I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: துடிக்கும் இதயம்

Tuesday, 2 January 2018

துடிக்கும் இதயம்

மனதோடு பேசுகிறேன்

6.தேவனாகலாம் வாருங்கள் …

" மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்
வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்
துணிந்துவிட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்
குணம்! குணம்! அது கோவிலாகலாம்...
ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம்
உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்களாகலாம்
யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்
மனம்! மனம்! அது கோவிலாகலாம்.. "

-கவிதேவன் கண்ணதாசன்

அனைத்து உயிரினங்களிலும் மனிதனே எல்லா வகையிலும் மேம்பட்டவனாக திகழ்கிறான். இந்த மேன்மையை மனிதன் அடைய ஒரே காரணம் அவனின் சிந்தனை திறன் மட்டும் தான். மற்ற உயிரினங்களுக்கு இல்லாது போனதும் அது மட்டும் தான். ஆனால்,இறைநிலை மற்ற உயிரினங்களுக்கு சில நல்லியல்புகளை இயற்கையாகவே வழங்கி உள்ளது. அதை அவைகள் ஒரு போதும் மீறுவதில்லை. மனிதனை பொறுத்தவரை தனது முயற்சியால் ஒழுக்க முறைகள்,மதம்,கல்வி,அரசியல்,சட்டம் என்று எத்தனையோ விசயங்களை மனித இனம் தொடர்ந்து கொண்டு வந்துகொண்டே இருக்கிறது. இதனால் சில மனிதர்களுக்கு ஒரு சில நன்மைகளும் கிடைக்கிறது. ஆனால்,உலகில் உள்ள மற்ற உயிரினங்களும், ஜீவராசிகளும் ,இயற்கையும்,ஏன் பல மனிதர்களும் கூட தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.வேதங்களின் கூற்றின் படி மனிதன் மட்டுமே முக்தி அடைய முடியும். மதங்கள் கூறும் வானவர்கள்,தேவர்கள்,தேவதைகள் யாருமே முக்தியடைய முடியாது. முக்தி அடைவதற்கான முதல் தகுதியே மனித பிறப்பாய் இருக்க வேண்டும் என்பது தான். ஆனால் ஏதோ ஒரு காலத்தில் எதற்காகவோ மனிதன் கண்டுப்பிடித்த மதங்களும், ஜாதிகளும் ,அரசியல் பேதங்களும் சுயநல சிந்தனைகளும் இன்று உலக உயிரினங்களுக்கே மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் முக்தியை நோக்கி முன்னேற வேண்டிய மனிதன் தன் நிலையை விட்டு  இன்னும் கீழ்நோக்கி செல்ல ஆரம்பித்துள்ளான்.இதன் காரணமாகவே கல்வி,மருத்துவம் என்று அனைத்தும் வர்த்தகமாகி விட்டதோடு,மத தீவிரவாதம் முதல் இயற்கை பேரிடர் வரை ஏற்பட்டு உலகே வீழ்ச்சியை நோக்கிப் பயணிக்கிறது.

" பறவைகள் விதைப்பதுமில்லை அறுப்பதுமில்லை தங்கள் களஞ்சியங்களில்  சேமிப்பதுமில்லை, ஆனாலும் அவை வானமளந்து வாழ்கின்றன, வையம் நிறைந்து வாழ்கின்றன. "  மனிதனும் இப்படி வாழ்ந்தவன் தான். அதன் பிறகுதான் தனது பிற்கால உணவிற்காக சேமித்தல்,தனது தலை முறைக்காக சொத்து சேர்த்தல்,ஊர் பொது காரியத்திற்காக,சாதிக்காக, மதத்திற்காக,தங்கள் கொள்கைக்காக,அதிக லாபத்திற்காக  என்று எத்தனையோ காரணங்களை கூறி பல மனிதர்கள் அடுத்தவனின் பங்கையும் சேர்த்து பதுக்குகிறார்கள். உண்மையில் இந்த பதுக்கல்காரர்களே சமூக விரோதிகள். ஆம் இயற்கையின்  இயல்பை சிதைத்தவர்களும் இவர்கள் தான்.
இதனால் தான்  " தேவைக்கு மேல் சேர்ப்பவன் திருடன் " என்றார் மகாத்மா காந்தி. இந்தியாவில் உள்ள மத நிறுவனங்களிலும் அரசியல் கட்சிகளிடமும் உள்ள செல்வத்தை மட்டும் பகிர்ந்து கொடுத்தாலே போதும்  இன்னொரு இந்தியாவையும் கூட நம்மால் வளமாக வாழவைக்க முடியும். ஆனால், நாம் இன்றும் உணவு, கல்வி,வேலை மருத்துவம், பாதுகாப்பு போன்ற அடிப்படை தேவைகளுக்காக அரசின் இலவசங்களை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம். அரசோ இவற்றை எல்லாம் தனியாருக்கு விற்றுவிட்டு. நம்மை மீண்டும் மீண்டும்  ஏமாற்றிக்கொண்டே இருக்கிறது.
ஒகி புயலால் குமரியில் மட்டும் ஒரு லட்சம் குடும்பத்தினருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர், இழப்புகளே கிட்டத்தட்ட 10,000 கோடிகள் [மனித இழப்புகளை சேர்க்கவில்லை]
இந்த இழப்புகளை ஈடு செய்ய குமரியில் உள்ள அரசியல்,கல்வி,மத,மருத்துவ விற்பனையாளர்களின் சொத்துக்களில் ஒரு பகுதியை கொடுத்தாலே போதும். ஒரே மாதத்தில் இழப்புகளை சீராக்கிவிடலாம். ஆனால்,மாவட்ட நிர்வாகமும் தொண்டு அமைப்புகளும் வெளிமாவட்டங்களிலும் வெளிநாடுகளிலும் உள்ள எளியவர்களிடம்  குமரிக்கு உதவுங்கள் என்று கோரிக்கை வைத்து, ஏற்கனவே கல்வி,மருத்துவ,மத, அரசியல் வியாரிகளுக்கு கொடுத்தது போக தனது அவரசத்தேவைக்கு எளியவர்கள் சேர்த்து வைத்துள்ள பணத்தையும் கேட்கிறார்கள். ஒரு ஆன்மீக குரு குமரிக்கு வந்தபோது … கட்டணமாகவும் நன்கொடை யாகவும் அவர் வசூலித்து சென்ற தொகை மட்டும் சுமார் பத்துகோடி,ஒவ்வெரு ஆண்டும் முக்கிய அரசியல் கட்சிகள் மட்டும் குமரியில் திரட்டும் கட்சி வளர்ச்சி நிதி கிட்டத்தட்ட 5 கோடிகள். இன்னும் மருத்துவம்,கல்வி இந்த இரண்டு துறையிலும் தமிழகத்திலேயே அதிக பணம் வசூலிப்பவர்கள் குமரி மருத்துவ,கல்வி சேவகர்களே. இவ்வளவு பணம் மேற்படி நபர்களிடம் குவிந்து கிடக்கும் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு எளியவர்களிடம் வசூல் செய்து பிஸ்கெட்,பிரட் மற்றும் அலுமினியப் பானைகளையும் பாய்,போர்வைகளையும் வாங்கிக் கொடுப்பதில் எந்த விதமான பெரிய நன்மைகளையும் அடைய முடியாது. அரசு பேருக்கு உதவுகிறது வீட்டில் ஒரு பகுதி  இடிந்திருந்தால் ஐயாயிரம், வீடே இடிந்திருந்தால் அம்பதாயிரம், ஒன்றரை ஏக்கர் விவசாய நிலம் அழிந்திருந்தால் 10,000. விவசாயி உயிருக்கு 5 லட்சம் மீனவன் உயிருக்கு 20 லட்சம் - இது ஒரு  புதுமையான அரசு நிவாரணம். அதையும் இதுவரை ஒரு சிலருக்கே வழங்கி உள்ளனர். எல்லாம் முடிந்து முக்கால்வாசி பேர் கடனை கிடனை  வாங்கி பல இழப்புகளை சீர்செய்த பின்  இப்பொழுதுதான் மத்தியஅரசு குழு வந்து ஆய்வு செய்து சென்றிருக்கிறது.
பெருமழை,புயல் போன்றவை தாக்கிய பகுதியில் இருப்பவர்களுக்கு முதல் வாரம் மட்டும் உணவு,உடை,மருத்துவம் உள்ளிட்ட உடனடி நிவாரணம் தேவைப்படும். அடுத்து புணரமைப்பு மற்றும் தங்கள் வாழ்க்கையை சீராக்கி கொள்வதற்கு தேவையான உதவிகளே தேவைப்படும். புயல் முடிந்து ஒரு மாதம் கழிந்த பின் இன்னும் சிலர் பிரெட்டையும், பிஸ்கெட்டையும் வழங்கி வருவதை பார்த்து சில பாதிக்கப்பட்டவர்களே இதெல்லாம் போதும். எங்கள் நிலையை சீராக்க ஏதேனும் உதவிகள் செய்யுங்கள் என்று கேட்கிறார்கள். அரசு நிவாரணம் போதாது. குமரியில் உள்ள பெரிய அமைப்புகளோ,செல்வந்தர்களோ கூட தங்கள் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு ஊரை தத்தெடுத்து  அதை புணர்நிர்மானம் செய்ய உதவலாம்.அதன் பெயரில் அரசின் சலுகைகளையும் பொது மக்களின் உதவியையும்  கேட்டுப் பெறலாம். மனமுள்ள மனிதர்கள் தங்கள் அருகில் உள்ள பாதிக்கப்பட்ட ஒரு சிலருக்காவது உங்களால் முடிந்த அதிகப்பட்ச உதவிகளை செய்யலாம்.  ஒரு லட்சம் ரூபாய்க்கு பாத்திரம் பண்டங்களை வாங்கி 200 பேருக்கு வழங்குவதை விட அதை இரண்டு மூன்று பேருக்கு பணமாகவோ அவர்கள் வாழ்க்கைக்கு மிகவும் உபயோகப்படும் கருவியாகவோ கொடுத்தால் சிறந்த உதவியாக இருக்கும். கடந்த சுனாமியில் பாதிக்கப்பட்ட குமரியை சேர்ந்த வர்களுக்கு,ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் இலவசமாக நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை கட்டிக்கொடுத்திருந்தது. ஒகி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இது போன்ற பணியை நீங்கள் செய்யலாமே? என்று நான் அவர்களிடம் கேட்ட போது அவர்கள் கூறிய பதில் அதிர்ச்சியாக இருந்தது.  அதாவது அவர்களின் மத அமைப்பின் மூலம் வெளிநாடுகளில் பணம் வசூல் செய்துதான் சுனாமியின் போது வீடுகளை கட்டிக்கொடுத்தார்களாம்.தற்போது வெளிநாட்டில் இருந்து இந்தியாவில் உள்ள எந்த டிரஸ்ட் கணக்கிலும் பணம் போடக்கூடாது. என்று;மத்திய அரசு தடை விதித்துள்ளதால், எங்கள் வழக்கான அன்பு இல்ல பராமரிப்பு பணிகளுக்கான நிதியையே எங்களால் திரட்ட முடியாமல் சிரமப்படுகிறோம், இதில் நாங்கள் எங்கே வீடு கட்டிக்கொடுப்பது, செங்கல் கூட வாங்கிக்கொடுக்க முடியாது. என்றார் அவர்; மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக்கொளுத்திய செயல் இதுதான்  போல. வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தை வைத்து மதத்தை பரப்புகிறார்கள் என்று கூறி மத்திய அரசு ஒட்டு மொத்தமாக இந்தியாவில் நடக்கும் எந்த சேவைக்கும் பணம் வருவதை தடுத்துவிட்டது. (வளர்ச்சி திட்டத்தில் இதுவும் ஒன்று)  இனி ஒகி புயலால் வீடு இழந்தவர்களுக்கு மத்திய அரசே வீடு கட்டிக்கொடுத்தால் தான் உண்டு.!

நான் சென்னையில்  இருந்த போது…ஒரு வெள்ளிக்கிழமை எழும்பூர் கெனட்லைனில் உள்ள பள்ளிவாசலில் தொழுதுவிட்டு எனது நண்பரோடு வெளியே வந்தால் … அங்கே ஒருவர் கையில் 50 ரூபாய் கட்டை வைத்துக்கொண்டு பிச்சைக்காரர்களுக்கு ஆளுக்கு ஒன்றாய் கொடுத்துக்கொண்டிருந்தார் … இதைப்பார்த்த எனது நண்பர்  வா நாமும் போய் வாங்கலாம் என்று அழைத்தார். எனக்கு வேண்டாம் … என்று நான், மறுப்பதற்குள் அவர் வேகமாக போய் கையை நீட்ட அவருக்கும் வள்ளல் 50 ரூபாயை கொடுத்தார். இதை கவனித்த  எனது நண்பரைப்போல போலி பிச்சைக்காரர்கள் பலரும் போய் கையை நீட்டி பணம் பெற்று சென்றனர். இந்த சம்பவம் எனக்குள் சிந்தனையை தூண்டியது … நாம் தங்கி இருக்கும் அறையின் முன் பணமே மூவாயிரம் தான்,ஐயாயிரம் பணம் இருந்தால் இன்றைக்கு  ஒரு வண்டியில் டிபன் கடையே போட்டு விடலாம்,ஒரு குழந்தையின் பள்ளிக்கட்டணத்தை கட்டலாம், உடல் முடியாத ஒருவருக்கு எளிய அறுவை சிகிட்சை செய்யலாம்,ஒரு ஏழை குடும்பத்திற்கு இரண்டு மாத உணவுத்தேவையை நிறைவேற்றி விடலாம்,ஒரு நாள் சூட்டிங் வைத்து ஒரு குறும்படம் எடுத்துவிடலாம். உண்மையிலேயே சிரமப்படும் ஒருவருக்கு இந்த ஐயாயிரத்தை மொத்தமாக கொடுத்தால் எவ்வளவோ ஆறுதல் அடைவார்கள். ஆனால்,ஒரு தொப்பிப்போட்ட அறிவாளி; இந்த பணத்தை வைத்து நொடியில் பல பிச்சைக்காரர்களை உருவாக்கி விட்டானே.! என்று மனதில் குமுறினேன். இந்த எண்ணமே உணவை பகிர்ந்து கொடுப்பது நல்லது,பணத்தை முடிந்தவரை மிக அத்தியாவசிய முள்ள ஒன்றிரண்டு பேருக்கு  மொத்தமாக கொடுப்பதே பயன்தரும்.என்ற உண்மையை எடுத்துக்கூறியது.
சுனாமியின் போது, சில திரைப்படக் கல்லூரி மாணவர்களோடு சேர்ந்து சென்னையில் உள்ள முக்கிய வீதிகளில் சுனாமி நிவாரண நிதி என்ற பேனருடன் வலம் வந்து ஒரே நாளில் 18 ஆயிரம் ரூபாய் பணம் வசூல் செய்து அதோடு எங்கள் அனைவரின் சார்பாக ஒரு பத்தாயிரம் சேர்த்து பதினெட்டாயிரமாக  சுனாமியில் தனது தள்ளு வண்டி டிபன் கடையை இழந்த மாரிமுத்து என்பவரிடம் மொத்தமாக கொடுத்தோம்.  அவர் அதன் பிறகு  ஒரு இடத்தையே வாடகைக்கு எடுத்து ஒரு உணவகம் தொடங்கினார். ஒகி புயல் பாதிப்பில் நம்மால் முடிந்த ஒரு சிலருக்காவது நேரடியாக உதவ வேண்டும். என்று சிந்தித்தபோது நமக்கே நிறைய தேவைகள் இருக்கிறதே? இந்த நிலையில் நாம் எப்படி   பிறருக்கு உதவ முடியும் என்று தோன்ற " எனது தேவைகள் தீர்ந்ததும் சேவை செய்கிறேன் என்பது - கடலில் அலை ஓய்ந்ததும் குளிக்கிறேன் என்பதைப் போன்றது " என்று எனக்குள் ஒரு குரல் கேட்டது. சரிதான்.! என்றபடியே நமது " ஆதிமருத்துவம் " நூல் விற்பனையில் ஒவ்வெரு நூலிற்கும் 100 ரூபாய் விதம் எடுத்து 500 நூலிற்கு ஐம்பதாயிரம் ஒகியால் பாதிக்கப்பட்ட ஒரு சிலருக்கு வழங்க திட்டமிட்டுள்ளோம். இதன் முதல் கட்டமாக நூல் வெளியீடான ஜனவரி 21/2018 பாதிக்கப்பட்ட ஒரு விவசாயிக்கு பத்தாயிரம் வழங்க உள்ளோம். எனது சிந்தனை தெளிவானது என்று நீங்கள் நினைத்தால் … நீங்களும்  உதவி தேவையானவர்களை நேரில் சந்தித்து உதவி செய்யுங்கள். அரசு உதவி செய்யட்டும், தொண்டு அமைப்புகளில் இருப்பவர்கள் கொடுக்கட்டும். என்றெல்லாம் கூறி அமைதியாக இருந்து விடாதீர்கள்.பிறர் துன்பம் கண்டு துடிக்கும் இதயத்திற்கே மனிதன் என்று பெயர் … அப்படிப்பட்ட மனிதர்களே தேவனாகிறார்கள்.

நலம் பெருகட்டும் …

இன்னும் பேசுவேன் …

-ஏகப்பிரியன் DYT

aumherbals.blogspot.com
amyogatrust.blogspot.com

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...