I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: நாடாள வந்த நடிகர்களே

Sunday, 7 January 2018

நாடாள வந்த நடிகர்களே

மனதோடு பேசுகிறேன்

7.நாட்டை ஆள நடிகர்கள் வேண்டுமா?

திரைப்படங்கள் என்பது ஒரு வெகுஜன பொழுதுபோக்கு சாதனம் என்றும்,திரைப்படங்கள் என்பது சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு வலுவான கருவி என்றும் இருவேறு கருத்துகள் உள்ளன. இரண்டிலும் கொஞ்சம் உண்மை உண்டு. ஆனால்,திரைப்படங்கள் எடுக்கப்படுவதின் உண்மையான  நோக்கம் - சமகால மக்களின் உணர்வுகளை பதிவு செய்து, பணத்தையும் புகழையும் பெறுவது மட்டும்தான். சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் யாரும் படம் எடுக்க வருவதில்லை. ஆனால்,சில  திரைப்படங்கள் சமூக மாற்றம் முதல் அரசியல் மாற்றம் வரை நிகழ காரணமாக இருந்துள்ளது. அறுபதுகளின் ஆரம்பத்தில் திரைப்படத்தின் ஊடாக தனது சிந்தனையை,கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நுட்பம் தெரியாத காரணத்தினாலேயே பல அரசியல் கட்சிகள் தங்கள் நாடாளும் வாய்ப்பை இழந்துள்ளன. அதே நேரம் திரைப்படத்தின் மூலம் தங்கள் எண்ணங்களை மக்களிடம் சேர்க்கும் நுட்பம் தெரிந்த காரணத்தினாலேயே தமிழ் நாட்டின் ஆட்சியை சில காலங்கள்  திராவிடக் கட்சிகள் கைப்பற்றி வந்தது.ஆசை அறுபது நாள் என்பார்கள். ஆனால், திரைப்பட ஆசை கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் தமிழக மக்களின் வாழ்வின்  போக்கையே மாற்றி உள்ளது. தொலைக்காட்சி,சமூக ஊடகங்களின் வருகைக்கு பின் திரைப்படத்தின் தாக்கமும் அதன் மேலிருந்த மக்களின் மோகமும் வெகுவாக குறைந்து விட்டது. அண்ணாதுரை,கருணாநிதி,எம்ஜிஆர்,ஜெயலலிதா வரை திரைப்படத்துறையில் புகழ் பெற்றவர்களை ஆட்சிக்கட்டிலில் உட்கார வைத்து அழகுப்பார்த்தது தமிழ்நாடு மட்டும் தான். அதன் பிறகு சிவாஜி கணேசன்,பாக்யராஜ்,விஜயகாந்த்,சீமான் போன்றவர்கள் மக்களிடம் பெரிய வரவேற்பு பெறாமல் போனதற்கும், ரஜினி வருகிறேன் என்று கூறியதற்கே பெரிய எதிர்ப்பலைகள் தோன்றுவதற்கும்  முக்கியக் காரணமே திரைப்பட புலிகள் முதல்வராய் அமர்ந்து, இதுவரை செய்த ஆட்சியின் அவலங்கள் தான். "ரஜினி தமிழராய் இல்லை அதனால் அவர் அரசியலுக்கு வரவேண்டாம்" என்பவர்களை விட, ரஜினி ஆட்சிக்கு வந்து ஒரு சில வருடங்களில் மரணமடைந்து விட்டால்,அதன் பிறகு அவரின் அடிபொடிகளாய் இருப்பவர்கள் வாரிசு உரிமைக்கு  அடித்து மீண்டும் தமிழகத்தில் ஜெயலலிதா மரணத்திற்கு பின்பு ஏற்பட்டுள்ள, களோபரங்களை போன்று இன்னொரு முறை நடந்து விடக்கூடாது. என்றே பலரும் அலறுகிறார்கள்.

எம்ஜியாரும் ரஜினியும் நேரெதிர் துருவங்கள், எம்ஜியார் நடிக்கும் போதே ஒரு முக்கிய அரசியல் கட்சியில் இருந்தவர் என்பதோடு தனது சமகால மக்களின் பிரச்சனைகளுக்கு நேராகவும் திரைப்படத்தின் வாயிலாகவும் குரல் கொடுத்தவர் அவர். ரஜினியோ நேற்று வரை திரைப்படத்தில் மட்டுமே மக்களுக்காய் குரல் கொடுத்தவர், அரிதாய் பேசிய ஒரு சில நேரங்களிலும், ஏதோ ஒரு காரணத்தால் பாதியிலேயே பின்வாங்கி விட்டவர் ரஜினி. அது போலவே அவர் கூறும் "ஆன்மீக அரசியல் என்பது - சாக்கடையில் யாகம் என்பதைப்போன்று முரண்பாடானது" நன்றாக நடிப்பவர்களும் திறமையான எழுத்தாளர்களும் கோடிகளில் வருமானம் பெற்று புகழோடு வாழ்வதில் யாருக்கும் பாதிப்பு இல்லை. ஆனால்,காலம் போன காலத்தில் ஏற்கனவே திரைப்பட மோகத்தில் தனது வாழ்வை தொலைத்து விட்ட ஒரு நாட்டில் … மீண்டும் ஒரு நடிகனோ,எழுத்தாளனோ வருவதை தமிழ்நாடு தாங்காது. அது சீமானாகவோ, ரஜினியாகவோ,கமலாகவோ யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். "உங்கள் ஒப்பனையும்,நடிப்பும், இயக்கமும், படப்பிடிப்பும் போதுமப்பா, மக்களை கொஞ்சம் உண்மையாக,இயல்பாக இயங்க விடுங்களேன்"சினிமாவால் சீரழிந்த நாட்டை மீண்டும் சினிமாக்காரனிடமே ஒப்படைக்க வேண்டும் என்று அடம்பிடிக்காதீர்கள். அந்த பைத்தியக்காரத்தனத்தை இனியும் யாரும் செய்யமாட்டார்கள்.

உண்மையில் திரைப்படங்களின் மூலம் எம்ஜியாரும்,அவரின் படங்களின் மூலம் பாமர மக்களும் நிறைய நன்மைகளை பெற்றனர். பெரியோர்களை மதித்தல்,உழைப்பின் உயர்வு,எளியவர்களுக்கு உதவுதல்,உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுதல்,அறத்தின் படி செயல்படுதல் போன்ற பல விசயங்களை கற்று நல்ல மனிதர்களாக மக்களும், மக்களின் ஏகோபித்த ஆதரவால் முதல்வராகி எம்ஜியாரும் பயடைந்தனர்.
ரஜினி அப்படி மக்கள் உணர்வோடு கலந்த ஒரு கலைஞனாக  வாழ்வதற்கு எப்பொழுதும் முயன்றதே இல்லை.

ரஜினியும் கமலும் நாட்டை ஆள முயல்வதே பெரிய பாவம். உண்மையில் இவர்கள் இருவருக்குமே இதுவரை சமூக சிந்தனை எதுவும் இருந்தது கிடையாது.
எதோ ஒன்றிரண்டு திரைப்படங்களில் மக்களுக்கு சேவை செய்வது போல் நடித்துள்ளனர். அவ்வளவே;
அவர்கள் அப்படி நடித்த உன்னால் முடியும் தம்பி, இந்தியன்,பாட்ஷா,சிவாஜி போன்ற ஒரு சில திரைப்படங்களும் கூட சமூகத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
இவர்களின் படங்கள் மட்டுமல்ல தண்ணீர் தண்ணீர், ஜென்டில்மேன்,அந்நியன்,ரமணா,தனி ஒருவன்,ஜோக்கர் முதல் இப்பொழுது ஓடிக்கொண்டிருக்கும் வேலைக்காரன் படம் வரை சமூகத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. அவை சில தனி மனிதர்களின் மனதில் ஒரு வெளிச்சக்கீற்றை காட்டி விட்டு மறைந்து விடும். அந்நியன் படத்தைப் பார்க்க பிளாக்கில் டிக்கெட் வாங்கி உள்ளேப்போனால், [சாலிகிராமம் பங்கஜம் தியேட்டரில்]அங்கு ஏசியே ஓடவில்லை. ஆனால்,ஏசிக்கும் சேர்த்தே கட்டணம் வசூலிக்கிறார்கள். கழிவறையே சுத்தமில்லாமல் இருந்தது. அதற்கு பிறகு அந்நியன்,ரமணாவைப்போல் நூறு படங்கள் வந்துவிட்டது. இன்னும் மருத்துவமனைகளிலும்,அரசு அலுவலகங்களிலும்,R.T.O அலுவலகங்களிலும் முக்கியமாக அமைச்சர்  அலுவலகங்களிலும் சேர்த்தே லஞ்சம் தாண்டவம் ஆடிக் கொண்டேதான் இருக்கிறது. இதை வைத்தே இன்றைந  திரைப்படங்களால் எந்த சமூக மாற்றத்தையும் உருவாக்க முடியாது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
ஆனால்,திரைப்படங்கள் தனி மனித ஒழுக்கம் சார்ந்த, அறம் சார்ந்த பழக்க வழக்கங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த உதவும். உதாரணமாக ரஜினி காலத்தில் இருந்தே கதாநாயகன் குடிப்பது, தம்மடிப்பது,வேலைக்கு போகாமல் வெட்டியாக ஊர் சுற்றுவது,ஒன்றுக்கும் உதவாதவரை  காதல் செய்வது போன்ற காட்சிகளை அதிகம் வைக்க ஆரம்பித்துவிட்டனர். இதனால்,குடிக்கும் மற்ற தீயப் பழக்கங்களுக்கும் ஆளான இளைய தலை
முறையினர் ஏராளம் உண்டு. நானெல்லாம் சிறுவனாக இருந்த காலத்திலேயே எம்ஜிஆர்,கமல் படங்களைப் பார்த்தே உடல் பயிற்சியின் அவசியம் தெரிந்து உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றேன்.எனது நண்பன் ஒருவன் சத்யராஜ் நடித்த தெற்கு தெரு மச்சான் படத்தில் வந்த "லொக்கு லொக்கு லொக்கு லொக்கு இருமலு" பாடலை கேட்டு  தனது புகைப்பழக்கத்தை முற்றிலும் நிறுத்தி விட்டான். இப்பொழுது ஓடிக்கொண்டிருக்கும் சிவ கார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தைப் பார்த்த நமது மாணவர் ஒருவர் "இனி நான் எந்த நொறுக்குத்தீனிகளையும் பாட்டில் பானங்களையும் குடிக்க மாட்டேன் " என்று உறுதியாக கூறினார். உண்மையில் திரைப்படத்தில் உள்ள காட்சிகள் இது போன்ற தனி மனிதர்கள் திருந்தவே உதவும். ஆனால்,துரதிஷ்டவசமாக  சுள்ளான்  நடிகர் தனூஷ் போன்றவர்களின் படங்களில் … குடிப்பது,தம்மடிப்பது,முறையற்ற பாலுறவு கொள்ளுதல் போன்ற காட்சிகளையே அதிகம் அமைக்கிறார்கள். இது உண்மையில் இளைய வயதினரிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது இயக்குனர் A.R.முருகதாஸ் மட்டுமே தனது படங்களில் இனி குடிப்பது,தம்மடிப்பது போன்ற காட்சிகளை வைக்க மாட்டேன் என்று உறுதியாக கூறியுள்ளார். இதுபோன்ற  புரட்சியை  எல்லா இயக்குனர்களும்,நடிகர்களும் கடைப்பிடித்தாலே போதுமானது. வளர் இளம் பருவத்தினர் மிக பயனடைவார்கள்.!
கத்தி,மெர்சல் போன்ற படங்களில் விஜய் சில அரசியல் வசனங்களை மிக அருமையாக பேசி நடித்துள்ளார். அதன் பிறகு தான் மத்திய அரசு தேசிய மருத்துவ ஆணையம் அமைத்தல் மேலும் பல ஊர்களில் மீத்தேன் எடுத்தல் போன்ற பல புதிய வதை திட்டங்களையும் கொண்டு வருகிறார்கள்.
ஒரு வேளை திரைப்பட நாயகர்கள் ஆட்சிக்கு வந்தால் கூட பெரிய மாற்றம் ஒன்றும் ஏற்பட வாய்ப்பில்லை. அதனால் திரைக் கதாநாயகர்கள் முதலில் எம்ஜிஆர் பாணியில் நல்ல குணங்களை மக்களுக்கு கற்றுக்கொடுக்கும் படங்களை எடுத்தாலே போதும். அதை விடுத்து நேற்றுவரை நல்லவை கேளாத செவியர்களாகவும்,
அறம் பேசாத  ஊமைகளாகவும் இருந்தவர்கள் இன்று கும்பலாக நானும் முதல்வர்தான் என்று தமிழகத்தை ஆளக்கிளம்புவது
மக்களுக்கு செய்யும் துரோகம்.
"எனக்கெல்லாம் ஐயாயிரம் ஓட்டுக்கூட போடமாட்டீர்கள் இல்லையா? அப்படியானால் ரஜினிக்கு ஓட்டுப்போடுங்கள்" என்று;தமிழருவி மணியன் போன்றவர்கள் கிளம்பியது  அவருக்கு ஓட்டுப்போடாத  மக்களை  பழிவாங்கும் நடவடிக்கை.!

-ஏகப்பிரியன் DYT

இன்னும் பேசுவேன் …

amyogatrust.blogspot.com
aumhearbals.blogspot.com

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...