மனதோடு பேசுகிறேன்
---ஏகப்பிரியன்---
17.நானாகவே
கடந்து செல்ல விருப்பம்
நீங்கள் குரு என்கிறான் ஒருவன், நீங்கள் மிருகம் என்கிறான் இன்னொருவன், நீங்கள் குழந்தையைப் போல என்கிறான் வெறொருவன்,நீங்கள் ஒரு சிடுமூஞ்சியான மோசடிப் பேர்வழி என்கிறான்; மற்றொருவன்.
எவனெவனோ, எதற்காகவோ, வார்த்து வைத்த பாண்டத்தில் நான்,என் ஆன்மாவை நிறுத்தி," இவன் இப்படித்தான் " என்று;நிறுவ எனக்கு ஆசையும் இல்லை; தேவையும் இல்லை.
நான் கிழிந்த கால்ச் சட்டையோடு சிறுவனாய் உலவிய போது, வருந்தவில்லை. கழுத்தில் டை கட்டி நாயைப்போல பணத்தின் பின்னே ஓடிய போதும் வெக்கித்தது இல்லை;
ஒருநாள் சுகத்திற்காய் பெண்ணின் கால்களில் நழுவிய போதும்; ஒரு வேளை சோற்றுக்காய் திருடனை தோளில் சுமந்த போதும் நான் துக்கம் கொண்டதில்லை.
ஆகா என்றவுடன் மிதந்ததும் இல்லை,போடா என்ற உடன் துவண்டதும் இல்லை. ஆனால்,எல்லாவற்றினுள்ளும் நானே சுயமாய் ஊடுருவி இருப்பேன். எல்லா நிலையிலும் என்னில் விழிப்புணர்வு உண்டு. அன்பு,அறிவு,ஆற்றல், ஆசை,அமைதி என்று எல்லாவற்றிலும் எனக்கு அனுபவமும் உண்டு.
காலையில் கையேந்தி பவனிலும், இரவில் நட்சத்திர ஓட்டலிலும் உண்டுவிட்டு, மறுநாள் மதியமே பட்டினியாய் கிடக்கும் வாழ்க்கையும் எனக்குத் தெரியும். பத்துநாள், உணவே உண்ணாத விரதமும் என்னால் முடியும்.
தாயை உதாசினப்படுத்தி உள்ளேன்,தங்கையை உதைத்து விரட்டியும் உள்ளேன். ஊரிருக்கும் நோய்க்கெல்லாம் என் உடலில் தஞ்சம் தந்து சுகமாக வாழவும் வைத்தேன்.கற்றரிந்த குருமாரின் அருளான, ஆசியாலே ஊரார் பிணிநீக்கி உயர்வான பேறும் பெற்றேன்.
சில கல்துண்டை நொடியில் சிற்பமாக்கி நான் வித்தையும் செய்தேன். சில சிற்பத்தை படிக்கட்டாய் நான் மிதிக்கவும் செய்தேன்.ஊர்த் தேங்காய் பிள்ளையாருக்கு நான் உடைத்ததும் உண்டு. என் ஊன் உருக்கி பிறர் வாழ நான் கொடுத்ததும் உண்டு.
என் குலம் காக்க பிற வாசல் முன் நின்றதுமுண்டு,என் மனம் போல எதிலும் எனக்கு நிறைவே உண்டு,அதை பிறர் வாழ உரைக்கும் அறிவும் உண்டு.
நான் கற்ற கலை நூறுமல்ல, அதற்கும் மேலே,
அதைப்பெற்றுக் கொண்டால் உனது வானம் கையின் மேலே.!
அதனால் … என்னை யாரும் தேவனின் அச்சியிலோ, குரங்கின் அச்சியிலோ பொருந்த சொல்ல வேண்டாம். " நான் ஏதுமற்ற ஆன்மாவை நோக்கி பறந்து செல்கிறேன் … இப்புவியில் நான் மென்ற தானியத்தையும் நானென்ற அகந்தையையும் உதறிச் செல்கிறேன் …
தொடரும் …
www.aumherbals.com
No comments:
Post a Comment