மனதோடு பேசுகிறேன்
----ஏகப்பிரியன்----
19.ஆணும் பெண்ணும்
சரிநிகர் சமானம்
எதிர் பாலினத்தாருடன் நட்பாய் பழகுவதற்கு இன்னும் கூட சில வீடுகளில் தடை போடுகிறார்கள்.
ஒத்த சிந்தனை உடைய பலரும் நட்பாக பழகுவதிலோ ஒன்றாக வெளியே சென்று வருவதிலோ எந்தத் தவறும் இல்லை. ஆனால்,இந்த வீண்ப்பேச்சு,ஊர்சுற்றல் போன்றவற்றால் அவர்களின் கற்றலோ பணியோ பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். என்பதே பெற்றோர்களின் கவலை. இங்கு ஆண் பெண் பாகுபாடு தேவையில்லை.
படிக்கும் பருவத்திலேயே தான் விளையாட்டிலும் தொலைக்காட்சிகளை பார்ப்பதிலும் சமூக ஊடகங்களில் உலவுவதிலும் ஆர்வம் வரும். எதிர்பாலின கவர்ச்சியும் கூட இந்தப் பருவத்தில் தான் அதிகமாக தலைகாட்டும்.
ஒரு பையனோ பெண்ணோ தனக்கு கிடைத்துள்ள எல்லா வசதி வாய்ப்புகளையும் பயன்படுத்த உரிமை உள்ளவர்கள். ஆனால்,அந்த வாய்ப்பும் வசதியும் தனது குறிக்கோளான கல்வியையோ அந்த கல்வியை கற்கத் தேவையான ஆரோக்கியத்தையோ கெடுப்பதாக இருந்துவிடக் கூடாது;என்பதில் பிள்ளைகள் கவனமாக இருக்க வேண்டும்.
சமூக ஊடகங்களை வார ஓய்வு நாளிலோ அல்லது தினமும் குறிப்பிட்ட அரைமணி நேரம் மட்டுமோ பயன்படுத்த உறுதி ஏற்க வேண்டும். தொலைக்காட்சி நிகழ்வுகளை ஒரு அரைமணி நேரம் பார்க்கலாம். எதிர் பாலினத்தை சேர்ந்தவர்களின் நட்பையும் வீட்டுக்குத் தெரிந்து எல்லை மீறாத அளவிற்கு கடைப்பிடிக்கலாம்.
பொதுவாக நன்றாகப் படிக்கும் பிள்ளைகள் பள்ளியிலும் கல்லூரியிலும் அடக்கமாகவே படித்து தங்கள் வாழ்விலும் வெற்றி பெறுவார்கள்.
தங்கள் குறிக்கோளை தெளிவாக வகுக்காதவர்கள், ஏதோ ஒரு காரணத்தால் சரியாக படிப்பு வராதவர்கள்,படிப்பின் மீது ஆர்வம் இல்லாதவர்கள்,படிக்க சோம்பல் படுபவர்கள்,படிக்கும் காலத்திலேயே வசதியாக வாழ எண்ணுபவர்கள்.என்று; ஒருசிலர் சேர்ந்து தங்களுக்குள் ஒரு குழுவை உருவாக்கிக் கொண்டு ஊர்ச்சுற்றல்,சமூக ஊடகங்களில் உலவுதல்,எதிர் பாலினத்தவர்களை கவர முயலுதல் போன்ற பல்வேறு இரண்டாம் கட்ட வேலையில் ஈடுபடுகிறார்கள்.
கல்லூரி காலத்தில் இதுபோன்ற மனநிலை வந்தாலும் பரவாயில்லை. இப்பொழுதெல்லாம் ஐந்தாவது வகுப்பு,ஆறாவது வகுப்பு படிக்கும் போதே ஒவ்வெரு பள்ளியிலும் இது போன்று சில படிப்பில ஜீரோ நினைப்பில ஹீரோ குழுக்கள் உள்ளது. குறிப்பாக அரசுப் பள்ளிகளில் இது போன்ற குழுக்கள் அதிகம்.
தனியார் பள்ளிகளில் நல்ல மதிப்பெண் வாங்க வைக்க வேண்டும்,அடுத்த ஆண்டும் பள்ளியில் நிறைய பிள்ளைகளை சேர வைக்க வேண்டும். என்று அவர்களே ஒரு இலக்கு வைத்து செயல்படுவதால் அதிக சண்டித்தனம் செய்யும் பிள்ளைகளை வெளியே அனுப்பி விடுவார்கள்.
ஆனால்,பல அரசுப்பள்ளி மாணவர்களுக்கு குறிக்கோள்,லட்சியம் போன்ற வார்த்தைகளுக்கான அர்த்தமே தெரியாது. ஒரிரு மக்குகள் பிறகு பலவாகப் பெருகி தங்கள் படிப்பில் தாங்களே மண் அள்ளி போட்டுக்கொள்வார்கள்.
முன்பெல்லாம் கல்லூரி முடித்தும் வேலை கிடைக்காதவர்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள் தான் ஊரில் உள்ள குட்டிச்சுவர் மத நிறுவன வளாகங்கள்,ஆத்தங்கரை நண்பர்களின் வீட்டின் வெளியே என்று கும்மாளம் போடுவார்கள்.
இப்பொழுது பள்ளியில் படித்துக்கொண்டே பலரும் இரவு 12 மணி வரை தெருவில் உட்கார்ந்து அரட்டை மேளம் வாசிக்கிறார்கள்.பல வீட்டில் உள்ளவர்கள் இந்தப் பிள்ளைகளுக்கு இருச்சக்கர வாகனத்தையும் கைப்பேசியையும் வாங்கிக் கொடுத்துள்ளனர்.
பிறகென்ன பெண் பிள்ளைகளை கவர வண்டியில் பல சாகசங்களை செய்தல், வாட்ஸ் அப்பில் தகவல்களை அனுப்புதல் என்று மிச்ச சொச்ச வேலைகளையும் காட்டி பலதும் கல்லூரிப் படிப்பை ஆரம்பிக்கும் முன்னே பிஞ்சிலே பழுத்து பருவத்திலேயே வெம்பி விடுகின்றன.!
இயல்பாகவே படிப்பு வராதவர்கள் எல்லோரும் கல்லூரிக்கு போகிறார்கள் என்று,தானும் கல்லூரிக்குப் போய் ஓரளவிற்கு படிக்கும் பிள்ளைகளையும் கெடுக்க எண்ணாமல் தனக்கு வாய்த்த பணிகளுக்கு செல்லலாம். அப்பொழுதுதான் நீங்கள் அடிப்படையான ஒரு டிகிரி கூட இல்லாமல் இந்த வர்த்தக உலகில் மகிழ்வாக வாழ்வதும் தங்களுக்குத் தேவையான பொருளாதரத்தை ஈட்டுவதும் மிக சுலபமான செயல் அல்ல என்பது உங்களுக்கே புரியும்.!
இருக்கிற துன்பம் போதாதுனு இந்த jio கம்பெனிக்காரன் ஏற்கனவே செல்லால் வீணாப்போன அத்தனை பிள்ளைகளுக்கும் இலவச நெட்வெர்க்கையும் குடுத்து கொஞ்ச நஞ்ச படிப்பு ஆர்வத்தையும் பிடிங்கிவிட்டான்.
இப்படிப்பட்ட இன்றைய சூழலில் தூய்மையான ஆண்,பெண் நட்பு அதுவும் பள்ளி,கல்லூரி பருவத்தில் எதிர்ப்பார்ப்பது ஏமாற்றமே தரும்.
பள்ளி,கல்லூரி மாணவ,மாணவிகள் தாங்களாகவே முன்வந்து ஆன்ட்ராய்டு போன்களை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். தவிர்க்கும் திறன் இல்லாத மக்கு பிள்ளைகள், தினமும் அரை மணி நேரம் மட்டுமே கைப்பேசியில் உலவுவேன், என்று உறுதி ஏற்க வேண்டும்.
தந்தையின் பின்னால் உட்கார்ந்து வாகனத்தில் போகும் போதும்,சாலையில் நடக்கும் போதும்,பேருந்திற்காய் காத்திருக்கும் போதும் இவ்வளவும் ஏன் திருமண வீட்டிலும் எளவு வீட்டிலும் கூட பல மாணவ மணிகள் தலை கவிழ்ந்து கைப்பேசியையே கையில் வைத்துக் கொண்டு, வங்கு வந்தவன் கைபோல எந்நேரமும் சொறிந்து கொண்டே உள்ளனர்.!
சில பிள்ளைகள் தங்கள் படிப்பிற்கு தேவையான பல விசயங்களை இணையத்திலிருந்து இறக்க ஆன்ட்ராய்டு போன் தேவை என்று கூறுகிறார்கள். அதற்கு சொந்தமாக வங்கை வாங்கித்தான் சொரிய வேண்டும் என்று இல்லை. வீட்டில் உள்ள பெரியவர்களின் வங்கையே வாங்கி பயன்படுத்தலாம். அல்லது இணையதள சேவை மையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.!
இந்த செல், அரிப்பு நின்றால் மட்டுமே இவர்களால் தங்கள் படிப்பில் முழு கவனத்தையும் செலுத்தி எளிதில் வெற்றி பெறுவதுடன் எவரோடும் நேரடியாக நட்பையோ அன்பையோ கூட பகிர்ந்து கொள்ள முடியும்.!
நாங்கள் எல்லாம் படிக்கும் காலத்தில், நல்ல உணவையும், நல்ல உடையையும், உணர்வையும் தியாகம் செய்துதான் படித்தோம். நீங்கள் இந்த ஆன்ட்ராய்டு செல்போன் என்ற ஒற்றைச் சனியை தியாகம் செய்து படிக்க மாட்டீர்களா தங்கங்களே?
தொடரும்
www.aumherbals.com
No comments:
Post a Comment