I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: வாழ்வின் கேள்விகள்

Wednesday, 4 July 2018

வாழ்வின் கேள்விகள்

விடை கொடு எந்தன்
உயிர் கூடே
(ஒரு எழுபதின் பிராத்தனை)

பணிக்காலம் முடிந்து விட்டது. மனைவியும் போய்விட்டாள். பிள்ளைகள் அவர்களுக்கான கூட்டை காப்பதில் மும்முரமாக உள்ளனர். பேரன்,பேத்தி மோகமும் கடந்து விட்டது. பக்தி,இலக்கியம்,அரசியல்,யோகம்,மூலிகை மருத்துவம்,விஞ்ஞான அறிவு எல்லாவற்றிலும் உள்ள இன்னொருப் பக்கம் திருப்தியாக இல்லையா, அல்லது இதில் எதுவுமே நம்பகமானதாய் இல்லையா?
"என்பதை என்னால் இன்னும் விளங்க முடியவில்லை.

முன்பு  போல் இப்போதெல்லாம்  யார் மீதும் எதன் மீதும் பைத்தியமாய்  இருக்க முடிவதில்லை.

இன்பாக்ஸ் வெறுமையாய் இருக்கிறது.

யாருடனும்  பேசப் பிடிக்கவில்லை.
நெருங்கி பழகியவர்கள் தூரமாய் இருக்கிறார்கள்.

புதியவர்களுடன் ஒட்ட முடியவில்லை.நடுநிசி வரையில்  பேசுவதெல்லாம்  வழக்கொழிந்து விட்டது.

சிலாகிப்பதற்கு ஒன்றும் கிடைப்பதில்லை.

யாரேனும்  சிரித்தால் இயல்பாக  எடுத்து கொள்ள  முடிகிறது. முறைத்தாலும்  கூட அப்படியே …

எந்த திட்டங்களும், எந்த நாட்களுக்கும்  வைத்திருக்க வில்லை.
உடல் உறுப்புகள் ஒவ்வென்றும் தனது உட்சப்பட்ட ஓய்வு கோரிக்கையை நீட்டுகின்றன …

கடந்த காலத்தை நினைப்பது கசப்பாய்  இருக்கிறது.

சேர்த்து வைத்திருக்கும் நல்ல ஞாபகங்கள் அப்படியே இருக்கிறது. எதையும் அசை போடக்கூட  மனது சோம்பல் படுகிறது.

இப்பொழுதெல்லாம் நண்பர்களோ,எதிரிகளோ,நல்லதோ,கெட்டதோ யாரும் எதுவும் கனவுகளில் கூட வருவதில்லை.
டைனோசர்களும் துரத்துவதில்லை!

கடைசியாய் இரவை,
நட்சத்திரத்தை, நதியை, இயற்கையை   ரசித்தது மறந்து விட்டது.

அன்றாட கடன்களுக்கும் தூக்கத்திற்கும் நடுவே  வெறுமையாய் இருக்கிறது; வாழ்நாட்கள்.

சண்டைகள் பிடிப்பதில்லை;

டி.வி ஷோ க்கள்  பிடிக்கவில்லை;

நீ ஈ … ண்ட கட்டுரைகள் சலிக்கிறது!

வாட்ஸப்பில் செய்யும் ஒரே  காரியம் Delete all மட்டும்தான்.
எல்லாம்,எல்லாம் வந்தவை,தெரிந்தவை அல்லது அதன் உள்நோக்கம் முன்பே புரிந்தவை.

எதுவும் பிரமிப்பூட்டுவதில்லை!
எந்தத் துரோகமும் , யாருடைய வஞ்சகமும்  மனதில் நிற்கவில்லை!
பற்றுக பற்றற்றான் பாதம் என்று உரைக்கும் இடத்திலும், பணப்பற்றும் பொருள்ப் பற்றும் தொடர்ந்து நச்சரிப்பதால் அதையும் பற்றாமல் மனம் ஆகாயத்தை நோக்கி பறக்கிறது.

வீடு எனக்கு,நிலத்தில் எனக்கு பங்கு வேண்டும்.என்ற; கோரிக்கையோடு மட்டும் என்னை சந்திக்க வரும்  பிள்ளைகளோ, என் மகிழ்ச்சியை விட பிள்ளைகளின்  வாழ்வே  பிரதானம் என்ற; எனது கடந்தகால வாழ்வை நினைத்து என்னை சிரிக்க வைக்கிறார்கள்.
கொள்ளிக்கு ஒரு விலையும் இறுதிச்சடங்கு அழுகைக்கு ஒரு விலையும்,ஆண்டாண்டு படையலுக்கு ஒரு விலையும் வைத்து எல்லாவற்றையும் கொடுத்து விட்டால் இந்த வருகையும் நின்று விடும். என்றே மனது மறுபடியும் மறுபடியும் கூறுகிறது.

இவர்களால் தானா? அல்லது,யாரால் எவற்றால் நான் இப்படியாகிப் போனேன், நானே தான் காரணமோ?

விடை இல்லை, விடையே இல்லை. எங்கும் சூன்யம். எல்லாம் மாயை என்பதே உண்மையாய் இருக்க வேண்டும். இதுவரை உறவு என்றும், நட்பு என்றும் உலகம் என்றும் கொண்டப் பற்றை விடுத்து, இனியும் இனியும்,  கடவுள் என்றும், கைலாயம் என்றும், சொர்க்கம் என்றும் பற்றை மடை மாற்ற நான்  விரும்பவில்லை. இப்படியே இதே நிலையிலேயே போய் விடுகிறேன் …

இன்னும்  சில நாட்களோ,சில மணித்துளிகளோ இப்படியே இருந்து விடுகிறேன்.பூரண அமைதியில் என்னை விட்டுவிடுங்கள்.

என்னை சிரிக்க வைத்த, சிந்திக்க வைத்த, இயங்க வைத்த எல்லா ஜீவன்களுக்கும் நன்றி.

என்னை வெறுத்த, என்னால் வேதனைக்குள்ளான எல்லா ஜீவன்களிடமும் மன்னிப்பு.!

வரும் காலங்களில்  உங்களுக்கும்  என்னைப்  போன்று வெறுமை  நிலை வராமல் போக எனது இறுதி பிராத்தனைகள்.!

நன்றி -
பலராமன் அய்யா.!

www.aumherbals.com

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...