*உயிர் மீட்கும் மருத்துவம்*
55.நானும் எனது படைப்புகளும்
" மொழிஞானம் அறிகிலேன்
விஞ்ஞானம் தெரிகிலேன்
அஞ்ஞானம் அகன்றதால்
மெய்ஞ்ஞானம் பகர்கிறேன்.! "
" தாயால் வந்தேன் தமிழால் அறிவுபெற்றேன் நாயே நேற்று உன்னை நடுத்தெருவில் சந்தித்தேன் நீ யார்என்னை நில்லென்று சொல்ல " என்ற இந்த பட்டுக்கோட்டையின் வரிகளே எனக்கு எதையாவது எழுத வேண்டும். என்ற உந்துதலை தந்த வரிகள்.முதன் முதலில் சென்னை கன்னிமாரா நூலகத்தில் நடந்த வாசகர் செய்தி பகர்வு திரையில் " தாயிற் சிறந்த சொந்தமுமில்லை
நூலிற் சிறந்த நண்பனுமில்லை "
என்ற கருத்தை பதிந்து கீழே எனது பெயரை எழுதினேன். இதை, அருகில் இருந்த சிலர் படித்து மிக அருமையாக இருக்கிறது. என்றுகூறி பாராட்டு தெரிவித்தனர். இந்தப்பாரட்டு தந்த மிதப்பில் எங்கள் ஊரில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மைய்யமாக வைத்து " ஜெய்லானி " என்ற பெயரில் புதிய பெண்ணியம் இதழுக்கு ஒரு சிறுகதை எழுதி அனுப்பினேன்.பிறகு திரைப்படக் கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து மனிதம்,செவ்வணக்கம்,ஆட்டோக்காரன் போன்ற சில குறும்படங்களை இயக்கினேன்.ஒரு நாள் மணிமேகலை காப்பியத்தை எதேச்சையாக படிக்க நேர்ந்த போது அதில் உள்ள ஆன்மீக கருத்தால் ஈர்க்கப்பட்டு மணிமேகலை காப்பியத்தை 111 காட்சிகளாக பிரித்து அதற்கு திரைக்கதை, வசனம் எழுதி எனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து தொலைகாட்சி தொடராக தயாரிக்க, மக்கள் டிவி,கலைஞர் டிவி,வசந்த் டிவி, போன்ற பல சேனல்களுக்கும் படையெடுத்தேன். இதையெல்லாம் இந்த காலத்துல யாருங்க பார்ப்பாங்க, ஒரு எபிசோடுக்கு முப்பதாயிரம் விதம் 13 எபிசோடுக்கு முதலிலேயே பணம் கட்டினால் நேரம் ஒதுக்குவோம். ஆனால்,இது ரெம்பவே கடினமான முயற்சி லாபம் வரும் என்று எதிர்ப்பார்க்க முடியாது. என்று ஆளாளுக்கு பயம் காட்ட நமது இரண்டு நண்பர்களும் திரைக்கதையை நீயே வெச்சிக்க ஆளைவிடுனு என்னிடம் கூறி கழன்று விட்டனர்.! இந்த முயற்சியில் செலவழிந்த பணமும் உழைப்பும் இன்னும் பரணில் தூங்கிவருகிறது.!
இது போன்றே நண்பர் ஒருவர் இயக்குவதற்காக நான் எழுதிகொடுத்த தீராதது என்ற திரைக்கதையும் இன்னும் தீராமல் தூங்கிவருகிறது.
இந்த நிலையில் எதிர்பாராத விதமாக சில நண்பர்களின் உதவியோடு மஹாயோகா என்ற நூலை எழுதி வெளியிட்டேன்.இது மிகப்பெரிய வரவேற்பு பெற்று. எனக்கு பல வெளிநாட்டு யோகா மாணவர்களையும் பெற்றுத் தந்துள்ளது.!
அடுத்து நமது மாணவி ஒருவர் பார்த்துக் கொண்டே யோகா செய்வதற்கு ஒரு வீடியோ இருந்தால் நல்லது என்றதால் நமது முதல் டிவிடியான ஆழ்நிலை யோகா வீடியோவை வெளியிட்டோம். அதுபோலவே சக்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவர்களை யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் முறையால் படிப்படியாக இயல்பு நிலைக்கு கொண்டு வந்து, ஆய்வுப்பூர்வமாக யோகாவால் சக்கரை இயல்பு நிலைக்கு வரும்.என்று நம்மால் நிரூபிக்கப்பட்ட உண்மையை, பலருக்கும் உதவும் விதமாக " இன்சுலின் என்ற ஆவணப்படமாக தயாரித்தோம்.! இப்பொழுது உயிர் மீட்கும் மருத்துவம் என்று நாம் நமது வாட்ஸ் அப் குழுவில் எழுதி வரும் தொடர் கட்டுரைகளை படிக்கும் பல நட்பாளர்கள்,மிக அருமையாக உள்ளது.இதை ஒரு புத்தகமாக வெளியிடுங்கள். என்று கூறி வந்ததால் தற்போது புத்தகம் வெளியிடுவதற்கான அடிப்படை வேலைகள் நடந்து வருகிறது.<பிரபஞ்ச ஆற்றலால் இந்த மாதமே இந்த வேலை சிறப்பாக நிறைவுறும்>
அடுத்து ஆன்மீக எழுச்சியை ஏற்படுத்தும் ஆறு பாடல்கள் கொண்ட ஒரு இசை ஆல்பம் வெளியிட திட்ட மிட்டுள்ளோம்.!
நிறைய எழுதி ஒரு திரைப்பட கலைஞனாக வேண்டும் என்று நான் முன்பு பல கனவுகளோடு உழைத்து வந்தேன். அன்று எனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஆனால்,இன்று நான் அமைதியாக எதையோ எழுதுகிறேன். அத்தனையும் பல நட்பாளர்களை கவருகிறது. எனக்கு உண்மையிலேயே தமிழ் இலக்கணம் தெரியாது. ஆனாலும், எனது எழுத்து வெல்கிறது. இதற்கு முக்கியக்காரணம் என்னவென்றால் அதில் இருக்கின்ற உண்மையும் உணர்ச்சியும் தான் என்று நினைக்கிறேன். இதுவரை 55 பகுதிகளாக வந்துள்ள உயிர் மீட்கும் மருத்துவம் பகுதியை உள்வாங்கிய அத்தனை இதயங்களுக்கும் மனமார்ந்த
நன்றி அடுத்து வரும் <56> கேள்வி பதில் பகுதியோடு இந்த தொடர் நிறைவுறும்.! என்னை கவர்ந்த எனது சில பதிவுகளை இதில் இணைத்துள்ளேன். படித்து உங்கள் கருத்துகளை கூறுங்கள் நட்பாளர்களே …
ஒரு பிராத்தனை
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் …
எல்லோரும் இன்பம் பெறுக
எல்லோரும் அமைதி பெறுக
எல்லோரும் ஆனந்தம் பெறுக
எல்லா உயிர்களும் மேன்மையடைக …
உயிர் நிறைந்தக் காற்றை பெறுக தாய்மடி அமுதைப் பெறுக
பலம் தரும் நீரைப் பெறுக
உடல் வளர்க்கும் உணவைப் பெறுக நிலையான கல்வி பெறுக
வளமான வாழ்வை பெறுக
நலமான நட்பை பெறுக
உள்ளத்தில் உண்மை பெறுக
எல்லோரும் இன்பம் பெறுக …
அழகான இல்லம் பெறுக
இதமான உறக்கம் பெறுக
தொடர்கின்ற சுற்றம் பெறுக
உடன் வரும் முற்றம் பெறுக
மனம் நிறைந்த பணியைப் பெறுக
புவி உயர்த்தும் பதவிகள் பெறுக
அன்பான துணையைப் பெறுக
பண்பான பிள்ளைகள் பெறுக
எல்லோரும் இன்பம் பெறுக
எல்லோரும் அமைதி பெறுக
எல்லோரும் ஆனந்தம் பெறுக
எல்லா உயிர்களும்
மேன்மையடைக …
தினம் கொடுக்கும் இதயம் பெறுக
நலம் உரைக்கும் நாவைப் பெறுக
சிந்தையது செம்மை பெறுக
செயலெல்லாம் வெற்றி பெறுக
அறம் உரைக்கும் குருவைப் பெறுக
தவம் வழுவா நிலையைப் பெறுக
இறைமீது பக்தி பெறுக …
அது போதும் முக்தி அடைக !!!
ஒரு அனுபவம்
கடல் பதிந்த தடங்கள்
----------------------------
முக்கடல் மட்டுமல்ல முந்நூறு மொழிகளும், எண்ணில்லா உணர்வுகளும் சங்கமிக்கும் இடம்
கன்னியாகுமரி; கடற்கரை.!
கொளுத்தும் வெயிலில் கூட சில்லென்ற உணர்வை தரும்
அதிசய பூமி கன்னியாகுமரி கடற்கறை.!
எனது சிறுவயதில் இந்தப் பகுதியிலேயே பல மாதங்கள்
படுத்து, புரண்டு, ஒடி, விளையாடிய
அனுபவங்கள் உண்டு.என்றாலும், நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று நான் பார்த்த கடற்கரை என்னுள் புதிய அலைகளை உருவாக்கி, எனது பால்ய மதிப்பீடுகளான மணல்கோட்டையை
இடித்து சுவடின்றி ஆக்கியது.!
நான் யோகா வகுப்பெடுப்பதற்காக …
இப்ப ஒரு வாரமாக கன்னியாகுமரி வருகிறேன்.! காலை பத்தரையிலிருந்து பதினொன்றரை வரை வகுப்பு. சில நாள் வகுப்பு
முடிந்ததும், சிலநாள் முன்னாடியே வந்து கடலை தரிசித்துவிட்டு பிறகு வகுப்பிற்கு செல்வது எனது வழக்கம்.
இன்றைக்கும் அப்படித்தான்
காலை எட்டு மணிக்கே கடற்கறைக்கு வந்துவிட்டேன்; எனென்றால்
எட்டு மணிமுதல் ஒன்பது மணிவரை இருந்த இன்னொரு வகுப்பு,இன்று இல்லை. இது சுற்றுலா பருவகாலம் என்பதால் நிறைய வண்டிகளிலும், நடந்தவாறும் சுற்றுலா பயணிகளின் வருகை களைகட்டிக் கொண்டிருந்தது … நான் எனது சைக்கை <பைக்> காந்தி மண்டபம்
நோக்கி செலுத்த முனைந்தேன்; ஆனால் அங்கு ஒரு தற்காலிக தடையை ஏற்படுத்தி இருந்தார்கள்.
அருகே ஒரு போக்குவரத்து காவல் ஆய்வாளர் மட்டும் நின்றிருந்தார். நமது வண்டி போக
இடமிருந்ததால் நாம் செல்ல முயன்றோம். உடனே ஆய்வாளர் நம்மை நிறுத்தி ஆவணங்களை
சரி பார்த்து அனுப்பினார்.!
சைக்கை காந்தி மண்டபத்தின் அருகே நிறுத்திவிட்டு கடற்கரை நோக்கி நடந்தேன் …
நிறைய தற்காலிக கடைகள் களை கட்டியிருந்தது. சட்டை, பனியன், நவீன முக்<கால்>கா சட்டை, என்று எங்கும் துணிகள் பளபளவென்று மின்னலடித்தது. ஆனால் , அதை வாங்க யாரும்
ஆர்வம் காட்டியதாக தெரியவில்லை.
கடற்கரையில் இருக்கும் ஒவ்வொருவரும் ஆளுக்கு பத்துஜோடி எடுத்தாலும் இதெல்லாம் தீராது போல.!
நான் போனவாரம் என் மகனுக்கு
ஒரு கால் சட்டை எடுத்தேன். அடுத்த நாளே தையல் விட்டுவிட்டது.! ஆனாலும் 100 ரூபாய்க்கு அது மலிவுதான்.! இந்த கடற்கரையில் துணி விற்கும் பலரும் இந்தி வாலாக்களே; ஆனாலும், கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சும் தமிழ் பேசுகிறார்கள்.! விலையை கால்வாசியாக குறைத்துக்கேட்டால் காசில்லா கஸ்மாலம். என்று மோனையாய் திட்டுகிறார்கள்.
ஒன்றிரண்டு குதிரைகள் ஒரமாய் சவாரிக்காக காத்திருந்தன. மக்கள் கடலை பார்த்தவாறும், சில இளசுகள் கடலை போட்டவாறும்
சென்று கொண்டிருந்தனர். … என் எதிரே வந்த ஒரு கண்ணாடி வியாபாரி பாபா, கிளாஸ் வேணுமா? என்றார்; தலையை வல, இடமாக ஆட்டிக் கொண்டே வந்து ஒரு இளநீர் கடையில் இளநீர் வாங்கி குடித்துக்கொண்டே விவேகானந்தர் பாறையையும்
திருவள்ளுவர் சிலையையும்
பார்த்தேன் … எனக்கென்னவோ, திருவள்ளுவரை கொஞ்சம் தள்ளி வேறு ஒரு இடத்தில் வைத்திருக்கலாமோ என்று தோன்றியது. ஏனென்றால் திருவள்ளுவர்; விவேகானந்தர் மண்டபத்தின் அழகை தனது பிரமாண்டத்தால் மறைத்து விடுகிறார். அந்தப் பகுதியில் சில வாலிபர்கள் நண்டு பிடித்துக் கொண்டிருந்தனர் சின்னச்சின்ன
குட்டி நண்டுகள் … பாறை இடுக்குகளில் அங்குமிங்கும் தாவி ஒடிக்கொண்டிருந்தன , அதைப்பிடித்து தன் கையில் உள்ளச் சிறிய நெகுழிப் பையில்
போட்டுக் கொண்டே வந்தான் ஒருவன். அவனுக்கு உதவியாக இன்னும் இரண்டுபேர் பாறை மேடெல்லாம் ஏறி அவனைத் தொடர ஒருவன் ஓரமாக நின்று , இவர்களை அழைத்து கொண்டிருந்தான்; அந்த நேரம் பார்த்து வந்த ஒரு சிறு அலை நண்டுப்பிடுத்துக் கொண்டிருந்தவனை தடுமாறச் செய்யவே பை நழுவி கடலில் விழுந்தது. நெகிழியில் இருந்த நாலைந்து நண்டுகளும் பையோடு கீழே விழுந்து குதித்து ஓடியது. இதை சற்றுத் தூரத்தில் இருந்துப் பார்த்து கொண்டிருந்த அவரின் நண்பரும் ,இன்னும் சிலரும் பார்த்து
ஊளையிட , அமைதியாய் தொப்பலாய் நனைந்த சுரங்கத்துணி கால்ச்சட்டையை உதறிக்கொண்டே
அவனும் மற்ற நண்பர்களும் காரையை நோக்கி நகர்ந்தார்கள்.! நெகிழிப்பை; நண்டை விடுவித்த மகிழ்ச்சியோடு கடலில் இறுமாப்பாய் மிதந்து கொண்டிருந்தது.!
எம்மீனுக்கு எமனாகுமே?
எதுக்கு இந்தப் பிள்ளைக , நண்டைப் பிடிச்சாங்க, இப்ப ஏன் பேசாம போறாங்க?.
என்று சிந்தித்தவாறே திருவள்ளுவர் சிலையை பார்த்தவாறு இருக்கும்
சுற்றுச் சுவரில் அவரைப் பார்க்காமல், முக்கடலும் சந்திக்கும் இடத்தில் குளிக்கும் மக்களை பார்த்தவாறு ஒரு துண்டை விரித்து அமர்ந்தேன் …
நமது காலத்தில் பஞ்சி மிட்டாய் கேட்டு அடம்பிடிப்பது போல் ஒரு தாயிடம் அடம்பிடித்து இரண்டு மொட்டையடித்த சிறுவர்கள் பனியனோடும் கால் சட்டையோடும்
கடலில் குதித்து கும்மாள மிட்டார்கள்.! நீரை பார்த்தவுடன்
மனித மனமும் உடலும் எப்படித்தான் இவ்வளவு மகிச்சியடைகிறதே தெரியவில்லை.! சிறுவர்கள் மட்டுமில்லை இளைஞர்கள், முதியவர்கள் கூட குழந்தையைப் போலவே உற்சாக மிகுதியில் அலையில் மிதந்து மிதந்து குதுகலித்தனர். இந்த நேரத்தில் ஆந்திரா காரத்தில் இருந்த சில நடுத்தர வயது பெண்கள் - கிராமத்து சிறுவர்கள் டவுசரை கழற்றி விட்டு ஆற்றில் குதிக்கப் போகும் வேகத்தில் - உடையை அவசர அவசரமாக கழற்றிவிட்டு பாவாடையோடு கடலில் இறங்க இதற்காகத் தானே ஆசைப்பட்டாய் என்று
அவர்களை பல டில்லி பார்வைகள் துளைத்தெடுத்த வாறே பின்தொடர ,
இதையெல்லாம் காவல் காக்கத்தனே நாங்க இருக்கோம்னு, காவல் துறையினர் தங்கள் குடிலில் இருந்து மக்களை கவனித்த படியே இருக்க; நான் எழுந்து வேறு இடத்தில் அமரலாம் என்று எழ எத்தனித்த நேரம், ஒரு வயதான அம்மா வந்து, " குறி கேளு இராசா,சரியாய் இருந்தா காசுகொடு இல்லைனா காசு வேண்டாம் என்றார். நான் வேண்டாம் என்று மறுத்தும் , உன் முகத்தில் ஒரு ஒளி தெரியுது, உனக்கு நல்ல காலம் பெறக்கப் போகுது; என்றெல்லாம் துண்டிலைப் போட சரியென்று தலையை அசைத்து வைத்தேன்.
" மாடா உழைச்சே, மழையா ஊருக்கெல்லாம் உதவின, சொந்தமின்னு இருந்த தெல்லாம்
தேவைக்கு மட்டும்தான். உன் மனைவி சிலநேரம் பாலும் தேனும்
தருவாள், சிலநேரம் பத்ரகாளியா நிப்பாள். இப்ப உனக்கிருக்கிற தெளிவு முப்பது வருசத்துக்கு முந்தி இருந்திருந்தால் நீ ராஜாவா
இருந்திருப்ப.
<அதாவது 12 வயசுல.ஒருவேளை நமது தல தாடியப் பார்த்து வயசை கூட்டீட்டாங்க போல> இப்படி தளர்ந்து கடலை வெறிச்சிட்டு உட்காரமாட்ட.!
தர்மம் தலைகாக்கும், தர்மம் பண்ணு, அல்லா துணையிருப்பான் , ஆபத்தெல்லாம் ஓடிப்போகும்.
வெற எதுவும் கேட்கணுனா கேளு இராசா "அப்டினு சொல்லிட்டு, 20 ரூபானு
சொன்னாங்க, சட்டைப்பையில் இருந்து நூறுரூபா நோட்டை எடுத்து கொடுத்தேன். சில்லறை இல்ல. என்னிடம் நாப்பது ரூவாதான் இருக்குனு அதை எங்கிட்ட கொடுத்துட்டு இங்கேயே இரு, நூறு ரூபா நோட்டுக்கு சில்லறை வாங்கியாறேனு நோட்டை வாங்கிட்டு போயிட்டாங்க.!
அநேகமா மீதி வராதுனு தோணுச்சு; ஏன்னா, அந்தம்மா சொன்னதுல
ஒன்னுமே உண்மை இல்லையே.!
மனிதனுக்கான வாழ்வியல் தந்திரத்தில் இதுவும் ஒன்னுதான்.!
வாழ்க வளமுடன்.! மெதுவா சூரியன் சூட ஆரம்பித்தது, துண்டை உதறி தோளில் போட்டுவிட்டுஅங்கிருந்து எழுந்து பக்கத்தில் உள்ள மண்டபத்தின் ஒரு ஓரத்தில் போய் அமர்ந்தேன்.!
நடுமண்டபத்தில் ஒரு துணியை விரித்து பத்துபேர் கொண்ட ஒரு குழுவினர் உணவருந்தி கொண்டிருந்தனர் … புளியோதரையும் ஊறுகாயும், உணவருந்தி முடிந்த உடன் அந்த இடத்தில் ஒரு சிறுவன் சாப்பிடும் அளவுக்கு உணவு சிதறி கிடந்தது. அட.! பாவமே உங்கள் பசியைத் தீர்த்த பாவத்திற்காக எஞ்சிய பருக்கைகள் போவோர் வருவோர் காலில் மிதிப்பட்டு சாகத்தான் வேண்டுமா? என்று நான் சிந்தித்த வாறிருக்க, பின்புறமிருந்து நாலைந்து துளி தண்ணீர் என் மேல் தெரித்தது, நிமிர்ந்து பார்த்தேன்; சாப்பிட்டவர்களில் ஒருவர் கையை கழுவிவிட்டு சென்றார். கொஞ்சம் நகர்ந்து உட்கார்ந்துகொண்டேன்.
இவர்களைப் போன்றவர்கள் வராவிட்டால் இந்த இடம் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமோ?
காந்தி மண்டபத்தை சுற்றியும் நிறைய குப்பைகளும் நெகுழி பைகளும், மனித கழிவுகளும் கொட்டிக் கிடக்கின்றன.!
காந்தியை கண்ட பின்னும், அவரின் தூய்மை யையும் உண்மையையும் உணராமல் இப்படி செய்கிறார்களே? ஒருவேளை அவர் இருந்தால்
அவரையே வாந்தியெடுக்க வைக்கும் படி நடக்கும், இந்த மனிதர்களை நினைத்தால் மனம் சாந்தியற்று துடிக்கிறதே
மகாத்மா காந்தியே.!
என்று சிந்தித்தபடி அமர்ந்திருக்க … கடலை, கடலை, கப்பலண்டி என்றவாறு ஒருவர் கடலை விற்றபடி வந்தார்; என்ன விலை? "பத்து ரூபாய்" அட! சிறிய பத்து முழு வேர்க்கடலை உடைத்தால் மொத்தம் 20 கிராம் கூட இருக்காது. அடுத்து ஒருவர் பாசி விற்றவாறு வந்தார். வேண்டுமா?
"வேண்டாம் அய்யா"
ஒன்று வாங்கிக் கொள்ளுங்களேன்?
"வேண்டாம் எனக்கு உபயோகப் படாது"
என்று நான் கூற உடனே அவர்; ஒன்றாவது வாங்குங்கள் பசிக்கிறது என்றார்.! அவர் முகத்தை கூர்ந்து கவனித்தேன், ஆம் பலநாட்கள் நான் அனுபவித்த அதே பசியின் கொடுரம் , அந்த மனிதரின் நாடி, நரம்பெல்லாம் ஓடி ஒளிர்ந்ததை என்னால் உணர முடிந்தது … ஐந்து மாலைகளை
வாங்கிவிட்டு குறிக்கார அம்மா கொடுத்த நாற்பது ரூபாயோடு எனது கைப்பையில் துழாவி இரண்டு ஐந்து ரூபாய் துட்டையும் எடுத்து
50 ரூபாயாக கொடுத்து விட்டேன்.! உணவில்லா மனிதன் குமரியில் உண்டெனில், இனியும் சுனாமி வருமா.?
இன்னொருவன் ரேஃபான் கண்ணாடி வேண்டுமா? என்றான் 100 ரூபாய் கண்ணாடியை நீட்டியபடி … ஆளைவிடப்பா, என்று திரும்பினால் ஒரு பெரியவர் கையில் அரிப்போடு வந்து முத்து வேண்டுமா? என்றார்; கையில் கிளிஞ்சல்களை வைத்துக்கொண்டு, அடடா! நான் மணியை பார்த்தேன் 10 மணி 20 நிமிடம் என்று காட்டியது. மாதக்கோவில் அருகே தான் வகுப்பெடுக்க செல்ல வேண்டும். 5 நிமிடத்தில் சென்றுவிடலாம் என்று நினைத்தவாறே எழுந்தேன் … அய்யா, இராசா என்று யாரோ அழைக்க திரும்பிப் பார்த்தால் ;
குறிகூறிய அம்மா நின்றிருந்தார்.
எங்கெல்லாம் தேடுறது?.இந்தா என்று முதலில் தந்த 40 ரூபாய் போக மீதி 30 ரூபாயை கையில் கொடுத்தார். இன்னும் பத்துரூபாய் உன்னைத் தேடியதற்கு எடுத்துக்கட்டுமா இராசா, என்று பவ்யமாக அவர் கேட்க … எடுத்துக்கங்க அம்மா. என்று கூறியதும்,
வணங்கி விடைபெற்றார்.!
நலம் பெருகட்டும் …
வாழ்க்கை கடலை கடக்க இன்னும் கொஞ்சம் அன்பு.!
இன்னும் கொஞ்சம் தூய்மை.!
இன்னும் கொஞ்சம் ஒழுக்கமும்
இன்னும் கொஞ்சம் வாய்ப்பையும்
தந்தருள் இறைவா …!
மனிதப் பிணியெல்லாம்
மறைந்து வாழ்வு அனைவருக்கும் ஆரோக்கியமாய் ஒளிரட்டும் …!
என்று பிராத்தித்தவாறே எனது பணியை நோக்கிக் கிளம்பினேன்.!
ஒரு பாட்டு
பஜனையின்
பலன்கள் 🙏
இரத்த ஓட்டம் விரைவுபெறும்.
மனஅழுத்தம் குறையும்.
இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீங்கும். ஞாபகசக்தி அதிகரிக்கும்.
வலது இடது மூளைகளின் இயக்கம் சீராகும்.
திக்குவாய் குணமாகும்.
உடல்பருமன் குறையும்.
உடலின் எரிசக்தி அதிகரிக்கும்.
இழுப்பு,சளி,தொண்டைகட்டு
குணமாகும்.
நுரையீரலின் இயங்குதிறன் அதிகரிக்கும்.
உடல்வலி,தலைவலி,
எலும்பு பலவீனம் போகும்.
இறைபக்தி, ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.
இது மட்டுமில்லீங்க இன்னும் ஆயிரம் பலன்கள் இருக்கு கைகளை தட்டிக்கொண்டே பாட்டு பாடுவதில் சுருக்கமாக கூறினால்
கலவியைவிட பத்துமடங்கு அதிக நன்மைகள்.
பாட்டு பாடுவதைவிட ஐந்து மடங்கு அதிக நன்மைகள் நடைபயிற்சியை விட நாலுமடங்கு அதிகநன்மைகள்
சிரிப்பு பயிற்சியை விட இரண்டு மடங்கு அதிக நன்மைகள் கொண்டது கைகளை தட்டி பஜனை பாடுவது.!
ஒரே ஒரு முக்கியமான விசயம் என்னவெனில் பஜனை பாடும்போது இராகத்தை ஏற்றி இறக்கி பாட வேண்டும்.
இந்த ஆராய்ச்சியை எந்த ஆராய்ச்சிகழகம் செய்ததுனு
கேக்குறீங்களா?
மகாராஷ்ட்ராவை சேர்ந்த ஒருவர் கைத்தட்டலில் உள்ள பலன்களை ஆராய்ந்து லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.!
தினமும் 15 நிமிடம் பஜனை பாடி உங்கள் ஆரோக்கியத்தை அதிகப்படுத்துங்க …
பொதுவா உலகத்தில் எந்த நாட்டவர்களுக்கும் பஜனை, கும்மிப்பாட்டுனா இந்தியாதான் ஞாபகம் வரும்.! அதிலும் தமிழ்நாடு பிரபலம். ஹரே ராமா ஹரே கிருஷ்ணானு தொடங்கி ரகுபதி ராகவன் ராஜாராம்னு விரிஞ்சி ஒவ்வெரு தெய்வத்திற்கும் குருமார்களுக்கும் ஒரு பஜனையை உருவாக்கி
வெச்சிருக்கிறது நம்மதேசம் தான்.!அவரவர்களுக்கு பிடிச்ச பஜனையை பாடுங்க. ஆனா, ஒரு நிபந்தனை கையைத் தட்டிக்கொண்டே ஏற்ற இறக்கமுடன் பாடினால் தான் நாம் கூறிய பயன்கள் கிடைக்கும்.! அதுசரி ஆனால் எனக்கு மத பாடல் பிடிக்காது. இருந்தாலும் எனக்கும் பஜனை பாடி ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆவலாக இருக்கிறது என்கிறீர்களா?
"அப்படினா, உங்களை போன்றவர் களுக்காக நாமே தயார் செய்த கீழ்கண்ட இந்த " இயற்கை பஜனையை பாடி பயனடையுங்களேன்.
இயற்கையை உணர்வோம்
இயற்கையை உணர்வோம்
இயற்கையை உணவர்வோம் வாருங்கள் …
<2 முறை>
மண்ணும் மரமும் மழையும் காற்றும் இயற்கையே உணர்வோம் வாருங்கள் …
<2முறை>
☘இயற்கையை உணர்வோம்
இயற்கையை உணர்வோம்
இயற்கையை உணர்வோம் வாருங்கள் …
<2 முறை>
உடலும் உயிரும் உலவும் மனமும் இயற்கையே உணர்வோம் வாருங்கள் …
<2முறை>
இயற்கையை உணர்வோம்
இயற்கையை உணர்வோம்
இயற்கையை உணர்வோம் வாருங்கள் …
<2முறை>
உண்ணும் உணவும் ஒளிரும் கதிரும்
இயற்கையே உணர்வோம் வாருங்கள் …
<2முறை>
இயற்கையை உணர்வோம்
இயற்கையை உணர்வோம் இயற்கையை உணர்வோம் வாருங்கள் …
<2முறை>
தீதும் நஞ்சும் திறம்படத் தவிர்த்து
இயற்கையை உணர்வோம் வாருங்கள்
…
<2முறை>
இயற்கையை உணர்வோம்
இயற்கையை உணர்வோம்
இயற்கையை உணர்வோம் வாருங்கள் …
<2முறை>
இந்தப் படாலை முதல் முறை ஒருவரும் அடுத்தமுறை குழுவினரும் சேர்ந்து பாடவேண்டும். அதற்காகவே <2முறை> என்று குறிக்கப்பட்டுள்ளது. தனியாக பாடினால் இரண்டு முறையும் ஒரே நபர் பாட வேண்டும்.!
ஒர் ஆய்வு
ஹீலர் ரங்கராஜின் திருமூலர்,திருவள்ளுவர் வழியில் ஆரோக்கியம் நிகழ்வு குமரிமாவட்டம் தக்கலையில் கடந்த ஞாயிறன்று வெகு சிறப்பாக நடைப்பெற்றது.! முதலில் ஏதோ போய்வருவோம் என்று சிரத்தையில்லாமல் தான் போனேன். என்மகன் வேறு ஏம்ப்பா, சிலநேரம் நீங்க அரைமணிநேரம் பேசினாலே எனக்கு அழுகையா வருது.இதுல எட்டு மணிநேரம் எப்படிப்பா? என்று கண்ணில் கிளிசரின் போட்டான்.! ஆரம்பத்துல ஒருநாள் அனடாமிக் தெரபி பாஸ்கரின் நிகழ்விற்கு போய் பாதியிலேயே தலைதெறிக்க ஓடிவந்தது வேறு நினைவிற்கு வந்து பயம் காட்டியது. ரங்கராஜ் அய்யா, பாஸ்கரின் குரு என்று வேறு கூறுகிறார்கள். சரிதான் போய்ப் பார்ப்போம் ஆனால், தலைவலிச்சா ஓடிவந்து சுக்குக்கசாயம் வச்சிக்குடிக்க வீடுபக்கமாய் இருந்தாலும் பரவாயில்லை. 30 கிலோ மீட்டர் தள்ளியல்லாவா இருக்கிறது? என்று யோசித்தவாறே ஒருவழியா நிகழ்விற்கு போய்ச்சேர்ந்தோம்.! சரியாக பத்துமணிக்கு நிகழ்வு இரண்டு கெட்டவார்த்தைகளுடன் இனிதே ஆரம்பித்தது, ஏன் சம்மணமிட்டு சாப்பிடவேண்டும்? உணவை எப்படி சாப்பிட வேண்டும்? ஏதற்காக முன்னோர்கள் கைகளில் நீரைவிட்டு சுத்தி பிறகு கைகளில் உள்ள நீரை உறிந்து குடித்துவிட்டு சாப்பிட்டார்கள்? சமையலரை ஒரு கொலைக்களம் எப்படி? பிராத்தனையின் அவசியம் உணவுக்குழாய், மூச்சுக்குழாய், உணவு ஜீரணமாகும் முறை என்று ஒரு முழுமையான மெய்ஞ்ஞான விஞ்ஞான வகுப்பையே நடத்திவிட்டார். அதுவும் பகவத்கீதையின் சமஸ்கிருதமும், திருவள்ளுவரின் தமிழும், ஆராய்ச்சு ஆங்கிலமும் அவரின் வார்த்தைகளில் பொங்கிப் பிரவாகமெடுத்து ஓடி,நம் நாடிநரம்பையெல்லாம் நிறைத்து விடுகிறது … மனிதனுக்கு ஆயுள் இருப்பது போலவே பிணத்திற்கும் ஆறு மணிநேரம் ஆயுள் உள்ளது, அந்த நேரத்திற்கு பிறகு அது அழுக ஆரம்பித்துவிடும். பிரிசரில் வைத்தால் அழுகாமல் இருக்காது அழுகும். ஆனால், நாற்றம் வெளியே தெரியாது அவ்வளவுதான்.! பிரிசரில் வைத்துள்ள பிணத்தை ரெண்டுநாள் கழித்தெடுத்து கண், சிறுநீரகம் என்று எடுத்து, அடுத்த உடலில் வைக்கமுடியாது.! உயிர்போன மனித உடலைப் பார்த்துவந்தால் உடனே குளிக்க வேண்டும் அல்லது இறந்த உடலில் இருந்து வெளியேறிய காற்று நம் உடலை கெடுக்கும் என்பது உண்மை. ஆனால், நாம் பல மணி நேரங்களுக்கு முன்பு வெட்டிய ஆடு,மாடு, கோழி பலநாட்களாக ஐஸில் வைத்தமீன்கள் எல்லாவற்றையும் சப்புக்கொட்டி சாப்பிடுகிறோம். அந்த அழுகிய பிணங்கள் நமது உடம்பை வளர்க்குமா, குலைக்குமா? செத்த மனிதனின் உடலைப்பார்த்தால் குளிக்கவேண்டும், செத்தவீட்டிற்கு பதினாறு நாள் தீட்டு,ஓராண்டு விசேசம் இல்லை. ஆனால், செத்து அழுகிய பிணங்களை சமைத்து வீட்டில் விசேசம் செய்கிறோமே.! இதுசரியா, ஆரோக்கியமானதா? சமைக்காத அரைக்காத வெட்டாத உணவுப் பண்டங்களை மட்டுமே பிரிசரில் வைத்து பயன்படுத்த வேண்டும். ஆனால், இட்லிமாவை நான்கு நாள் பிரிசரில் வைத்து பயன்படுத்துவது முறையா? என்று பல்வேறு அர்த்தமுள்ள வினாக்களை எழுப்பிவிட்டுவிட்டு … இப்ப என்ன செய்யலாமுங்க? என்று மக்களை சிந்திக்கத் தூண்டுகிறார்.! அதோடு அரிசிச்சோறு மிக நல்லது மூன்று வேளையும் சாப்பிடுங்க, பழம், கடலை, இனிப்பு போன்றவற்றை சாப்பிட்டுவிட்டு உடனே உணவையும் சாப்பிடலாம். ஆனால், சாப்பிட்ட உடன் இவற்றை சாப்பிடக்கூடாது … தினமும் இரவில் நிறையநீர்விட்டு காய்ச்சிய பசும்பால் குடிங்க. நான் அப்படி சாப்பிடுவதால்தான் எனக்கு 51 வயதில் பல் முளைக்குது என்று தன்பல்லைக் காட்ட அதை ஒரு சிறுமி அருகில் சென்றுப் பார்த்து ஆமா என்று ஆச்சரியமாய் தலையசைக்க கூட்டத்தில் ஒருவர் இதென்ன அதிசயம் என் மனைவிக்கு 60 வயசுல இப்ப முன்பு விழுந்தபல் முளைச்சிட்டு இருக்கு என்று ஒரேப்போடாகப் போட, அப்ப ஐயாயிரம் ,பத்தாயிரம்னு செலவு செய்து கேப் போட்டது,பல்லைப் பிடுங்கி செயற்கைப் பல் வைத்ததெல்லாம் வீண்தானா? என்று பலரும் வாயைப்பிளந்தனர்.! நிறைவாக விளக்கேற்றுவதில் உள்ள நன்மைகளையும் அவசியத்தையும் எத்தனை திரிபோட வேண்டும் என்பதையும் விளக்கேற்றும் நேரத்தில் சரியாகக் கூறி பிரியாவிடை கொடுத்துவிட்டார்.! மிக அற்புதமான வகுப்பு.! இயற்கை மருத்துவக்கல்லூரி மாணவனான என் மகனிடம் கேட்டேன் How was it? he said it was very usefull and i gathered sam new.! அதானே வேண்டும் நமக்கும்.! இந்நிகழ்வில் சில முரண்பட்ட விசயங்களையும் கூறி உள்ளார். அதாவது முளைகட்டிய தானியங்களை நமது குடலால் எளிதாக ஜீரணிக்க முடியாது என்கிறார். அதுபோலவே திருமூலர் நூலில் உள்ளதாக ஒரு புதிய பிராணாயாமப் பயிற்சியை அனைவருக்கும் கற்றுக்கொடுத்தார்.! அதை அனைவரும் தினமும் 30 நிமிடம் செய்தால் எல்லா வியாதியும் குணமாகும் என்கிறார்.! ஆனால், அது கொஞ்சம் முரண்பட்ட முறையாக இருப்பதால் அனைவரும் செய்ய சிரமப்பட்டனர்.! இதுபோன்ற ஒரு மூச்சிப்பயிற்சியை சிறுவயதில் செய்த ஞாபகம் உள்ளது. ஆனால், இதில் கொஞ்சம் மாற்றம்.! அதுவும் சரிதான்.! ஒரேநாளில் ஒன்பது விசயத்தை முழுமையாக கற்று கொள்ள முடியாது.! அப்படி முடியுமானால் எதற்கு ஒவ்வெரு ஊரிலும் நம்மைப் போன்ற நாலு யோகா ஆசான்கள் ஒரே வியாதியை குணப்படுத்த பல மாதங்கள் வகுப்பெடுத்துக்கிட்டு இருக்கோம்.! ஆனாலும், இவர்கூறிய பயிற்சியை நாம் இரண்டு நாட்களாக செய்து வருகிறோம்.! ஒருவேளை இன்னும் சிலநாளில் திருமூலரானாலும் ஆகிவிடுவேன்.! நலம் பெருகட்டும் … ஹீலர் ரங்கராஜ் அவர்களின் திருமூலர், திருவள்ளுவர் வழியில் ஆச்சாரம் ஆரோக்கியம் DVD தேவைப்படுவோர் இந்த கைப்பேசி எண்ணில் தொடர்புகொள்ளுங்கள் 9894106291,9443306291. helar rengaraj youtube என்று தேடினால் வீடியோவிலும் வந்து ஆரோக்கியத்தை போதிப்பார்! யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.!
--ஏகப்பிரியன் DYT
தொடரும் …
amyogatrust.blogspot.in
No comments:
Post a Comment