மனதோடு பேசுகிறேன்
11.கொண்டதும் கொடுத்ததும்
" உடலை பெற்றதனாலான
பயன் - உயிர்நிலை உணர்தல்
கல்வி கற்றதனாலான
பயன் - கசடற நடத்தல்
பொருள் பெற்றதனாலான
பயன் - அறவழி கொடுத்தல்
ஞானம் உற்றதனாலான
பயன் - மண்ணுயிர்
உயர்த்தல் "
' கருவறை முதல் கல்லறை வரை சில்லறை வேண்டுமப்பா ' என்பதே இன்றைய நிலை. பிறப்பு,கல்வி,தொழில்,ஞானம், இறுதிச்சடங்கு அனைத்தும் இன்று நம்மை வைத்து பிறர் பணம் சம்பாதிக்க ஏற்படுத்தப்பட்ட தொழிலாகவே இருக்கிறது. தொழில்கள் வளர்வது குற்றமில்லை. ' கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் ' என்பது முதுமொழி. ஆனால், நமது புண்ணிய பாரதத்தில் மட்டும் தான் எதுவெல்லாம் சேவையாக இருக்க வேண்டுமோ அதை எல்லாம் தொழிலாக மாற்றி கல்லா கட்டுகிறார்கள். அதோடு இந்த தொழில்களை ஆரம்பிக்கவும் தொடர்ந்து நடத்தவும் அரசியல் வாதிகள்,அதிகாரிகள்,ஊடகங்கள் என்று அனைத்து மட்டத்திலும் இனாம்,அன்ப்பளிப்பு,நன்கொடை,விளம்பர கட்டணம் என்று இதமாகவும் லஞ்சம்,ஊழல்,மோசடி என்று நிஜமாகவும் சொல்லப்படும் அத்தனை தில்லு முல்லுகளும் சேர்ந்து நமது வாழ்வையே வர்த்தகமாக்கி விட்டன. "பாலும் பருப்பும் பாகும் தேனும் கலந்துனக்கு நான் தருகிறேன். நீ எனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தா"என்று பக்தியில் உருகும் போதும்,கடவுளின் கருவறை முன் நின்று கைதொழும்போதும் கூட நமக்கு வியாபார எண்ணமே மேலோங்கி உள்ளது. சேவை,இலவசம் என்று கூறப்படுவது பெரும்பாலும் கூட்டத்தை சேர்க்கவும் பிறரை ஏமாற்றவும் கண்டறிந்த தந்திரமே தவிர வேறில்லை. அப்பமும் சுண்டலும்,பழமும் நோன்புக்கஞ்சியும்,லட்டும் கொடுக்கா விட்டால் வழிபாட்டு தலங்களில் கூட கூட்டம் வருவது கடினம் தான். குவாட்டர், பிரியாணி,ஐநூறு நோட்டு கொடுத்தால் தான் அரசியல் கட்சிக்கு கோசம் போட ஆளே கிடைக்கிறார்கள். ஆறாயிரம் முதலில் கொடுத்தால் கூட ஓட்டுப்போடாமல் தலா பத்தாயிரம் வைத்து பிறகு தருகிறேன் என்பவருக்கே எங்கள் ஓட்டு என்று மக்கள் மிகமிக யதார்த்தமாக லாப நோக்கில் செயல்பட ஆரம்பித்து விட்டனர். குடிநீர் தொடங்கி சாலையில் வாகனம் ஓட்டறது வரை வியாபாரமாக்கி விட்டனர். விபத்தில் அடிப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தால் கூட அறுவை கட்டணத்தை முதலில் கட்டினால் தான் சிகிட்சையே செய்கிறார்கள்.
பாராட்டி,சீராட்டி, நல்ல பண்புகளை கற்றுக்கொடுத்து வளர்த்த மகளை கொடுத்தால் மட்டும் போதாது பையன் பரம்பரையே சொகுசாய் வாழ பெரும் நிதியும் பரிசுகளும் கொடுக்க வேண்டும். என்பது தொன்றுத்தொட்டே தொடர்ந்து வரும் பழையத்தொல்லை.
அன்பை காட்டுவதற்கு கூட கார்,பைக்,நகை,செல்போன் போன்ற எதையாவது வாங்கிக் கொடுக்க வேண்டியிருக்கிறது.குச்சி மிட்டாய்,குருவி ரொட்டியுமே என்றால்; "ங்கொய்யால போறியா, குச்சிய வாயில விட்டு ஆட்டட்டானு" சின்னப்பசங்களும் கம்பெடுத்துட்டு வாராங்க. நான் கூட சில நேரங்களில் எனது ஒரு வகுப்பிற்கான கட்டணமாக" 500 ரூபாய் கொடுங்கள் அல்லது கிளம்புங்கள் " என்று; பலரையும் பயிற்சி மைய படிக்கட்டோடு துரத்தி விட்டுள்ளேன்.
எந்த சேவையுமே வியாபாரம் ஆகிவிட்டால் அதன் ஜீவனே போய்விடும்.
இன்றைக்கு வியாபாரத்திற்கு கைகொடுக்க அரசு,அதிகாரம்,வங்கி,ஊடகங்கள்,நடிகர்கள் என்று பலரும் தயாராக இருக்கிறார்கள். அரசும் கூட ஆதார் அட்டை முதல் நீட் தேர்வு வரை பல்வேறு திட்டங்களுக்கு அமெரிக்க நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டே செயல்படுத்தி வருகிறது. "மரபணு மாற்ற விவசாயம்,மீத்தேன்,அணுஉலை போன்றவை வியாபாரத் திட்டம் என்று சொல்வதற்கில்லை அவை விபச்சாரம்"என்று; கூறத்தக்கவை. குறுக்கு வழியில் சுகம் பெறவும் எளிய வழியில் பொருள் பெறவும் உருவாக்கப்பட்டவை தான் விபச்சாரம். அந்த விபச்சரத்திற்கே இடைத்தரகர்களாய் செயல்பட்டு கோடிகளை குவிக்கும் கேடிகள் எல்லா நாட்டிலும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட வேலையைத்தான் முன்னால் டர்பன் தாடியும் இன்றைய மோடி தாடியும் செய்கிறார்கள். என்பது என்னுடைய பகிரங்க குற்றச்சாட்டு. பசிக்காக அழும் குழந்தையோடு பிச்சைக்கேட்கும் பெண்ணை படுக்கைக்கு அழைக்கும் வேலையைத்தான் வெளிநாடுகள் செய்து வருகின்றன. அதற்கு தரகு செய்பவர்கள் தான் நமது ஆளும் கட்சியின் கயவர்கள்.
இப்பொழுது பல பெரு நிறுவனங்கள் சென்னை,கோவை,மதுரை என்று ஒவ்வெரு ஊராக கடை விரித்து இன்று நாகர்கோவில் வரை வந்துவிட்டனர். ஊரையே அடித்து உலையில் போட்ட இந்த வர்த்தகப் பாவிகள் வரும்போதே சிம்பாலிக்கா மொட்டையோடு விளம்பரம் செய்து, எங்கள் கடையில் நகை வாங்கினால் உங்களுக்கு இவ்வளவு லாபம். என்று கூறிக்கொண்டே உள்ளூரில் உள்ள பல சிறு வியாபாரிகளை மொட்டை அடிக்க, மணிக்கு 12 தடவை தொலைக்காட்சியில் விளம்பரம் செய்கிறார்கள். ஏற்கனவே சிறு வியாபாரிகளின் படையெடுப்பில் தங்கள் வீட்டு பட்டறைத் தொழிலை விட்டு வெளியேறி சிறு சிறு கடைகளை திறந்த நகைத் தொழிலாளர்கள் இனி அதையும் விட்டுவிட்டு இதுபோன்ற கார்ப்பரேட் கைக்கூலிகளின் கடைகளுக்கு வேலைக்குப் போக வேண்டியதுதான்.
நாய்கள் கூட தனது ஏரியாவில் புதிய நாய்கள் வந்து கடைப்புரக்க விடுவதில்லை.தெருத்தெருவாக மீன் விற்பவர்கள் கூட தங்கள் தெருவில் புதிதாக மீன் விற்க வரும்நபரை ஏற்பதில்லை.ஏனென்றால்,புதியவர்கள் வரும்போது தங்கள் வியாபாரம் பாதிப்பதை நேரில் பார்க்கிறார்கள். ஒவ்வெரு ஆட்டோ ஸ்டாண்டின் முன்பும் வெளி இடங்களிலிருந்து வரும் ஆட்டோ சவாரி ஏற்றக்கூடாது. என்று தங்களுக்குள் ஒரு விதியை வைத்துள்ளனர். ஆனால்,இந்த கார்ப்பரேட் சட்டங்களுக்கு இதுவெல்லாம் எதுவும் கிடையாது. விலை மிகவும் குறைவு என்று விளம்பரம் செய்து வியாபாரத்தை பெருக்கிய சரவணா ஸ்டோரில் இன்று மற்ற கடைகளை விட விலை அதிகமாக இருக்கிறது.காரணம் சினிமா நடிகைகளுக்கும் சினிமா சங்கங்களுக்கும் விளம்பரங்களுக்கும் கோடிகளில் கொடுக்க பணம் வேண்டுமே, அதற்கு வாடிக்கையாளர்களையும் தொழிலாளர்களையும் கசக்கிப் பிழிந்தால் தானே முடியும்.
இன்றைக்கு அரசு கொடுக்கும் விருதுகள் தொடங்கி பல தனியார் அமைப்புகள் கொடுக்கும் விருதுகளும் பட்டங்களும் உண்மையில் பெறப்படுவதில்லை பணத்தையோ,பொருளையோ,தயவையோ கொடுத்து வாங்கப்படுகிறது.
ஆனந்த விகடனில் அரைப்பக்க விளம்பரத்திற்கு லட்சங்களில் கட்டணம்,தந்திக்கு லட்சங்களை கொட்டினால் தலைப்பு செய்தியையே மூன்றாவது பக்கத்திற்கு மாற்றி விடுகிறார்கள் இந்த வர்த்தக கேடிகள்.பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் வரும் விளம்பரத்தை பார்க்க வேண்டுமானால் அவர்கள் தான் நமக்கு மாதம் மூவாயிரம் ரூபாய் தரவேண்டும்.ஆனால்,இன்றைக்கு உண்மைக்கு புறம்பான,இயற்கைக்கு ஒவ்வாத பல பொய்களைக்கூறி பலப் பொருள்களை விற்க நம்மை கருவியாக பயன்ப்படுத்திக் கொள்கிறார்கள்.சன் நெட்வெர்க் ஒவ்வெரு ஆண்டும் முரசெலி மாறன் அறக்கட்டளை மூலம் கோடிக்கணக்கான பணத்தை நன்கொடையாக புற்றுநோய் குழந்தைகள் அமைப்பு மற்றும் பல்வேறு குழந்தைகள் பெரியோர்கள் அமைப்புகளுக்கு கொடுக்கிறார்கள்.உண்மையில் இவர்களின் சேனலில் பொய்யான விளம்பரங்களை மட்டும் போடாமல் இருந்தாலே போதும். தமிழ்நாட்டில் புற்றுநோய் மட்டுமின்றி பல்வேறு தொற்றுநோயின் தாக்கமும் வெகுவாக குறைந்துவிடும்.
இப்படி வர்த்தகம் பல முனைகளில் நமது வாழ்வோடு பிணைக்கப்பட்டு விட்டது.கல்வி,மருத்துவம்,ஆன்மீகம் சார்ந்த வியாபாரங்களைப் பற்றி எழுதினால் அது தீப்பிடித்த அனுமன் வாலைப்போல ஊரையே எரித்துவிடும்.போகட்டும்; முன்பெல்லாம் தொழில் தொடங்க இடம்,கருவிகள்,பொருள் போன்றவற்றை வாங்கவே பட்ஜெட் போடப்பட்டது. இப்பொழுது மொத்த பட்ஜெட்டில் 15 முதல் 30 % வரை விளம்பரத்திற்கு செலவு செய்தே ஆக வேண்டும். என்ற கட்டாயத்தை உருவாக்கி விட்டுள்ளனர். ஏதோ ஒரு இடத்தில் ஐந்து செண்ட் நிலத்தை வாங்கிவிட்டு அதை சுற்றியுள்ள மூன்று ஏக்கரை வளைத்து, வாயைத்திற பற்கள் தெரியட்டும்னு குமுதத்தில் ஒரு தொடர் வெளியிட்டால் போதும் எந்த வேசதாரியும் ஞானி ஆகிவிடலாம். இன்று சாய்பாபா போன்றோ இராமகிருஷ்ண பரமஹம்சர் போன்றோ எளிய வடிவில் ஒரு ஞானி தோன்றினால் அவர் காலமெல்லாம் ஏதோ குகையிலோ மலையிலோ கிடந்து சாக வேண்டியதுதான். ஊருக்குள் வந்தால் தண்ணீர் கூட தரமாட்டார்கள். போலியான கவர்ச்சிக்கு மட்டுமே இன்று மதிப்பும் மரியாதையும்.
ஆனாலும் கூட இன்றைக்கும் எத்தனையோ நல்ல ஆத்மாக்கள் பல்வேறு துறைகளிலும் சேவையையே தனது மூச்சாக செயல்படுத்தி வருகிறார்கள்.
மருத்துவம்,கல்வி,சிறுவர்கள், முதியோர் பராமரிப்பு, ஆன்மீகம் என்று எல்லா இடங்களிலும் சேவை கரங்கள் பரவலாக நிறைந்துள்ளன. சேவை செய்கிறோம் என்று சத்தமாக கூறுபவர்களை விட சத்தமில்லாமல் சேவை செய்பவர்களே உண்மையில் சேவை செய்கிறார்கள். எனக்குத் தெரிந்து இன்றைக்கும் நோயாளியிடம் 10 முதல் 50 ரூபாய் வரை கட்டணம் வாங்கி மருத்துவம் பார்ப்பதோடு இரண்டு நாளைக்கு மருந்தும் கொடுத்து விடும் அலோபதி மருத்துவர்கள், இலவசமாக அன்பு இல்லம்,முதியோர் இல்லங்களை பராமரிப்போர்,கல்வி,தையல்,யோகா போன்றவற்றை சேவையாக இலவசமாக வழங்குபவர்கள் பலர் இருக்கிறார்கள்."ஆனால்,அரசும் மக்களும் இவர்களை மதிப்பதே இல்லை " என்பதே ; இது போன்ற சேவைகளை செய்பவர்களின் மனக்குமுறலாய் இருக்கிறது.குறிப்பாக அன்பு இல்லம் நடத்துபவர்களை ஆண்டுக்கு நான்கு முறை ஆடிட்டிங் என்ற பெயரில் வதைத்து பணம் பிடுங்குவதே அரசு துறையின் தலையாய பணி. பொதுமக்களில் பலருக்கும், சேவைக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்கள், கோடிகளில் நன்கொடை வாங்கி மறைத்துக் கொண்டு கொஞ்சம் மட்டுமே மக்களுக்கு கொடுக்கிறார்கள். என்பதாக ஒரு எண்ணம் இருக்கிறது.அன்னை தெரசா,அப்துல்கலாம்,சாய்பாபா என்று காலம் சென்ற பல சேவகர்களைப் பற்றி நினைத்து புளங்காகிதம் அடையும் நமக்கு ஒவ்வெரு ஊரிலும் பல தெரசாக்களும் கலாம்களும் வாழ்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்ள முடியவில்லை.வெளியூர்,வெளி மாநிலங்களில் உள்ள பெரிய பெரிய சேவை அமைப்புகளுக்கு லட்சங்களை நன்கொடை வழங்கும் பலருக்கும் தனது ஊரிலும் அது போன்ற,அதைவிட சிறந்த பல அமைப்புகள் இருப்பது தெரியவில்லை. காரணம் பத்திரிகை,தொலைக்காட்சி போன்றவற்றில் அவர்களின் சேவைகளைப்பற்றி யாரும் கூறவில்லை. ஏனென்றால் செய்தி ஊடகங்களுக்கும் சமூக ஊடகங்களுக்கும் அவர்கள் செலவு செய்யாததோடு தனக்குத்தானே அவர்கள் கட் அவுட்டும் வைத்துக்கொள்ள வில்லை. இதை எல்லாம் செய்யாதவர்களை எப்படி சேவகர்கள் என்று மதிக்க முடியும்? பெரும்பான்மை மக்களின் கூற்றுப்படிப் பார்த்தால் திறமையாக வியாபாரம் செய்பவர்களுக்கு மட்டுமே அங்கீகாரம் கிடைக்கும். எனக்குத் தெரிந்து பிஜேபி ஆட்சிக்கு வந்ததும் குமரியில் இருந்த பல அன்பு இல்லங்களும் இலவச கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
இவை வியாபார நிறுவனங்களாய் இல்லாமல் இருந்ததே அதற்கு காரணம்.
நமது அம் யோகா டிரஸ்ட் மூலம் 2010 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை குமரியில் இதுவரை எந்த யோகா அமைப்பும் செய்ய முன் வராத பல இலவச சேவைகளை நமது அமைப்பு செய்துள்ளது. குறிப்பாக மற்ற யோகா அமைப்புகள் ஒரு மணி நேரம் முதல் அதிகப்பட்சம் ஒரு நாள் வரை மட்டுமே இலவச வகுப்புகளை எடுக்கும். ஆனால் நாம் ஒரு மாதம் முழுவதும் சக்கரை,ஆஸ்துமா,இரத்த அழுத்தம்,உடல்பருமன் போன்ற பல்வேறு குறைபாடு கொண்டவர்களுக்கு யோகா,இயற்கை வாழ்வியல் பயிற்சியோடு மூலிகை மருந்துகளையும் முற்றிலும் இலவசமாக வழங்கினோம். பலருக்கும் ஒரு மாத கால இலவச யோகா ஆசிரியர் பயிற்சியோடு சான்றிதலும் வழங்கி உள்ளோம். ஆனால், ஒருமுறை நோயாளிகளுக்கு இலவசமாக வழங்குவதற்காக
நாம் ஒரு பிரபல மூலிகை மருந்து கடையில் சில மூலிகை மருந்துகளை நன்கொடையாக கேட்டோம். அதற்கு அவர்கள் " அவனவன் செய்த பாவங்களே வியாதியாய் வருகிறது. வைத்தியம் செய்பவர்கள் அந்த பாவிகளிடம் நிறைய பணம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே விதி. இலவசமாக கொடுப்பது நமக்கு பாவம்."என்று; கூறி மறுத்துவிட்டார்.அதன் பிறகு நாம் முகாம் நடத்துவதற்காக பிறரிடம் உதவி கேட்பதையே நிறுத்தி விட்டோம். கேளாமல் கொடுக்கும் நமது அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் சில முகநூல் நண்பர்களின் உதவியினால் மட்டுமே நமது இலவச முகாம்கள் நடைபெறுகிறது.
ஒகிப்புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அம் யோகா டிரஸ்டின் மூலம் ஏதாவது உருப்படியான உதவிகளை செய்ய வேண்டும். என்று நாம் கூறிய போது நண்பர்கள் பலரும் நம்மிடம் நிதியே இல்லாமல் எப்படி முடியும்? என்று கேட்டனர். பிறகு ஒரு வழியாக நமது ஆதிமருத்துவம் நூல் விற்பனையில் ஒவ்வெரு நூலிற்கும் 100 ரூபாய் விதம் எடுத்து 500 நூலிற்கு 50,000 ரூபாய் பாதிக்கப்பட்ட ஐந்து ஏழை விவசாயிகளுக்கு ஆளுக்கு பத்தாயிரம் விதம் வழங்கலாம். என்று முடிவு செய்தோம். இதெல்லாம் நடக்குற காரியம் இல்லைனு கூறிய நண்பர்கள் பலரும் நூல் வெளியீட்டிற்கு கூட வரவில்லை.ஆனால்,முகநூல் மற்றும் வாட்ஸ் அப் நண்பர்கள் முன் வெளியீடு திட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட அறுபது நூலிற்கான பணத்தை கொடுத்திருந்ததால் நூல் வெளியீட்டன்றே பத்மநாபன் என்ற விவாசாயிக்கு பத்தாயிரம் வழங்கப்பட்டது. இந்தத் தகவல் தெரிந்த விவசாயிகள் பலரும் "எங்களுக்கும் உதவுங்கள்"என்று இன்னும் பதினைந்து மனுக்களை கொடுத்துள்ளனர்.
இறைநிலை அருளினால் ஆதிமருத்துவம் விற்பனை சரித்திரம் படைத்து அனைவருக்கும் ஆளுக்கு பத்தாயிரம் வழங்கப்படும் அல்லது உதவும் நட்பாளர்கள் மூலம் அவர்களுக்கு நேரடியாக உதவுவோம். குமரியில் ஒருநாள் இரண்டு நாள் முகாமிட்டு கோடிகளை பயிற்சிக் கட்டணமாகவும் நன்கொடையாகவும் வசூலித்து சென்ற பல கார்ப்பரேட் யோகா மையங்கள் இன்றைக்கு மிக அமைதியாக இருக்கின்றன. உண்மையில் இவர்கள் மனது வைத்தால் குமரியில் ஒகியில் இழந்த உயிர்களை தவிர மீதி அத்தனை நலங்களையும் திரும்பவும் கொண்டு வந்து விடலாம்.
ஆனால் அத்தனைக்கும் ஆசைப்படு, எல்லாமே வியாபாரம் தான் என்று கூறிச்சென்ற கார்ப்பரேட் சாமியார்கள் வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நல்ல சேவைகளை செய்ய ஆசைப்படுவதில்லை. ஒருவேளை அடுத்து செழிப்பான காலம் வரும் போது கலெக்சனுக்கு வருவார்கள் போல.!
மனிதனுக்கு கல்வி,மருத்துவம்,இருப்பிடம்,வேலை இவை நான்கும் அவரவர் தகுதிக்கேற்ப இலவசமாக வழங்க வேண்டும். அமெரிக்கா,இங்கிலாந்து, அரபு நாடுகளில் அவ்வாறுதான் இருக்கிறது. இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் இது அப்படியே தலை கீழாக உள்ளது. இவைகளுக்கு லட்சங்களில் கொட்டிக் கொடுக்க வேண்டும். அரசு நமக்கு இலவச தொலைக்காட்சி,மிதிவண்டி,கணிணி,தாலிக்குத் தங்கம் மானிய விலை ஸ்கூட்டி போன்றவற்றோடு ஓட்டுக்கு ஒரிரு ஆயிரங்களை இலவசமாக தரும். இந்த முரண்பட்ட நிலையில் வாழ்வையே வர்த்தகமாக்கிய முதல் நாடு தமிழ்நாடு தான் போல. நல்ல சேவைகளை எல்லாம் வியாபாரமாக்கிய பாரில் சிறந்த தமிழ்நாடு என்று எதிர்கால பாரதிகள் பாட்டிசைக்கலாம்.
நாம் அம் யோகா டிரஸ்ட்டை பதிவு செய்ததே யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் முறைகளை சேவையாக கற்பிக்கத்தான். ஆனால் இந்த கேடுகெட்ட வர்த்தக உலகம் நம்மையும் சில நேரங்களில் ஒரு கொடிய இயற்கை வியாபாரியாக மாற்றி உள்ளது. இருந்தாலும் சேவை செய்த தருணங்களே என் இதயத்திற்கு மகிழ்ச்சியையும் பலத்தையும் கொடுக்கிறது.
நாம் இன்னும் சிறப்பாக செயல்பட நமது சேவைகளின் மூலம் பயனடைந்தவர்கள் நமது சேவைகளைப் பற்றி பிறருக்கும் கூற வேண்டும். அதோடு "தொடர்ந்து நமது முயற்சிகளுக்கும் உதவி செய்ய வேண்டும். இதுவே எனக்குள் இருக்கும் சேவைக்கடவுளை பலப்படுத்தும் வழி அல்லது வர்த்தகச் சாத்தான் சமூகத்தை கெடுப்பதை யாரும் தடுக்க முடியாது."
இது எனது குரல் மட்டுமல்ல.!
-ஏகப்பிரியன் DYT
தொடருவேன்
amyogatrust.blogspot.com
aumherbals.blogspot.com
No comments:
Post a Comment