மனதோடு பேசுகிறேன்
3.மனதை கட்டி
உடலை அவிழ்த்து விடுவோம்
பெண் குழந்தைகளுக்கு இது போதாத காலம். ஐந்து வயது குழந்தையை கூட பதினேழு வயது மிருகம் பாலியல் கொடுமை செய்து கொன்று விடுகிறது.
ஒன்பதாம் வகுப்பு மாணவியிடம் அந்த மாணவியின் ஆசிரியரே சில்மிசத்தில் ஈடுபடுகிறார்.
ஒரு பருவப்பெண்ணை அவளின் தந்தையே பாலியல் பலாத்காரம் செய்து விடுகிறார்.
காதலித்தவனை மணந்தால் அப்பனே ஆள் வைத்து வெட்டிக்கொல்கிறான்.
இன்னும் இரயிலிலும் பேருந்திலும் அலுவலகங்களிலும் இவ்வளவும் ஏன் மத வழிபாட்டுத் தலங்களிலும்,ஆஸ்ரமங்களிலும் கூட பெண்ணின் உடல் ஒரு லாகிரி வஸ்துவைப்போல பயன்படுத்தப்படுகிறது.
உண்மையில் இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் எதை தேடுகிறார்கள், எதற்காக இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுகிறார்கள், இது போன்ற செயல்களில் இருந்து தங்கள் பிள்ளைகளை பாதுகாத்துக் கொள்ள என்ன செய்வது? என்று எண்ணாத பெற்றோர்களே இருக்க முடியாது.
இதற்கு பல்வேறு உளவியல் அறிஞர்கள் பல தீர்வுகளை கூறுகிறார்கள். அதாவது பெண் பிள்ளைகளிடம் பிறர் கையை தொட்டால் நல்ல தொடுதல் என்றும் தொடையை தொட்டால் கெட்ட தொடுகை என்றும்,ஆசிரியரோடு தனியாக இருக்கும் சந்தர்ப்பத்தை தவிர்க்க வேண்டும் என்றும், எல்லோரிடமும் ஒரு எல்லை வைத்து பாதுகாப்பான முறையில் பழக வேண்டும்,முடிந்தவரை பெண்களுக்கான தனி வாகனங்களை பயன்படுத்த வேண்டும்,தற்காப்பு கலைகளை கற்க வேண்டும், தனியாக தெருவில் நடக்கும் போது கூட விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் பல்வேறு ஆலோசனைகளை பல நிபுணர்கள் வழங்குகிறார்கள்.
உண்மையில் இந்த ஆலோசனைகள் அனைத்துமே ஒன்றுக்கும் உதவாத குப்பைகள். எப்படியெனில் நாம் விழிப்புணர்வோடு இருந்தால் மட்டும் இதை சரிசெய்ய முடியாது. பேருந்தில் பயணம் செய்யும் போது பக்கத்தில் நிற்பவனை சந்தேகிக்கவும், சிறு குழந்தைகளிடம் அன்பாக, யதார்த்தமாய் பழகுபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவுமே இந்த அறிவுரைகள் உதவும். இதனால் ஒரு நட்டையும் புடுங்க முடியாது.
மனித உடல் என்றால் என்ன, உடல் உறுப்புகள் படைக்கப்பட்டதின் நோக்கம், உடல் உறவால் என்ன நிகழ்கிறது, உடல் மன நோய்கள் எப்படி உருவாகிறது,மனதின் இயல்பு என்ன,
உறவுகளின் மகத்துவம்,பிற மனிதர்களுக்கு உதவ வேண்டியதின் அவசியம், போதைப்பொருளை ஏன் பயன்படுத்தக் கூடாது, தீயசிந்தனை எதனால் ஏற்படுகிறது, தீமையின் விளைவுகள் எப்படிப்பட்டதாய் இருக்கும், பிற உயிர்களின் உணர்வுகளை ஏன் மதிக்க வேண்டும்?
போன்ற அடிப்படை கேள்விகளுக்கான விடையை அனைவருக்கும் பள்ளிப்பருவத்திலேயே கசடற கற்பிக்க வேண்டும், பெண்ணின் உடலை போகப்பொருளாய் கடை விரிக்கும் திரைப்படங்களுக்கும் நீலப்படங்களுக்கும் தடை விதிக்க வேண்டும்,மாணவர்கள்,பெற்றோர்கள்,ஆசிரியர்கள்,திரைப்படத்துறையினர்,ஊடகத்துறையினர்,சாதி,மத தலைவர்கள்,காவல்துறையினர்,அரசியல் வாதிகள்,அதிகாரிகள்,நீதிபதிகள்,சிறைக்கைதிகள்,விரக்தியடைந்தோர் மற்றும் ஆதரவற்றோர்களின் மன நிலையை அடிக்கடி கலந்தாய்வு மூலம் ஆராய்ந்து அவர்களுக்கு தகுந்த ஆலோசனைகளையும் தீர்வுகளையும் வழங்க வேண்டும்.
மேலே கூறியுள்ள ஆலோசனைகளை தீவிரமாக பின்பற்றினால் பாலியல் பலாத்காரம் போன்ற பெண்களுக்கெதிரான குற்றங்கள் மட்டுமல்ல நாட்டை அரித்துக்கொல்லும் ஊழல்,பயங்கரவாதம்,மதவாதம்,கொலை,கொள்ளை போன்ற குற்றங்களும் பெருமளவில் குறைந்துவிடும். அப்படியும் குறைய வில்லை எனில் மரண தண்டனை போன்ற கடுமையான தண்டனைகளை வழங்கலாம்.
இதில் எதையும் செய்யாமல் எரியும் வீட்டில் பிடிங்கியதெல்லாம் லாபம் என்ற ரீதியில் அவரவர் தன் சுய நலத்திற்காக பல்வேறு குற்றங்கள் செய்வதை நியாயப்படுத்திக் கொண்டே பாலியல் பாலத்காரம் செய்பவனை தூக்கிலிட வேண்டும், லஞ்சம் வாங்கியவனை சுட்டுக்கொல்ல வேண்டும்,ஊழல் செய்தவனை நாடு கடத்த வேண்டும்,கலப்படம் செய்தவனை எரித்துக்கொல்ல வேண்டும். என்றெல்லாம் மாற்றிமாற்றி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டிருப்பதால் ஆகப்போவது ஒன்றுமில்லை.விபச்சாரியை துரத்துபவனில் ஒருவன் மோசடி வியாபாரி, ஒருவன் உண்டியல் திருடன்,ஒருவன் அடுத்தவன் பொண்டாட்டியை கூட்டி வந்தவன் எவனுமே இயேசுமில்லை புத்தனுமில்லை … எனும் போது நம் பிள்ளைகள் பாதுகாப்பாய் இருக்க கற்றுக்கொடுக்கும் நல்ல தொடுகை,கெட்ட தொடுகையை குப்பையில் தான் போடவேண்டும்.
அல்லது அவர் அப்படி தொட்டிருப்பாரா, இவர் இப்படித்தான் இடித்திருப்பாரா? என்றெல்லாம் பலரையும் சந்தேகித்து வாழ்வை மிரட்சியான பாதையில் படப்படப்பாக செலுத்த வேண்டியதுதான்.
ஐந்து வயது குழந்தையை பிய்த்தெரிந்து விட்டானே பாவி என்கிறோமே …
இப்படி ஒரு வக்கிர மனிதனை படைத்தது இந்த சமுதாயத்தின் பாவமில்லையா?
ஒரு பிஞ்சின் உடலில் என்ன இருக்கிறது,அந்த உடல் அடையும் நிலை என்ன என்று அந்த வக்கிர சிறுவனுக்கு கற்பிக்காத நமது கல்விமுறை பாவமானதில்லையா? சீர்த்திருத்த பள்ளியில் சேர்த்தும் அவனை சீராக்காமல் அனுப்பியது சிறைத்துறையின் பாவமில்லையா?
தவக்கையின் கால்களை வெட்டி பட்டாம் பூச்சியின் சிறகைப்பிய்த்து,நாயை கல்லால் எறிந்து நாமெல்லாம் விளையாடினோமே அது பாவமில்லையா?
ஒரு வேளை உணவிற்காக எத்தனையோ உயிர்களை கதறக்கதற இந்தக் கையாலேயே வெட்டிக்கொல்கிறோமே அது பாவமில்லையா?
சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள். நான் உங்களை குற்றம் சாட்ட வரவில்லை. பாவமும் புண்ணியமும் அவரவர் மனதையும் அறிவையும் பொறுத்த விசயம் என்றுதான் கூறுகிறேன்.
புத்தனையும் வள்ளலாரையும் படித்தவன் புல், பூண்டு,ஆடு,மாடெல்லாம் உயிரென்கிறான்,இயேசுவையும் முகமதுவையும் படித்தவன் மனிதன் மட்டுமே உயிர் மற்றவை அவனிற்கான உணவு என்கிறான்.
அவரவருக்கு அவரவர் உணர்ந்த விசயங்களே மேலானவை.
அறிவும் அன்பும் மேலோங்கும் போதே உணர்வு உன்னதமாகும்.
அந்த அறிவையும் அன்பையும் மனிதனுக்கு போதிக்காதவரை பாவிகளை வெறுக்கலாம்.ஆனால்
பாவங்களை எவராலும் தவிர்க்க முடியாது என்பதே உண்மை நிலை.
இது எனது அனுபவம்
அன்று மழை பெய்து கொண்டிருந்ததால் … என்னுடைய யோகா வகுப்பிற்கு ஒரே ஒரு சிறுமி மட்டும் தான் வந்திருந்தாள். அவளுக்கு ஆறு அல்லது ஏழு வயதிருக்கலாம். உடல் தளர்வு பயிற்சி செய்யும் போதே என்னைக் கூர்ந்து பார்ப்பதும் பின்னால் திரும்பிப் பார்ப்பதுமாகவே இருந்தாள் … பிறகு உடற்பயிற்சி முடிந்ததும் வேகமாக பயிற்சி அறையை விட்டு வெளியே போய் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டாள். "ஏம்மா பயிற்சி செய்யலையா?"
என்று நான் கேட்டதும்; 'இல்ல,கிளாஸ்ல யாரும் இல்லாட்டி நீ மட்டும் மாஸ்டர் கூட பயிற்சி செய்ய வேண்டாம்னு அம்மா சொன்னாங்க "
இதை கேட்டதும் நான் சத்தமிட்டு சிரித்துவிட்டு உள்ளே வந்து எனது அன்றாட பயிற்சிகளை செய்ய ஆரம்பித்து விட்டேன். பிறகு ஒன்றிரண்டு மாணவர்கள் பயிற்சிக்கு வந்ததும் அந்த சிறுமி மீண்டும் உள்ளே வந்தாள். நான் அவளிடம் வெளியே உட்காரும்மா … உனது அம்மாவோ, அப்பவோ வந்தால் பிறகு என்னைப் பார்க்கச் சொல்லு, இன்று உனக்கு வகுப்பு முடிந்தது.என்று கூறி அனுப்பிவிட்டேன்.
அந்த பயிற்சி மைய நிர்வாகியிடம் அந்தப் பெண்ணுக்கு யோகா பயிற்சியளிக்க முடியாது, என்பதை அவளின் பெற்றோரிடம் கூறிவிடுங்கள். என்றதும்; அவர் 'ஏன்? என்று கேட்க
"அந்த சிறுமிக்கு கொஞ்சம் மனநல பாதிப்பு இருக்கு."
என்று கூறிவிட்டேன். உண்மைதான் இது போன்று அடிக்கடி வெளியே போய் உட்கார்வதும், மாஸ்டர் கையை தொட்டுவிட்டார், தலையை தொட்டுவிட்டார் என்றெல்லாம் நினைத்து அடிக்கடி அவர்களின் மன பாதிப்புகளை என்னிடம் காட்டிக் கொண்டிருந்தால் அவர்களின் நோய் நமக்கும் தொற்றிவிடுமே.
அதனால் தான் நமக்கு அந்த வியாதியே வேண்டாம் என்று கூறிவிட்டேன்.
இது போன்று போகிற இடமெல்லாம் சந்தேகத்தை சுமந்து செல்வதை விட பேசாமல் வீட்டிலேயே இருந்து விட்டால் நமக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் கூட நல்லதுதான்.
பரந்து விரிந்த வெள்ளைத்தாளில் வைத்த சில கரும்புள்ளிகளே கண்ணில் சட்டென விழும் அது போலவே சட்டென இந்த பிள்ளையின் நினைவு வந்துவிட்டது. தூய வெள்ளை மனம் கொண்ட எத்தனையோ யோக மாணவிகள் என் மனதில் நிறைந்துள்ளார்கள் வாய்ப்பிருப்பின் அவர்களைப் பற்றியும் பிறகு பகிர்கிறேன் …
இன்னும் பேசுவேன் …
-ஏகப்பிரியன் DYT
aumherbals.blogspot.com
No comments:
Post a Comment