"அரப்பு மரம்" "சோப்புக்காய் மரம்"
தற்போது ஷாம்பூ போடாமல் யாரும் குளியலை நிறைவு செய்வதில்லை. இயற்கை ஷாம்பான அரப்பும், சிகைக்காயும் இருந்த இடத்தில் கார்ப்பரேட் கம்பெனிகளின் பொருள்கள் கம்பீரமாக அமர்ந்திருக்கின்றன. ‘அரப்பு, சிகைக்காய்த் தேய்த்துக் குளிப்பது, மனித இனத்துக்கே ஒவ்வாத செயல்’ என்ற நாகரிக மனநிலைதான் இதற்குக் காரணம்.
சனிக்கிழமைதோறும் எண்ணெய் தேய்த்து, சீயக்காய்த் தூள், அரப்புத்தூள் போட்டு முடியை அலசிவிட்டுத் தலையைத் துவட்டினால் உடல் குளிர்ந்து ஜிலுஜிலுவெனப் புத்துணர்ச்சி தோன்றும்.
கிட்டத்தட்ட முப்பதாண்டுகளுக்கு முன்பு அனைவரும் கடைப்பிடித்த பழக்கம்தான் இது. குளியலறைக்குள் சோப்பும் ஷாம்பும் நுழைந்த பிறகு, சனி நீராடுவது என்பதே வழக்கொழிந்துவிட்டது.
எண்ணெய்க் குளியலை மறந்த பிறகு, உடல் சூடு அதிகமாகிவிட்டது. ரசாயன ஷாம்பூகளால் முடி உதிர்தல் உள்பட பல இன்னல்களுக்கு ஆளாகிவருகிறோம்.
சீயக்காய் தமிழ்நாட்டு சீதோஷ்ண நிலைக்கு சரியாக வளராது. அதனால்தான் இங்கு பயிர் செய்யப்படுவதில்லை.
அரப்பு மரம்:
=============
ஆனால், தமிழகத்தில் காலங்காலமாக சீயக்காய்க்கு மாற்றாக, உசிலை அரப்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இயற்கையாகவே ஏரி, குளங்கள் போன்ற நீர்நிலைப் பகுதிகளில் உசிலை மரம் ஏராளமாக காணப்படும். இதைத் தனியாக யாரும் பயிர் செய்வதில்லை.
குளியலுக்காகவும், கேசப் பராமரிப்புக்காகவும் இயற்கை செய்து கொடுத்துள்ள அற்புத ஏற்பாடுதான், ‘உசிலை மரம்’ என்று அழைக்கப்படும் ‘அரப்பு மரம்’.
அரப்பு, நம் மண்ணுக்கே உரிய அற்புதமான மரமாகும். வேறெந்த மரங்களும் வளராத இடங்களிலும் அரப்பு வளரும். கடுமையான வறட்சியையும் தாங்கி வளரும் தன்மை வாய்ந்தது.
ஆண்டுக்கு 600 மில்லிமீட்டர் மழையளவே உள்ள பகுதிகளிலும்கூட இது வளரும். நடுத்தரமான உயரம் கொண்ட இந்த மரம், அதிக கிளைகளுடன் அடர்ந்து வளர்வதால் நிழல் தரக்கூடிய மரமாகவும் விளங்குகிறது. அதோடு, காற்றுத் தடுப்பானாகவும், மண் அரிமானத்தைத் தடுக்கும் மரமாகவும் பயன்படுகிறது. இம்மரத்தின் கிளைகளை விறகாகப் பயன்படுத்தலாம்.
அரப்பு, மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், கால்நடைகளுக்குத் தீவனமாகவும் பயன்படுகிறது. இதன் இலைகள் சிறந்த தழைச்சத்து உரமாகவும் பயன்படும்.
உசிலை மரத்தின் தாவரவியல் பெயர், அல்பீஸியா அமரா (Albizia Amara). உசிலை மரங்கள், ஆப்பிரிக்க மணல் காடுகளில் அதிகளவு உள்ளன. இந்தியாவில் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகள், கிழக்குத்தொடர்ச்சி மலைக் குன்றுகள் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிகளவில் காணப்படுகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சின்னச் சின்ன கரடுகள் உள்ள பகுதிகளில் இது அதிகளவில் தானாகவே வளர்ந்து காணப்படுகிறது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் இந்த மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. அதன் காரணமாகவே ‘உசிலம்பட்டி’ என்று அந்த ஊருக்குப் பெயர் உருவாகியதாகக் கூறுகிறார்கள். ஏப்ரல் மாதத்தில் இந்த மரத்தில் நிறைய இலைகள் இருக்கும். மே மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும்.
உசிலை மரத்தின் முற்றிய நெற்றுகள் காற்று மூலமாகப் பரவுகின்றன. அவை சென்று விழும் இடங்களில் விதைகள் முளைத்து மரமாகின்றன.
இதை அதிகளவு பரப்ப நினைப்பவர்கள், கோடைக்காலங்களில் சாணத்தில் இதன் விதைகளை வைத்து, விதை உருண்டைகள் செய்து கரடுகளில், வேலி ஓரங்கள், தரிசு நிலங்களில் வீசி எறியலாம்.
உசிலை மரத்தின் முற்றிய நெற்றுகளைச் சேகரித்து, உலர்த்தி அடித்துத் தூற்றி எடுத்தால் விதைகள் கிடைக்கும். இந்த விதைகள் மூலம் நாற்று உற்பத்தி செய்தும் நடவு செய்யலாம். நாற்றாக நடும்போது, ஆறு மாத வயதான செடிகளைதான் நடவு செய்ய வேண்டும்.
அரப்பு மோர் கரைசல் :
=======================
இயற்கை விவசாயத்தில் பயன்படுத்தப்படும் அரப்பு மோர் கரைசல், இந்த மரத்தின் இலைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்தக் கரைசலில் ஜிப்ராலிக் அமிலம் உள்ளது. இது சிறந்த வளர்ச்சி ஊக்கி என்பதால், இந்தக் கரைசல் தெளித்த பயிர்களின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பூக்கள் பிடிக்கும் சமயத்தில் இதைத் தெளித்தால், அதிகப் பூக்கள் பிடிக்கும்.
அரப்பு மரத்தின் இலையை 2 கிலோ அளவுக்குப் பறித்துக் கொள்ள வேண்டும். இதை, நன்றாகத் தண்ணீர்விட்டு அரைத்து 5 லிட்டர் கரைசலாக மாற்றி, அத்துடன் 5 லிட்டர் புளித்த மோர் சேர்த்துக் கலக்கிக்கொள்ள வேண்டும். இந்தக் கலவையை மண்பானை அல்லது பிளாஸ்டிக் வாளியில் ஊற்றி வைத்து, ஒரு வாரம் புளிக்க விட வேண்டும். பிறகு, பத்து லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் கரைசலைச் சேர்த்துப் பயிர்களில் தெளிக்கலாம்.
அரப்புப் பொடி :
=================
அரப்பு இலையை நிழலில் உலர்த்தி, தூசுகளை அகற்றிப் பொடியாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்தப் பொடியை அப்படியே தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம். ஆவாரம் பொடியுடன் அரப்புப் பொடியைச் சேர்த்துக் குளித்தால் பேன், பொடுகு பிரச்னை தீரும். இதன் இலை, பூக்கள் தீக்காயங்கள் மற்றும் புண்களைக் குணப்படுத்தப் பயன்படுகின்றன.
சோப்புக்காய் :
===============
இதேபோன்றதுதான் 'பூந்திக்கொட்டை’ எனப்படும் சோப்புக்காய் மரங்களும். இவை, இயற்கையாகவே காடுகளில் வளரக்கூடியவை. சில இடங்களில்தான் தேவைக்காக ஒன்றிரண்டு மரங்களை வளர்க்கிறார்கள். தமிழ்நாட்டில் இந்த மரங்கள் நன்றாக வளரும்.
சோப் மற்றும் ஷாம்பூ ஆகியவற்றில்சோப்புக்காயைத்தான் முக்கியமான மூலப்பொருளாகப் பயன்படுத்தி வருகிறார்கள். தவிர, நகைகளை பாலீஷ் செய்வதற்கும் இந்தக் காய்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த மரம் நடவு செய்த நான்காம் ஆண்டில் இருந்து காய்க்கத் தொடங்கும். பத்து வயதான மரத்தில் இருந்து ஆண்டுக்கு 20 மூட்டை காய்களை அறுவடை செய்ய முடியும்.
காய்களின் உலர்ந்த சதைப்பகுதியை இடித்து, நீரில் சற்று ஊறவைத்துப் பிழிந்தால், மிகுந்த நுரையோடு, நறுமணத்தோடுக் கூடிய, திடமான நீர்மம் உண்டாகும். இதை எண்ணெய் வைத்தத் தலையில் தேய்த்துக் குளித்தால் எண்ணெய் பிசுக்கும், அழுக்கும் அறவே நீங்கிவிடும். சிகைக்காயைப் போலவேப் பயன்படுத்தக்கூடியது.
தண்ணீரோடு சேரும்போது சோப்பைப்போலவே நிறைய நுரை வருவதால் சோப்புக்காய் என்று குறிப்பிடப்படுகிறது.
இந்தக் காய்களின் கொட்டைக்குள்ளிருக்கும் பருப்பில் 2-3 குன்றி எடை நசுக்கி, முலைப்பாலில் ஊறப்போட்டு, வடிகட்டி மூக்கின் வழியாக 2-3 துளி விட, மூக்கிலும் வாயிலும் கபத்தை வெளியாக்கும். இதனால் மூர்ச்சை, பற்கிட்டல், காக்கைவலி முதலியவைகள் போகும்.
தினமும் அணியக் கூடிய கம்மல், மோதிரம், சங்கிலி, வளையல் போன்ற தங்க நகைகள், அதிகப் பயன்பாட்டால் மங்கிப்போகும். அப்போது பூந்திக் கொட்டை கழுவிய நீரில் போட்டு, சற்றுக் கைவிரல்களால் அல்லது மெல்லிய புருசால் தேய்த்து எடுத்தால் புத்தம் புது நகைகளைப் போல் ஜொலிக்கும்.!
-இணையப்பகிர்வு
No comments:
Post a Comment