மனதோடு பேசுகிறேன்
2.கணிணியை சுமக்கும் கழுதைகள்
இன்றைய பிள்ளைகள் கணிணியிலும் கைப்பேசியிலும் இணையத்திலும் உள்ள அத்தனை விசயங்களையும் மிக சரளமாக செய்கிறார்கள்.குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவதற்கு முன்பெல்லாம் காக்காவைப்பாரு,குருவியைப்பாரு என்று கூறுவார்கள். இப்பொழுதெல்லாம் குழந்தைகளின் கையில் கைப்பேசியை கொடுத்தால் போதும். சமத்தாக சாப்பிட்டு விடுகிறார்கள்.அதுபோலவே ஏதோ ஒரு குழந்தைகள் வேடிக்கை தொலைக்காட்சியை போட்டு விட்டு, தாய் தனது வீட்டு வேலைகளைகளை எல்லாம் எளிதாக செய்து விடமுடிகிறது. கற்பதிலும், நுண்ணறிவுத்திறனிலும் இன்றைய பிள்ளைகளும் மாணவர்களும் பழைய காலத்தை விட நான்கு மடங்கு அதிக திறனுடையவர்களாக இருக்கிறார்கள்.ஆனால், உறவுகளுக்குள்ளும் சமூகத்தோடும் இயைந்து வாழ தேவையான அடிப்படை ஞானத்தில் சூன்யமாக இருக்கிறார்கள். உலக கல்வி முறை என்று கூறி ஆங்கிலவழி கல்வி கற்பதாலும்,மனப்பாடம் செய்து எழுதினால் போதும் எதிலும் முதன்மை பெறலாம் என்ற சூழ்நிலை இருப்பதாலுமே இன்றைய பிள்ளைகள் இப்படி இருக்கிறார்கள்.நமது வீட்டில் உள்ள பிள்ளைகளிடம் நமது தோட்டத்திலிருந்து சில காய்கறிகளையும் கீரையையும் பறித்துக்கொடுத்து தெருவில் போய் சரியான விலைக்கு விற்று வா என்று கூறினால் தயங்குவார்கள்.ஆனால்,தனது கணக்கு பாடத்தில் லட்சங்களிலும் கோடிகளிலும் வர்த்தகம் புரிவார்கள்.கணிணியில் உட்கார்ந்து கொண்டு உலக தீயவர்களை எல்லாம் சுட்டு விளையாடுவார்கள். ஆனால்,தனது பணத்தை திருடும் அரசியல் பக்கிரியை விட்டு விடுவார்கள்.மணிக்கணக்கில் ஆசிரியர் சொல்வதை கேட்காமல் விளையாடுவார்கள். ஆனால், ஆசிரியர் "உனது பெற்றோரை அழைத்து வா" என்று கூறினால் பயந்து போய் கிணற்றில் குதித்து விடுவார்கள்.
நான்கு கிலோ ஐந்து கிலோ எடையில் இருக்கும் ஆங்கில புத்தகங்களை நாளெல்லாம் படித்து பரீட்சை எழுதி பல்கலை தேர்வில் முதலிடம் பெறுவார்கள். ஆனால், ஆங்கிலத்தில் பத்து நிமிடம் தவறின்றி பேச தடுமாறுகிறார்கள்.
தமிழக கல்வியில் முதலில் மனித உறவுகள்,இயற்கையின் செயல்பாடு, தமிழ் சமூக வரலாறு போன்றவை அனைவருக்கும் அடிப்படையாக கற்பிக்க வேண்டும்.பிறகு தேவையெனில் மருத்துவம்,தொழில் நுட்பம்,நிர்வாகம்,ஆராய்ச்சி படிப்பு போன்றவற்றை கற்பிக்கலாம். இப்படி கற்பிக்கும் ஒரு சூழல் வந்தால், நிச்சயமாக ஆங்கில வழியில் 15 ஆண்டுகள் படித்து பட்டம் பெற்ற பின், ஆங்கிலம் சரளமாக பேச இரண்டு மாதம் ஸ்போக்கன் இங்கிலீஸ் வகுப்பிற்கு செல்ல வேண்டிய அவசியம் வராது.
நான் படிக்கும் காலத்தில் எங்கள் தமிழ் ஆசிரியர் நிறைய கதைகளை கூறுவார். கற்பதை கிளி போல் கற்க கூடாது,பேராசை படக்கூடாது,பெரியவர்களை உதாசீனப்படுத்தக்கூடாது, நன்மை என்று முன்னோர் வகுத்த உண்மையை கடைப்பிடிக்க வேண்டும்,எந்த இக்கட்டான சூழலிலும் மனம் தளராமல் செயல் பட வேண்டும். என்று; எத்தனையோ நீதிகளை அந்த கதைகள் தாங்கி வருவதோடு மட்டுமல்லாமல், வாழ்வின் அர்த்தத்தையும், ஒரு செயல் இப்படி நடந்தால் அதன் அதிகப்பட்ச முடிவு இப்படித்தான் இருக்கும் என்றும், ஒரு தவறு செய்தால் அதற்கான அதிகப்பட்ச தண்டனை இதுவாய் தான் இருக்கும் என்றும் அந்த கதைகள் பல உண்மைகளை உணர்த்தும். பள்ளியில் கூறப்படும் நீதி கதைகள் தமிழ் இலக்கியம், புராணம்,இந்திய இதிகாசம் என்று எதாவது ஒன்றை சார்ந்திருக்கும். இந்த முறையில் கல்வி கற்ற என்னைப் போன்றவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில், துன்பப் பந்தை எப்படி சுழற்றிப் போட்டாலும் நாங்கள் அதை அடித்து துவம்சம் செய்வோம். அனிதாக்களைப்போலவோ,சமீபத்தில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட பள்ளி பிள்ளைகளைப் போலவோ நாங்கள் என்றும், எதையும் பார்த்து அச்சப்பட்டு வாழ்வை பறிக்க எண்ணியதே இல்லை.
"பாதகம் செய்வோரை கண்டால் நீ பயங் கொள்ளலாகாது பாப்பா மோதி மிதித்து விடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா" மோதி பார்த்தும் முடியவில்லை, பாதகம் செய்தவர் மோடி என்பதால் வேறு வழியுமில்லை. என்று;நாங்கள் எங்களையே நெரித்துக்கொல்லமாட்டோம். ஏனெனில், பல வெளிநாடுகளில் இந்தியாவை விட சிறப்பான மருத்துவக்கல்வி நியாயமான கட்டணத்தில் கிடைப்பது எங்களுக்குத் தெரியும்.அதுவும் முடியாவிட்டாலும் கூட ஆங்கில மருத்துவம் படிக்காமலே எப்படி மருத்துவர் ஆவது? என்பதும் எங்களுக்குத் தெரியும்.அனிதாவைப் போல நாங்கள் அவசரப்பட மாட்டோம். ஆசிரியர் பெற்றோரை கூப்பிட சொன்னால் கூட்டி வருவோம், பெற்றோர் அடித்தாலோ,திட்டினாலோ தாங்கிக் கொள்வோம், பள்ளியை விட்டு நீக்கினாலும் வேறு பள்ளிக்கு போவோம். ஆனால்,கிணற்றில் குதித்து உயிர் துறக்க மாட்டோம்.
ஏனெனில், "இனியவற்றைப் பார்த்து அதிகம் மகிழ்வதும் இல்லை அப்படி இல்லாததைப் பார்த்து அதிகம் துவள்வதும் இல்லை"என்பதே எங்களுக்கு பாலப்பாடம்.!
" துன்பம் வரும்போது சிரிங்க "என்பதே எங்களின் வேதவாக்கு.!
இன்னும் பேசுவேன் …
-ஏகப்பிரியன் DYT
aumherbals.blogspot.com
No comments:
Post a Comment