I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: புயல் கொண்ட குமரிநாடு

Monday, 4 December 2017

புயல் கொண்ட குமரிநாடு

ஒகிக்கு பின்னே அமைதி

குமரியில் 2017 நவம்பர் 30,டிசம்பர் 1,2 தேதிகளில் ஏற்பட்ட புயல் அனுபவம்

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் எனது குடும்பமும் ஒன்று. கடந்த புதன் இரவு எட்டு மணிக்கெல்லாம் மின்சாரம் இரண்டு மூன்று தடவை போக்கு காட்டிவிட்டு பிறகு ஒரேயடியாக நின்றுவிட்டது. இரவெல்லாம் காற்றுடன் கூடிய பலத்த மழை. வழக்கமாக நானும் எனது மூத்த மகனும் அதிகாலையில் மூன்றே கால் மணிக்கே எழுந்து விடுவோம். எங்கள் ஊரான திட்டுவிளையில் இருந்து அவன் படிக்கும் குலசேகரம் இயற்கை மருத்துவக்கல்லூரிக்கு செல்லும் முதல் பேருந்து நாலே கால் மணிக்கு வரும். எனக்கு ஐந்து மணிக்கு நாகர்கோவிலில் யோகா வகுப்பு உள்ளது. புதன் இரவே எனக்கு அடுத்த நாள் வகுப்பு இல்லை என்ற தகவல் தெரிந்ததால், எனது மகனிடமும் நாளைக்கு புயல் மழை உள்ளதாக கூறுவதால் நீயும் கல்லூரிக்கு செல்ல வேண்டாம். என்று கூறிவிட்டு அனைவரும்  படுத்து விட்டோம். இரவெல்லாம் பெய்த மழையில் எங்கள்  தோட்டப்பகுதியில் நிறைந்திருந்த மழை நீரில்  ஆனந்தமாக குளிப்பதை முகநூலில் நேரடியாக ஒளிபரப்பி மகிழ்ந்து விட்டு … பிறகு பதிவு சரியாக இல்லை என்று அந்த பதிவை அழித்து கொண்டிருந்த இருந்த நேரம், மரத்தை சாய்க்கும் வேகத்தில் வந்த ஒரு நெடிய காற்று எங்கள் வீட்டிற்கான இரண்டாவது வாசலோடு சேர்ந்த சுவற்றை நொடியில் சாய்த்து சுக்கலாக்கி விட்டது. நாங்கள் அதிர்ந்து போனோம் சற்று முன் அதற்கு பக்கத்தில் நின்றுதான் குளித்தேன். நல்ல வேளை. உடனே வெளியில் வந்து  முன் பகுதியை பார்த்தேன். ஏனெனில், முன் பகுதி ஓட்டு வீடு கட்டிடம் ஆடுகிறதானு பார்த்துக்கொண்டிருந்தேன். தொடர்ந்து காற்று பலமாக அடித்து அக்கம் பக்கம் பல வீடுகளின் கூரையையும் ஒரு வேப்பரத்தையும் இரண்டு மூன்று மின் கம்பங்களையும் சாய்த்து விட்டு திசை மாறிப்போனது.  அக்கம் பக்கத்து வீடுகள் ஒவ்வென்றிலும் ஏதோ ஒரு வகையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி சென்றதை தொடர்ந்து அனைவரும் கொட்டும் மழையிலும் வெளியில் வந்து நின்று கொண்டிருந்தனர். எங்கள் வீட்டின் இடிந்த ஒரு பகுதியின் மேலே  வீட்டிற்கு முன்னால் நிற்கும் வேப்ப மரத்தின் கிளை வேறு நீண்டிருந்ததால் அதுவும் முறிந்து விழுந்து விடக்கூடாதேனு நான் மரத்தை கவனித்துக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் பக்கத்து வீட்டில் உள்ள ஒரு பையன் ஓடி வந்து உங்கள் வீட்டில் இடிந்த சுவர் இடிபாடுகளை நீக்க உதவி செய்யட்டுமா? என்று கேட்டார். தற்போது ஒன்றும் செய்ய வேண்டாம், மற்ற சுவர்களும் விரிசல் விழுந்துள்ளன. அதனால் மழை நின்ற பிறகு பார்த்துக்கொள்ளலாம், நாங்கள் வீட்டின் மற்றொரு பகுதியில் இருந்து கொள்கிறோம். என்று கூறி ஒரு பத்து நிமிடம் கூட ஆகவில்லை. அதற்குள் ஏற்கனவே இடிந்து விழுந்த சுவரின் மேலே,விழாமல் ஒட்டி இருந்த மற்றொரு பகுதி சுவரும் பட படனு விழுந்து விட்டது. நல்ல வேளையாக உடனடியாக சுவரை அப்புறப்படுத்த முயலாததால் சுவர் யாரின் தலையிலும் விழாமல் தப்பினோம். பொதுவாகவே  இடிபாடுகளில் நேரடியாக அடி பட்டவர்களை விட இது போன்று அப்புறப்படுத்தும் வேலையிலும் வேடிக்கைப்பார்க்கும் வேளையிலும் மரம் விழுந்து இறந்தவர்கள் அதிகம். நமது மக்களும் அரசும் சற்று வினோத மானவர்கள். நவம்பர் 30 வியழன்று பள்ளி,கல்லூரி விடுமுறை என்று குமரி மாவட்ட ஆட்சியர் அன்றைக்கு காலையில் தான் அறிவிக்கிறார். இது மக்களுக்கு சென்று சேர்வதற்குள் அடாத மழையிலும் பல பள்ளி,கல்லூரி வாகனங்கள் மாணவர்களை ஏற்றிக்கொண்டு  பள்ளி,கல்லூரியில் சேர்த்து அன்று பல இடங்களில் படிப்பும் இருந்தது. வியாழன் முதலே பல பகுதிகளில் பேருந்து இயங்கவில்லை. ஆனால்,எனது மகன் படிக்கும் குலசேகரம் இராமகிருஷ்ணா இயற்கை மருத்துவக்கல்லூரி வழக்கம் போல் புயல் மழை பாதிப்பிருந்த நவம்பர் 30, டிசம்பர் 1,2 -வியாழன்,வெள்ளி,சனி மூன்று நாளும் வழக்கம் போல் இயங்கி உள்ளன. இப்ப எனது மகனைப்போல பேருந்து கிடைக்காமல் வகுப்பிற்கு போகாதவர்களை வராதவர்களாக பதிவு செய்வார்கள்.
இவ்வளவு தான் மாவட்ட ஆட்சியரின் உத்தரவிற்கு பள்ளி,கல்லூரி நிர்வாகம் கொடுக்கும் மரியாதை.  இது போன்று அரசு உத்தரவை மீறி செயல்பட்ட பள்ளி,கல்லூரிகளின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். படித்த அறிவாளிகளான  இவர்களே இப்படி என்றால், பாமர மீனவர்களை பற்றி சொல்லவா வேண்டும். புதன் அன்றுதான் அதிகாரப்பூர்வ புயல் எச்சரிக்கையை அரசு விட்டிருந்தது. அது வரை வானிலை மைய்யம் சொன்னதை வழக்கம் போலவே மீனவர்கள் ஒரு பொருட்டாக மதிக்காமல்,அல்லது தெரியாமல் கடலுக்கு சென்று விட்டனர். இன்னும் ஆயிரத்திற்கு மேற்பட்ட குமரி மீனவர்களை காணவில்லை என்று கூறி தேடி வருகிறார்கள். இது தான் அமெரிக்காவும் கற்க வேண்டிய பேரிடர் மீட்பு போல. ஒகியில் குமரி மாவட்டத்தில் மட்டும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களும், கிட்டத்தட்ட ஐயாயிரம் மின் கம்பங்களும் பல ஏக்கர் விவசாய நிலங்களும் வாழை,தென்னை,இரப்பர் மரங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர்.
எல்லா பேரிடர்களையும் போலவே இந்த முறையும் ஆளும் கட்சி,எதிர் கட்சி,மத்திய அரசின் பிரதிநிதிகள் என்று எல்லோரும் வளமை போலவே கூண்டில் உள்ள மிருகங்களைப் பார்ப்பது போல பாதிக்கப்பட்ட மக்களைப் பார்த்து சிறிய ரொட்டியும் பிஸ்கட்டும் வழங்கிவிட்டு பெரிய பெரிய பேட்டிகளையும் கொடுத்து விட்டு சென்று விட்டனர்.
சுசீந்திரம்,வடிவீஸ்வரம்,திருப்பதிசாரம் போன்ற ஊர்களில் உள்ள பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களை நேற்றிரவே [டிசம்பர் 3, ஞாயிறு] முகாமை காலி செய்து உறவினர்கள் வீட்டிற்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் கட்டாயப்படுத்தி வந்த நிலையில் திமுகவினர் தலையிட்டு மக்களை வெளியேற்ற எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சரிதானே, தங்கள் வாழ்வாதாரத்தை  இழந்து நிர்க்கதியாய் நின்றாலும் கூட அரசால், மாவட்ட நிர்வாகத்தால் மூன்று நாட்களுக்கு மேல் எதுவும் செய்ய முடியாது என்று கூறுவது மிகக் கொடுமையான செயல்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல பகுதிகளிலும் இருந்து நிவாரணப் பொருட்கள் வந்த வண்ணம் உள்ளன. பல  தன்னார்வ அமைப்புகளும் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றியதோடு தற்போதும் மக்களுக்கான உணவு உள்ளிட்டத் தேவைகளை நிறைவேற்றி வருகிறார்கள். திருப்பதி சாரம் முகாமில் பாதிக்கப்பட்ட ஒரு பெண் தனக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. என்று; கூறியதற்காக வட்டார அதிமுக பிரமுகரால் தாக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மனிதர்களையே மனிதர்களாய் மதிக்காத இந்த நேரத்தில், பல மாண்புமிகு மனிதர்கள் மழை வெள்ளத்தில் போராடி தனது வளர்ப்பு பிராணிகளையும்  காப்பாற்றி, முகாமில் தங்களோடு தங்க வைத்துள்ளனர்.
சுசீந்திரத்தில் இருந்த ஒரு பசுசேவை கோசலையில் பாதுகாத்து வைக்கப்பட்ட முப்பதிற்கும் அதிகமான பசு மாடுகள் பெரு வெள்ளத்தில் அடித்து சென்றதால் மனித உயிரிழப்பு பட்டியல் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளன.
ஒரு சில தனியார் மருத்துவ மனைக்கு தன்னார்வ தொண்டர்களால் கொண்டு செல்லப்பட்ட பல எளியவர்களை ஏற்க மறுத்து வெளியேற்றி உள்ளது, தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள். இவற்றை விட சோகம் என்ன வென்றால், ஊட்டுவாழ் மடம் பகுதியில் தனது வீடு மற்றும் பொருட்களை முற்றிலும் இழந்து, வடிவீஸ்வரம் முகாமில் இருந்த கண்ணன் என்ற எனது நண்பர் வெள்ளிக்கிழமை என்னை கைப்பேசியில் தொடர்பு கொண்டு "அய்யா, எனது மனைவி மற்றும்  இரண்டு கைக்குழந்தைகளுடன் இங்கு இருக்கிறேன். இங்கு பெயருக்கு எதோ உணவு வழங்குகிறார்கள், இங்கே இருக்கும் மக்கள் ஒருவரை திட்டிக்கொண்டும் அழுது கொண்டும் இருக்கிறார்கள், இங்கு கழிப்பறை வசதி கூட இல்லை. எனது குழந்தைகள் வேறு அழுது கொண்டிருக்கிறார்கள். எனது ஏடிஎம் கார்டு,பெட்டி போன்ற அத்தியாவசியப் பொருட்கள் எல்லாம் மழையில் போய்விட்டன. எனக்கும் என் குழந்தைகளுக்கும் இங்கு இருக்கவே பிடிக்கவில்லை. அதனால் எனது மனைவியின் ஊரான மதுரைக்கு போய் விடலாம் என்று நினைக்கிறேன். உங்களால் ஒரு ஐநூறு ரூபாய் தந்து உதவ முடியுமா? "என்று கேட்டார்; இதை கேட்ட மாத்திரத்தில் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியாமல்,என் கண்கள் கலங்கி விட்டது.
எனது யோகா மையத்திற்கு எல்லா ஒன்னாம் தேதியும் வந்து 500 ரூபாய் பயிற்சி கட்டணம் செலுத்தி விட்டு பிறகு பயிற்சிக்கு  வராமல் இருப்பதையே வழக்கமாய் கொண்டிருந்த  கண்ணனுக்கு இன்றைக்கு இப்படி ஒரு சூழல் என்று நினைத்த போது எனக்கு வாழ்வின் நிலையாமை சட்டென்று கண்ணில் வந்து மறைந்தது.  நான் இங்கிருந்து வடிவீஸ்வரம் செல்வதற்கு நேரமாகும் என்பதால் உடனே இடலாக்குடியில் உள்ள ஒரு ஆலிமிற்கு போன் செய்து இந்த நண்பருக்கு உடனே உதவ முடியுமானு கேட்டேன். அவரும் உதவுவதில் ஒன்றும் இல்லை,ஆனால் முகாமில் இருந்து இடையில் போனால் அவர்களுக்கான இழப்பீடு கிடைப்பதில் ஏதேனும் குழப்பம் வருமா என்றதோடு, வேண்டுமானால் எங்கள் வீட்டிலேயே ஒரு போர்சனில் தங்கிக்கொள்ள செய்யட்டுமா? என்று கேட்டார். பிறகு கண்ணன் இதற்கு சம்மதிக்காததால் அவர்களுக்கு தேவையான உடனடி உதவிகளை செய்து தனது காரிலேயே பேருந்து நிலையம் வரை அழைத்து சென்று வண்டி ஏற்றி விட்டு வந்தார் சிக்கந்தர் ஆலிம்.

கண்ணன் மதுரைக்கு போன நேரமோ என்னவோ அடுத்த நாளே மழை நின்று விட்டது. நேற்றும் இன்றும் வெயில் மண்டையை பிளக்கிறது.
குமரியில் 80 % இடங்களில் மின்சாரம் வந்து விட்டது. எங்கள் பகுதியில் [டிசம்பர் 4 திங்கள்] இன்னும் மின்சாரம் வரவில்லை.
எல்லா பேரிடர்களையும்,இழப்புகளையும் மனிதர்கள் கொஞ்சம் நிதானமாக செயல்பட்டால் எளிதில் இயல்பு நிலைக்கு கொண்டு வரலாம். அரசு கொஞ்சம் முன் னெச்சரிக்கையாகவும் வேகமாகவும் செயல்பட்டால்  நாடே விரைந்து  மீண்டுவிடும்.
இதற்கு இயற்கை பேரிடரில் பாதிக்காதவர்கள், அருகில் இருக்கும் பாதிக்கப்பட்டவர் களுக்கு கொஞ்சம் அனுசரணையாக இருக்க வேண்டும். ஆனால்,பல இடங்களில் பால் விற்பவர்களும்,உணவு விடுதிகாரர்களும் இது தான் சமயம் என்று பொருட்களின் விலையை சட்டென்று ஏற்றி விடுகிறார்கள். நான் வசிக்கும் திட்டுவிளை ஊரிலும் அப்படி சில வியாபார மன்னர்கள் உள்ளனர். ஹாஜி அப்துல் காதர் ஸ்டோர். எப்பொழுதுமே, எல்லாப் பொருட்களையுமே ஊரில் உள்ள மற்ற கடைகளை விட ஒன்றிரண்டு ரூபாய் கூட்டி விற்பதே இவரின் வழக்கம். நேற்று நான் ஒரு மில்கா பிரெட் இங்கு வாங்கினேன் 28 ரூபாய் என்றார் மற்ற கடைகளில் 26 ரூபாய்க்கு கிடைக்கும். அதோடு தயாரிப்பு தேதியில் வந்த ஒரு சிறு சந்தேகத்தில் எனக்கும் கடைக்காரருக்கும் ஒரு சிறிய வாக்குவாதம் வந்து விட்டது. எனது சந்தேகத்தை நான் கனிவாக கேட்டேன். அதற்கு அவர் உனக்கெல்லாம் என்ன தெரியும் என்ற ரீதியில் மிக தரக்குறைவாக பேச,நானும் அதே பாணியில் பேசிவிட்டு பிறகு,வீட்டில் வந்து யோசித்தேன். ஊர் கமிட்டியில் உள்ள ஒருவர், ஊரில் உள்ள பல சொத்துக்களுக்கு அதிபதி.ஆனால், மனதில் நிறைவோ, வாக்கில் இனிமையோ இல்லாத இது போன்ற மனித மனங்களே பெரும்பாலும் வாழ்வை சிக்கல் மிக்கதாக மாற்றி விடுகிறது. என்று எனக்கு தோன்றியது. எரியும் கொள்ளியிலும் விறகு சேகரிக்கும் இது போன்ற வியாபாரிகள் திருந்த வேண்டும்.
பேரழிவு,அரசின் மந்தம்,வியாபார மனிதன்,கருணை நெஞ்சம்,அவசரப்புத்தி, சேவை நெஞ்சம் என்று எத்தனையோ விசயங்களை இந்த ஒகி புயல் நம்மில் உணர்த்தி உள்ளது. முகநூலிலும் வாட்ஸ் அப்பிலும் நான் இருப்பதற்காக பெருமை கொள்ள வைத்த மேலும் ஒரு தருணத்தையும் இந்தப் புயல் வழங்கியது. எத்தனையோ நண்பர்கள் நமது நலம் வேண்டி கருத்திலும் கைப்பேசியிலும் நம்மை தொடர்பு கொண்டீர்கள் அனைவருக்கும் நன்றி,நன்றி,நன்றி.!
உங்கள் அன்பு எங்களை மேலும் வலிமையானவர்களாய் மாற்றி உள்ளது.!
வாழ்க வளமுடன்
நலம் பெருகட்டும்

-ஏகப்பிரியன் DYT

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...