சில பேர் மட்டும் மிகமிக சிறப்பாக பாடுகிறார்கள். அவர்களை கூர்ந்து கவனித்ததில் அவர்கள் மிக குறைவாக பாடுவதையும் ஒவ்வெரு பாடலைப் பாடுவதற்கு முன்பும் பலமுறை ஒத்திகை செய்து பாடுவதையும் உணர முடிகிறது.
நீங்கள் SMULE இல் விஐபி ஆக பணம் கட்ட வில்லை என்றால் உங்களால் தனிப்பாடல்களை பாட முடியாது என்பதோடு மற்றவர்களோடு சேர்ந்து பாடினாலும் பலப் பாடல்கள் பாதியிலேயே கட்டாகி விடும்.
இதில் vip ஆவதற்கு கிரெடிட் கார்டிலிருந்து தான் பணம் கட்ட முடியும். என்றிருப்பதால் பலரால் அதை உடனே செய்ய முடிவதில்லை.
கைப்பேசி எண்ணில் இருந்து லாக்இன் செய்தால் மூன்று நாள் இலவச விஐபி இருக்கும்.
நான் இதுவரை மூன்று கணக்குகளை ஆரம்பித்து கிட்டத்தட்ட 200 பாடல்களை இதில் பாடி இருக்கிறேன்.!
எனது பாடலை கேட்பவர்கள் பலரும் ஏன் இந்த கொலை வெறி? என்று கண்ணை உருட்டுகிறார்கள்.!
ஆனால்,என்னோடு இணைந்து பாடும் தோழிகளோ என் குரலை ஆகா, ஓகோனு புகழ்கிறார்கள்.!
இல்லைனா,மீண்டும் அவங்களோட பாட மாட்டேன்னு நினச்சி இப்படி ஒரு பொய்யை அழகாக சொல்கிறார்கள் போல.!
இந்த செயலியில் பங்கேற்பாளராக உள்ள பலரும் ஸ்மூல் கம்பெனியில் பணிபுரிபவர்கள்.
குறிப்பாக தன் முகத்தை வீடியோவில் காட்டாமல் பாடும் பலரும்,பல கணக்குகளை வைத்துக் கொண்டு இந்த செயலியை வேகப்படுத்த இயங்குகிறார்கள.
இப்பொழுது star maker போன்று பாட்டுக்கு பல புதிய செயலிகளும் வந்து கொண்டே உள்ளன.!
இவை எல்லாம் சேர்ந்து இன்னும் எவ்வளவு நேரம் கொல்லுமோ, எத்தனை மனிதர்களை பாட்டு பைத்தியங்களாகவும் செயலி பைத்தியங்களாகவும் மாற்றுமோ தெரியவில்லை.!
மனிதர்கள் தனக்கு தீங்கின்றி உதவும் செயலிகளை மட்டும் முறையாக பயன்படுத்த தெரிந்து கொள்ள வேண்டும்.!
பல செயலிகள், மனிதனை செயல்படாமல் முடக்குவதை
உணர வேண்டும்.!
www.aumherbals.com