I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: இயற்கை முகாம் அனுபவங்கள்

Tuesday, 15 May 2018

இயற்கை முகாம் அனுபவங்கள்

மனதோடு பேசுகிறேன்

15.எல்லாம் இன்ப மயம்

" இயற்கை என்பது
இனிமையின் சேர்க்கை
இயற்கை என்பது
பன்மையின் ஒருமை
இயற்கை என்பது
உயிர்மையின் ஒளிர்கை
இயற்கை என்பது
இறைமையின் தொடுகை "

தொடர்ந்து ஐந்தாவது வருடமாக இந்த ஆண்டும் (மே 11,12,13 - 2018) நமது ஆதிமருத்துவம் மூன்று நாட்கள் இயற்கை வாழ்வியல் முகாம் ஆரல்வாய்மொழிஅன்னை ஆஸ்ரமத்தில் வைத்து சிறப்பாக நடைப்பெற்றது. வருடாந்திர முகாம் தவிர கடந்த ஆண்டும்  அன்னை ஆஸ்ரமத்தில் மேலும் ஐந்து ஒருநாள் முகாம்களும் நடைப்பெற்றுள்ளன.! அப்படி இந்த ஆண்டு நடந்தது பத்தாவது முழுநாள் வகுப்பாய் அமைந்துள்ளதோடு இந்த முகாமில் கலந்து கொண்ட பெரும்பாலானவர்கள் நமது வாட்ஸ்அப் மற்றும் முகநூல் நண்பர்கள்  என்பதும் சிறப்பான விசயம்; இன்னொரு நல்ல விசயம்  என்ன வென்றால் மனவளக்கலை பேராசிரியர்கள்,கல்லூரி முதல்வர், பள்ளி ஆசிரியைகள், அக்கு மருத்துவம் படித்தவர்கள்,இயற்கை முறையில்  குழந்தைப் பெற்ற தம்பதிகள் என்று பலரும் ஏற்கனவே  கற்பித்தலில் உள்ளவர்கள். அதுபோலவே தஞ்சாவூரில் இருந்து இரண்டுபேர் வந்திருந்தனர்; இருவரின் பெயருமே சிவக்குமார்,இருவருமே அக்குமருத்துவம் படித்தவர்கள் அதோடு இருவருக்கும்
ஒரே விதமான ஆரோக்கியக் குறைபாடும் இருந்தது; ஆச்சரியமான விசயம்தான்.!  சரியாக வெள்ளிக்கிழமை காலை ஆறு மணிக்கு பிராத்தனையுடன் ஆரம்பித்த வகுப்பு ஞாயிற்றுக்கிழமை மாலை மூன்று மணிக்கு இயற்கை பாடலுடன் இனிதே நிறைவுற்றது. நிகழ்வில் இயற்கை வாழ்வியல் வரலாறு,உடலியல் செயல்பாடு,உடல் சுத்திகரிப்பு முறைகள்,யோகா,தியானம்,முக்கிய வர்ம சிகிட்சை முறைகள்,நோய்நீக்கும்  யோகாசன நுட்பங்கள்,மண்குளியல், எண்ணெய் குளியல்,வாழையிலை குளியல்,நவீன வாழ்க்கை முறையால் ஏற்படும் நோய்களை நீக்கும் வழி மற்றும் ஒழுக்க வாழ்வின் அவசியத்தைப் பற்றியும் முழுமையான செயல் முறை வகுப்புகள்  நடந்தன. அனைவருக்கும் சத்தை சிதைக்காத, சமைக்காத இயற்கை உணவும் வழங்கப்பட்டன. அனைவரும் முழு மனதுடன் இயந்திர வாழ்வின் பிடியிலிருந்து விடுபட்டு, ஒரு மூன்று நாள் உடலுக்கும், மனதிற்கும் சில புதிய விசயங்களை அறிமுகப்படுத்தியதோடு,நகர எல்லையிலிருந்து ஒதுங்கி முருகன் கோவில் மலை அடிவாரத்தில் ஆறு ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும், அன்னை ஆஸ்ரமத்தின் இயற்கை சூழலில் தங்கள் ஆன்மாவின் இருப்பை, உணர்ந்து கொள்ளும் வாய்ப்பையும் பெற்றிருப்பார்கள் என்பது நிச்சயம். வாழையிலை குளியல், பம்பு செட்டில் இயற்கை குளியல் போன்றவற்றையும் எளிய யோகா நூட்பங்களையும் அனைவரும் ஆர்வமாக கற்றுக்கொண்டாலும் தொடர்ந்து நானே பல தலைப்புகளில், இடைவெளி  கொடுக்காமல்  வகுப்பெடுத்தது சிலருக்கு அயர்வைத் தந்ததையும் என்னால் உணர முடிந்தது. எண்ணெய் குளியல்,மண் குளியல்,இயற்கை உணவு என்று உடலும் மனமும் இயல்பாகவே குளிர்ந்து கண்கள் சொருகும் நேரத்தில் ஒருவர் நாற்காலியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்க " கீழே பாயில் அமர்ந்து இதை கவனமாக கேளுங்கள் அல்லது முக்கியமான விசயம் தெரியாமல் போய்விடும் " என்று; கூறுவது - ' தூங்கினால் கட்டையால் அடி ' என்று; போக்கிரி படத்தில் பிரகாஷ் ராஜை வதைத்தது போலாகி விட்டதோ?  என்று எனக்கொரு எண்ணம்.! இந்த அயற்வைப் போக்க அடுத்த நாளே, குடும்பத்தோடு முகாமில் கலந்துகொள்ள வந்திருந்த  வழக்கறிஞர் திருப்பதி அய்யாவை மனது பற்றி வகுப்பெடுக்கக் கூறினேன். அவரும் யாரும் தூங்காமல் இருக்கட்டும் என்று முதலில் அனைவரையும் கைத்தட்டல் பயிற்சி செய்ய சொல்லிவிட்டு பிறகு; அமர்ந்திருந்த ஒவ்வெருவரிடமும் "மனசுனா  என்ன? " அப்படின்னு கேள்வியை கேட்க சிலர் விபரமானவர்கள் ' கருத்து இல்லை ' என்று ஒதுங்கி விட பலரும் "மனசுனா மந்திரத்தில் மாங்காய் விழவைப்பது, மனசுனா சிந்திப்பது, மனசுனா பிரியாணி  சாப்பிட்டவுடன் வரும் நிறைவு " என்று பலவாறு பதில் சொல்ல ஒரு சிலர் மட்டும் எண்ணங்களின் தொகுப்பு,கடந்தகால பதிவுகளின் தொடர்ச்சி என்று கிட்டத்தட்ட சரியான விடையை கூறினார்கள். இதை தொடர்ந்து  எனக்கும் ஒரு சந்தேகம் வந்தது எண்ணம் என்பது வினைச்சொல் மனம் என்பது பெயர்ச்சொல். "எண்ணத்தை சேகரித்து வைக்கும் கருவியே மனது " என்று; மனதுப்பற்றி பதஞ்சலி யோகச்சூத்திரத்தில் படித்த விசயம் நினைவிற்கு வந்து குழப்பியது. நல்ல வேளை என்னிடம் யாரும் கேள்வி கேட்கலை.! இதுபோன்று கற்க வந்தவர்களிடமே கேள்வி கேட்டு  பலருக்கும் ஒன்றும் தெரியாது என்று, தெரிந்த பின்  விடை கூறுவது ஒருவித தற் பெருமையாய் இருக்குமோ?

" ஏங்க,இருக்குற கொடுமை போதாதுனு நீங்க வேறயா? "   அப்படினு; ஒருத்தரும் கேட்கல. திருப்பதி அய்யா,உண்மையிலேயே ஒரு தகவல் களஞ்சியம் தான்.! இயற்கை மருத்துவம் படிக்கும் என் மகனிடம் "லைலத்துல் கத்ர் இரவில் ஏன் குரான் இறக்கப்பட்டது? என்று; ஒரு கேள்வியை அவர் கேட்க. "இந்த துன்பத்திற்குதான் நான் மதரஸா போறதையே பாதியில நிறுத்தினேன்." அப்டின்னு; அவனால சொல்ல முடியலை. ஆனாலும் பல் வேறு ஆரோக்கிய தகவல்கள்,சித்தர்கள் கூறிய இரகசியங்கள் என்று திருப்பதி அய்யா, பலருக்கும் பல நுட்பங்களை  கற்பித்துக் கொடுத்ததோடு என் மகனிடமும்  டான் தெரபிஸ்ட் ஒருவரிடமும் தனக்குத் தேவையான சில தகவல்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டது அவரின் தீராத தேடலை வெளிப்படுத்தியது.இவருக்கு அப்படியே மறுவடிவாக சென்னையில் இருந்து வந்திருந்த  இரவிச்சந்திரன் அய்யா,மிக தீவிர உள்முக தேடலில் ஆட்பட்டிருந்தார்.
சென்ற ஆண்டே இந்த முகாமில் குடும்பத்தோடு கலந்து கொள்ள 4000 ரூபாய் முன்பணம் செலுத்திய அய்யா அவர்கள், அது முடியாமல் போக இந்த ஆண்டு மறக்காமல் நமது முகாமில்  கலந்து கொண்டு சிறப்பித்தது அனைவருக்கும் பெருமை.
காவல்துறை உதவி ஆய்வாளர் பூபதி அவர்கள், பயிற்சியில் கலந்து சிறப்பித்ததோடு, பஞ்ச சுத்தி முறை தலைப்பில் திருமூலர் பாடல்களையும் அருணகிரிநாதரின் அத்தித்திரு பாடலையும் முழுமையாக பாடி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். மிகுந்த பணிச்சுமை உள்ள வேலையில் இருந்தாலும் கூட, மனவளக்கலை பேராசிரியராகவும் உயர்ந்து,தனது ஆன்ம விடுதலைக்கான முயற்சியிலும்  ஈடுபட்டுள்ள பூபதி அய்யாவின் முயற்சி மெய்சிலிர்க்க வைத்துவிட்டது.
இவருக்குப் போட்டியாக நானும் " அய்யா அவர்கள்  திருமூலர்,அருணகிரிநாதர் பாடல்களை தான் பாடினார்கள். அடியேன், நானே இயற்றிய இயற்கைப் பாடல்களை அதுவும் சிரசாசன நிலையில் நின்றுகொண்டே பாடுகிறேன் "என்று கூறி  இயற்கையைப்  பற்றிய இரண்டு பாடல்களை தலைகீழாக நின்று கொண்டே பாடிக்காட்டினேன்.  இந்த முகாமிற்கு முதன் முதலில் முன்பதிவு செய்தவர்கள் பெங்களூரைச் சேர்ந்த திரு ராமரும் அவரது மனைவி திருமதி காயத்திரி ராமரும் தான். இவர்கள் முன்பதிவு செய்த வேளையே என்னமோ அடுத்தடுத்து திரு சிவகுமார் - திருமதி பவுன் தம்பதிகள்,திரு சிவகுமார் - திருமதி உமாராணி தம்பதியினர், வழக்கறிஞர் திருப்பதி தம்பதியினர் என்று பலரும் தம்பதிகளாகவே முன்பதிவு செய்ய நிறைவு நேரத்தில் பதிவு செய்கிறோம். என்று; காத்திருந்த பல குடும்பத்தினருக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போனது. (தங்கும் அறை பற்றாக்குறை) இராமர் தம்பதிகள் முதலிலேயே முன்பதிவு செய்தது போல் ஒரு நாள் முன்னதாக  முதலிலேயே ஆஸ்ரமத்திற்கு வந்து விட்டது அவர்களின் தெளிவான திட்டமிடல். திரு இராமர் தனது பிள்ளைகளையும் அழைத்து வந்திருந்தார். இவரின்  இரண்டாவது மகன் மித்ரதேவ்  இயற்கை முறையில் வீட்டிலேயே பிறந்துள்ளார். சுகப்பிரசவம் நடைபெற அக்கு ஹீலர்கள் கொடுத்த ஆலோசனைகளையும் தனது இயற்கை பிரசவ அனுபவங்களையும்  அனைவரிடம் பகிர்ந்து வியப்படைய வைத்தார்; திருமதி காயத்ரி இராமர். அதோடு இவர் பத்து நாள் விபாசனா வகுப்பிற்கு சென்று வந்தேன். போன்ற பல்வேறு தகவல்களை சளைக்காமல் பிறரிடம் பகிர்ந்து கொண்டதையும் மகாபாரத யுத்தம் தமிழ்நாட்டில் தான் நடந்தது. போன்ற அறிய ஆய்வு செய்திகளையும்  கூறியது எனக்கே சற்று தெம்பாகத்தான் இருந்தது. பின்ன,காய்கறி,அவல்,பழங்களை மட்டும் அரை வயிறு சாப்பிட்டுக் கொண்டு  மூன்றாவது நாள் வரை  இவ்வளவு  உற்சாகமாக உரையாற்ற முடிந்தால் அடுத்த முகாமில்  பழங்களை இன்னும் பாதியாக குறைக்கலாமே.!
கல்லூரி முதல்வர் செல்வராஜ் அய்யாவிற்கு சிறிய வயிற்றுவலியும் ஒரு சிலருக்கு சிறிய உடல் நடுக்கமும் தலைவலியும்  தென்பட்டது. துளசி மாத்திரை இரண்டு சாப்பிட்ட உடன் இது சரியாகிவிட்டது.
எனது வகுப்பெடுக்கும் திறன் இந்த முகாமில் சற்று மந்தமாக இருந்ததை என்னால் உணர முடிந்தது. வழக்கமாக உள்ள இடைவிடாத  வகுப்புகள்,முகாமிற்கான ஆயத்த வேலைகளை செய்தல் போன்றவற்றால் உடல் சிறிது சிரமப்பட்டுவிட்டது போல.! அதனால் சிரமப் பரிகார  நுட்பங்கள் பயிற்சி நடக்கும் போதே பலரும் பயிற்சி திட்டத்தில் உள்ள 
எளிய மூலிகை மருந்து தயாரிப்பு முறைகள், பிராணசிகிட்சை,கலந்துரையாடல்,நிறைவு பிராத்தனை போன்றவற்றை சிரமமாக எண்ணி  விட்டுவிட்டு, அனைவரும் சொல்லி வைத்தாற் போல் மாலை மூன்று மணிக்கே; "விட்டுவிடுங்கள் மாஸ்டர் பேருந்தைப் பிடிக்க வேண்டும்,இரயிலைப் பிடிக்க வேண்டும் " என்று கூறி பலரும் கிளம்பிவிட, பொன்னமராவதியை சேர்ந்த கணேசனும் அவரது மகன் ராஜீவ்நேத்ரனும் மட்டும் நிறைவுப் பகுதிவரை இருந்தனர். ராஜீவ்நேத்ரன் தான் நமது இயற்கை வாழ்வியல் முகாமில் கலந்துகொண்டு முழுமையாக பயிற்சி பெற்ற மிக இளைய வயது மாணவர்.! எனது மகன் இஜாஸ் கடந்த ஆண்டை விட சிறப்பாக உடலியல் செயல்பாடு வகுப்பை நடத்தினார்.எனது மனைவி, எல்லாமாய்  இருந்து முகாமிற்கான இயற்கை உணவு பணிகளையும் பயிற்சிக்கு வந்திருந்த பெண்களுக்கு தேவையான உதவிகளையும்  மிக சிறப்பாக செய்திருந்தார்கள்.!  இயற்கை முகாமிற்கு வந்த வர்களுக்கு " ஆதிமருத்துவம் " நூலை இலவசமாக வழங்கி இருக்கலாம்; என்று தற்போது தோன்றுகிறது. ஏனெனில், ஆறாண்டுகள் ஒரு குருவிடம் நேரடியாக கற்றும் விளங்காத அறிவை ஒரு ஏடு கணத்தில் விளக்கிவிடும்; நூறாண்டுகள் ஏடுகளை கற்று தேர்ந்தாலும் விளங்காத சூட்சுமத்தை ஒரு குரு நொடியில் கற்பித்து விடுவார். என்று; எனது குருநாதர்களில் ஒருவரான கிருஷ்ணமூர்த்தி அய்யா  கூறுவார்கள். ஆதிமருத்துவம் நூலை முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் வழங்க வேண்டியது நமது கடமை.! அதனால்,பத்தாவது முகாமில் கலந்து கொண்டும் நூலை  வாங்காமல் சென்ற நட்பாளர்கள் விபரம் தெரிவித்தால் நூலை எனது செலவிலேயே அனுப்பி வைக்கிறேன்.! நமது அம் யோகா அறக்கட்டளையும் அன்னை ஆஸ்ரமமும் இணைந்து நடத்திய இந்த இயற்கை முகாமில், இயற்கையின் ஆற்றலின் ஒரு துளியை உங்களோடு பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த இறைமையின் கருணையையும் எனது குருமார்களின் ஆசிகளையும் நினைந்து உருகுவதோடு இதுவரை நடந்த அத்தனை நிகழ்விலும் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து நல் ஆன்மாக்களுக்கும் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.!
இயற்கையோடு இயைந்து இன்ப்புற்று வாழ்வோம்.!

வாழ்க வளமுடன்.!
நலம் பெருகட்டும் …

-ஏகப்பிரியன்
மு.இஸ்மாயில்
DYT

🌿100% இயற்கை மூலிகை தயாரிப்புகளுக்கு
AUM HERBALS
M.W 9629368389
www.aumherbals.com

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...