மிட்டாய்_தீட்சையும்
மெய்யுணர்வு_தியானமும்
---ஏகப்பிரியன்---
தியானம் என்பது உயிரை உணரச்செய்வதற்கான வழிமுறை மட்டுமல்ல உடலை முழு விழிப்புணர்வோடும் சக்தியோடும் இயங்க செய்வதற்கான கருவி. தற்காலத்தில் தியானம் பற்றிய தெளிவின்மையும் கற்பனையும் மக்களிடம் மிக அதிகமாக காணப்படுகிறது.
சற்று எழுதும் திறன் கொண்டவர்களும் பேச்சாற்றால் உள்ளவர்களும் ஞானிகள் என்று அறியப்பட்டவர்களும் அதுபற்றிய கற்பனை கதைகள் பெருகுவதற்கு காரணமானவர்கள்.
முதன்முதலில் தியானம் பற்றிய தெளிவான புரிதல்களை வழங்கியவர்கள் பதஞ்சலி,கௌதம புத்தர்,சிவவாக்கியர் போன்றோர்களே.
இவர்கள் துறவிகளாக இருந்ததும் பிற்காலத்தில் தோன்றிய இராமகிருஷ்ண பரமஹம்சர், இராமச்சந்திரர்,இரமணர்,
விவேகானந்தர் போன்ற தியானிகளும் அப்படியே தோன்றியதாலும் தியானம் என்பது எதோ மடத்து மந்திரவாதம்,துறவு வாழ்க்கையின் முதல்படி என்றெல்லாம்
பலரும் பயந்திருந்த காலத்தில் அமெரிக்கா சென்று இல்லறவாசிகள்,புலால் உண்பவர்கள்,அரசியல்வாதிகள்,
தொழில் வல்லுனர்கள்,வாலிபர்கள் என்று பலருக்கும் தியானத்தை கற்பித்து
அதை விஞ்ஞானப்பூர்வமாக அணுக வழிகாட்டியவர் சுவாமி விவேகானந்தர்.
அதே வழியில் அதன்பிறகு வந்த ஓஷோ,பரஞ்சோதி மகான்,வேதாத்ரி மகரிசி போன்ற ஞானிகளும் தியானம் மீதிருந்த அச்சத்தைப் போக்கி தியானம் என்பது உயிர்களின் அடிப்படைத்தேவை என்பதை உணர்த்தி கண்ணில் படுவோர்க்கெல்லாம் கற்பிக்க ஆரம்பித்தனர்.
இதன் பிறகு ஆசிரியர்கள், விளையாட்டு,கலைகளை கற்பிப்பவர்கள்,திரைப்படக்கலைஞர்கள் என்று பலரும் தங்கள் துறை சார்ந்த விசயங்களில் தியானத்தை ஒரு பகுதியாக இணைத்து விட்டனர்.இப்பொழுது உள்ள கார்ப்பரேட் சாமியார்கள் தங்கள் சமயோசிதம் போல தியானத்திற்கும் வாழ்க்கைக்கும் புதுப்புது விளக்கங்களை கூறி மக்களிடம் மீண்டும் குழப்பத்தை விதைக்கிறார்கள்.
தியானம் செய்வதால் நமது நாடித்துடிப்புகள் சீராகி மனம் முழுமையாக அமைதியாகி
விடுவதால் உடல் சக்திவிரயம் தடுக்கப்படுகிறது.இதன் காரணமாக இதுவரை இடைவிடாத எண்ணங்களால் சோர்வுற்று நலிவடைந்திருந்த மனமும் உடலும் புதிய ஆற்றலுடன் செயல்பட்டு தங்கள் தேவைகள் எதுவாய் இருந்தாலும் அதை அடைய தேவையான முழுமையான ஆற்றலை பெறுகிறது.நான் கூறுவது தியானம் பற்றி மருத்துவ விஞ்ஞானம் கூறும் ஆரம்ப பயன்.
தியானம் பற்றிய பெரிய புரிதல் இல்லாவிட்டாலும் கூட பலரும் சங்கடமான சூழலில்,உத்வேகம் தேவையான நேரத்தில் சிறிது நேரம் கண்மூடி இருப்பதை ஒரு வழக்கமாக கொண்டுள்ளனர். இதுவே பெரிய சக்தியை வழங்குவதை அவர்கள் உணருவார்கள்.இப்படி ஆரம்பிக்கும் தியானம் அதன்பிறகு பல்வேறு வழிமுறைகளை கடந்து நம்மை மாபெரும் வெற்றியாளனாகவோ, மடத்து அடிமையாகவோ,அல்லது உண்மை ஞானியாகவோ ஆக்கும். இந்த ஞானம் என்பதில் மட்டும் இன்னும் கற்பனைகள் அதிகமாக தோன்றிக்கொண்டே உள்ளது.ஞானியானால் காட்டுக்கு சென்றுவிடுவான்,குடும்பத்தை விட்டுவிடுவார்கள்,குருபக்தியில் திளைத்து அழிந்து விடுவார்கள் என்றெல்லாம் பல கற்பனைகள் இன்றும் நிலவுகிறது. இதற்கு உரமிட்டு வளர்ப்பவர்கள் பலர்.ஆனால் இதில் உண்மை மிக குறைவு.ஞானியானவன் எல்லாம் குடும்பத்தை விட்டு தனியாக போவதில்லை.சிலர் போயிருப்பார்கள்.தன்னை உணர்ந்தும்,ஞானியாய் இருந்தும் தங்கள் தொழில்களிலேயே நீடித்து இல்லறத்தை நடத்துபவர்கள் பலர் உள்ளனர். ஆகையால் தியானம் ஞானத்தின் திறவுகோலாய் இருப்பதாலோ அல்லது பல சித்தர்களும் ஞானிகளும்;எல்லாம் துறந்து காட்டை நோக்கி போனார்கள் என்பதாலோ தியானம் செய்வது ஆபத்தானது,ஒரு குருவிடம் தீட்சை வாங்குவது பெரிய முட்டாள்த்தனம் என்று கூற முடியாது.
ஏனெனில் தியானம் என்பது மனிதனின் பிறப்புரிமை, ஞானம் மனிதனின் பெருமை.தியானத்தின் மூலம் மனிதனுக்குள் ஏற்படும் பலகட்ட மாற்றத்திற்கு பிறகே ஒருவன் ஞானியாகிறான்.தியானியாக இல்லாதவன் கூட மனவெளியில்
தடுக்கி விழுந்து திடீர் ஞானியாக நேரிடலாம்.இதில் அச்சப்படவோ,இனியும் ஆராய்ச்சி செய்யவோ ஒன்றுமே இல்லை.
புத்தன் முதல் வேதாத்ரி மகரிசி வரை எத்தனையோ சித்தர்களும் ஞானிகளும் போதுமான அளவு உணர்ந்து,முயன்று,வழிகாட்டி முக்தியடைந்து விட்டார்கள்.தியானமும் ஞானமும் இந்தியாவின் பாரம்பரியச்சொத்து.குறிப்பாக தமிழனின் மரபணுவிலேயே தியானம் பினைந்துள்ளது.அதை நினைவுப்படுத்தி தூண்டிவிட மட்டுமே குரு தேவைப்படுகிறார்.
நான் எனது 15 வயதிலேயே தியான உணர்வைபெற்றுவிட்டேன்.பல தியான குருமார்களிடமும் தீட்சை வாங்கி உள்ளேன்.05/10/2019 அன்று எனது மகன் இஜாஸ் தனது 22 வது வயதில்; மெய்ஞ்ஞானி பரஞ்சோதி.
ஞானப்பிராகாசரிடம் மிட்டாய் தீட்சையும் குண்டலினி மெய்யுணர்வு தியானமும் பெற்றுக்கொண்டான்.அவனோடு நானும் மேலும் பலரும் தியான தீட்சை பெற்றோம்.இந்த பயிற்சியில் எடுத்த வீடியோவை பார்த்த ஒருசில முகநூல் நண்பர்கள் பிழைப்பை பாருங்க நண்பரே தியானத்தில் நீங்கள் தொலைந்தது போல் உங்களை சார்ந்தவர்களையும் தொலைத்து விடாதீர்கள்.என்ற ரீதியில் கைப்பேசியில் அழைத்து கர்ஜித்தனர்.அட அறிவாளிகளே,
விவேகானந்தர்,பாரதி,பரஞ்சோதி
மகான்,வேதாத்ரி மகரிசி என்று எத்தனை யோ ஞானிகள் தங்கள் விழிப்புணர்வால் மெய்யுணர்வை உணர்த்திச்சென்றாலும் நீங்கள் மீண்டும் மீண்டும் தியானம் ஆபத்தானது என்று ஒன்றிலிருந்து ஆரம்பிப்பதை பார்த்தால் வேடிக்கையாக உள்ளது.
#எனது புதிய அனுபவம் பரஞ்சோதி மகானின் உலக சமாதான ஆலயத்தின் குண்டலினி தீட்சையாக மூலாதாரத்திலிருந்து ஆறாதாரத்திற்கு கைகளால் தூண்டி மிட்டாயைவழங்கினார்கள். கண்மூடி அமர்ந்து அதன் சுவையை நெற்றியில் உணர வேண்டும்.நெற்றியில் குளிர்ந்த நீரை தடவிவிட உணர்வு அந்த இடத்தில் நிலைக்கும்;அடுத்து வெங்கல மணியை அடிக்க நெற்றியில் அதன் ஓசை ஆழமாக ஊடுருவிச்சென்றதையும் மனம் பல கணங்கள் மனமற்று இயங்கியதையும் என்னால் முழுமையாக உணர முடிந்தது.
20 நிமிடம் போனதே தெரியவில்லை.புத்தரின் விழிப்புணர்வு தியானமான விபசனாவிற்கும் பரஞ்சோதி மகானின் மெய்யுணர்வான குண்டலினி தியானத்திற்கும் ஒரு சிறிய நூலிலை வித்தியாசம் தோன்றியது.அதை ஆராய்ந்து அனுபவித்து வருகிறேன்.
இந்த கணத்தில் நானே மெய்யுணர்வாகவும் பரஞ்சோதி மகானாகவும் இருக்கிறேன்.! சிலர் இன்னும் மகான் கூறிய கருத்தில் உள்ள ஐயங்களையும் மகானின் வாழ்க்கை முறையில் சில கேள்விகளையும் எழுப்புகிறார்கள். அதன் விடை தெளிந்த நீரோடையின் அடியில் மிளிரும் வடிவ கற்கள் போல எனக்கு தெளிவாக தெரிகிறது.தேவைப்படின் அதை பின்னர் விளக்குவோம்.!வாழ்க வளமுடன்.!
🍁🍁சந்தோசம்🍁🍁
www.aumherbals.com
No comments:
Post a Comment