உயிர் மீட்கும் மருத்துவம்
18 A.வர்மக்கலையும்
வாழ்க்கை கலையும்
" ஒருநாடி இருநாடி கூடி
நடுநாடி பெருநாடி தேடி
உயிர்வளி வழிதேடி ஓடி
பிரண்டதை பிரித்து நீவி
மருண்டதை மீட்கும் வர்மம்
இது நவீனம் அறியாத மர்மம் "
உடலில் காற்று பல வழிகளில் இயங்கி வருகிறது.கால் கட்டை விரல் முதல் உச்சந்தலை வரை 72000 நாடிகள் ஓடுகிறது. இந்த நாடிகளின் உள்ளீடாக காற்று இயங்குகிறது.!
வர்மக்கலையில் மொத்தம் 108 வர்ம இடங்கள் குறிப்பிடப்படுகிறது.
இதில் படுவர்மம் 12. இது மரணத்தை ஏற்படுத்தக்கூடிய வர்மம் ஆகும். தொடுவர்மம் 96 இவை கைகால்களை முடக்குவது முதல் இழுப்பு,முதுகுவலி,இரத்த வாந்தி போன்ற பல்வேறு உபாதைகளை ஏற்படுத்துகிறது.!
108 வர்மத்தில் வாத வர்மம் 64,பித்த வர்மம் 24,கப வர்மம் 6,உள் வர்மம் 6,தட்டு வர்மம் 8. என்று குறிக்கப்பட்டுள்ளது.இவற்றில் தலையில் மூன்றும் தலை முதல் கழுத்துவரை இருபத்திரெண்டும் கழுத்து முதல் உந்திவரை நாற்பத்தி ஐந்தும் நாபி முதல் ஆசனம் வரை ஒன்பதும் கையில் பதினாலும் காலில் பதினைந்தும் என்று உடலில் உள்ள வர்ம இடங்கள் குறிக்கப்பட்டுள்ளது.
உயரத்தில் இருந்து கீழே விழுதல்,ஏதேனும் கடினமானப் பொருட்கள் மேலே விழுந்து குறிப்பிட்ட வர்ம இடத்தை தாக்குதல்,திட்டமிட்டு எலும்பு இணைப்புப் பகுதியில் தாக்குவது போன்ற காரணங்களால் வர்ம இடம் பாதிக்கப்படுகிறது.சிலருக்கு இது போன்ற எதுவும் நிகழாவிட்டால் கூட உடலில் உள்ள வாயுக்கோளாறு,நரம்பு மண்டல பலவீனம்,முறையற்ற உடற்பயிற்சி போன்ற காரணங்களாலும் வர்ம இடம் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.
வர்மம் எப்படி ஏற்படுகிறது என்றால்,வர்ம இடம் தாக்குண்ட மாத்திரத்தில் அந்த இடத்தில் உள்ளாக இயங்கி வந்த வாய்வு சுருண்டு ஒரு நூல் நுனியைஇன்னொரு நுனிமேல் குறுக்காக வைத்தது போல் அல்லது நூல்கண்டு போல் வட்டமாக சுற்றிக்கொள்கிறது.இதைத் தொடர்ந்து நரம்பு மண்டலமும் சுழன்று கொள்ளும் இதனால் குறிப்பிட்டப் பகுதியில் இரத்த ஓட்டமும் பிராண ஓட்டமும் தடை பட்டு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.!
இந்தப் பாதிப்புகளை மருத்துவ ஆய்வில் தெளிவாக கண்டறிய முடியாது. வர்ம வைத்தியம் தெரிந்தவர்கள் கண்களை உற்றுப்பார்ப்பது,கால் கட்டை விரல்களை சோதிப்பது,கை நாடியைப் பரிசோதிப்பது,உடலை தடவுதல் போன்ற வற்றால் எந்த இடத்தில் தடை ஏற்பட்டுள்ளது.என்பதை துல்லியமாக அறிந்து கொள்கிறார்கள்.!
படுவர்மம் அதாவது ஓரிரு நாளில் இளக்காவிட்டால் மரணத்தை ஏற்படுத்தும் வர்மப்பகுதிகள் பிடரியில் தொடங்கி பிறப்புறுப்பு அடி வரை நீண்டுள்ளது.!
உச்சிவர்மம்.திலர்தகாலம், <புருவமத்தி>.நட்சத்திரக்காலம், <கண்குழி>.செவிக்குத்திக்காலம் <காதுமடல்>.பிடரிக்காலம் <பின்தலை> இன்னும் விலா எலும்புகள்,வலது அடிவயிற்றுப் பக்கம் உள்ள வர்மப்பகுதிகளே மரணத்தை ஏற்படுத்துபவை.படாத இடத்தில் அடிப்பட்டு பொசுக்கென்று போய்விட்டான். என்பார்களே,இந்தப் படாத என்ற சொல் வர்மத்தைதான் குறிக்கிறது.!
காது இரைச்சல்,கண்பார்வை குறைபாடு,தண்டுவடத்தில் உள்ள ஸ்பான்ச் போன்ற கொழுப்பு விலகுதல்,குடலிறக்கம்,மனநலக்கோளாறு,பிறப்புறுப்பு பிரச்சனைகள் போன்றவற்றையும் வர்மக்கலையை பயன்படுத்தி சீராக்கலாம்.!தற்போது
அந்த நுட்பங்களை தெரிந்தவர்கள்
மிக குறைந்துவிட்டனர்.குமரி மாவட்டத்தில் இருபது வருடத்திற்கு முன்வரை முதுகெலும்பை விட்டு வெளியேறிய ஸ்பான்ச் போன்ற பகுதியை வர்ம முறையில் தடவியே
உள்ளே தள்ளிவிடும் வர்ம ஆசான்கள் இருந்துள்ளனர். இப்போது இதுபோன்ற ஆசான்களின் மகன்கள் BSMS படித்துவிட்டு
நாங்களும் அதுபோல் தடவி சரிசெய்வோம் என்று கூறுகிறார்கள். ஆனால்,அதில் அவர்கள் முழு வெற்றியடைவதில்லை. நான் சிறுவயதாய் இருந்த போது என்னோடு படித்த ஒரு சிறுவனுக்கு குடலிறக்கம் ஏற்பட்டு அதை ஒரே தடவலின் மூலம் குளச்சலில் இருந்த ஒரு வர்ம ஆசான் சரிசெய்து விட்டார். ஆனால்.இன்றைக்கு அது போன்ற நுட்பங்களை கற்றவர்களை காணமுடியவில்லை. இதிலிருந்தே எத்தகைய ஒரு கலையை நாம் இழந்துள்ளோம். என்பதை விளங்கிக்கொள்ளலாம்.!
இப்பொழுது சென்னை,பெங்களூர்,திருவனந்தபுரம் போன்ற இடங்களில் வர்ம வைத்தியப் பள்ளிகளை நிறுவி இரண்டு மாத டிப்ளமோ படிப்பிற்கு லட்சங்களில் கட்டணம் வசூலிக்கிறார்கள். உண்மையில் இப்படிப்பட்ட பள்ளிகளில் படிப்பதால் விசயத்தை புரிந்துகொள்ளலாம். ஆனால்,தேர்ந்த வர்மானி ஆக முடியாது.! ஏனெனில்,தனது உள்ளுணர்வு,தொடர்ந்தப் பயிற்சி,இறைநிலையின் ஆசி இருந்தால் மட்டுமே வர்ம சூட்சுமம் பிடிபடும்.!
அகத்தியர் ஒடிவு முறிவு சாரி,போகர் வர்மசூத்திரம்,வர்மக் கண்ணாடி,வர்ம கண்டி,வர்ம சூடாமணி போன்ற
பல வர்மநூல்கள் கடைகளில் கிடைக்கிறது.!
போகர் வர்மசூத்திரத்தில் ஒரு பாடல் "நேரப்பா நெற்றிநடுப் புருவந்தன்னில் நேராக நெல்லிடைக்கும் கீழதாக தாரப்பா திலர்தகாலம் அதற்குப்பேராம்
தட்டெனவே முறிவு கொண்டால் பிழையாதப்பா பேரப்பா பிழையாத திலர்தகாலம் பேசுகிறேன் அதில் வர்மம் கொண்டால் கேளு கூரப்பா வாய்பிளந்து வானம்பார்த்து கொள்ளுமடா நாழிகைதான் மூன்றே முக்கால்
குறையாமல் இளகுமுறை கூறக்கேளு குடுமி பிடித்து இறுத்திக் கொண்டு குணமாக உச்சியில் தட்டிக் கொள்ளே தலையாக பின்தலையும் செவியும் பற்றி சார்வாக சுக்குவைத்து ஊதுவாயே
வளையாமல் அன்னப்பால் சுக்கும் சேர்த்து உத்தமனே கொடுத்துவிடு உறுதியாகும். "
அதாவது நெற்றியில் புருவம் சேரும் இடத்திலிருந்து ஒரு நெல் அளவு
கீழாக இருக்கும் திலர்தகாலம்.அங்கே அடிப்பட்டால் பிழைப்பது கடினம்.வாயைப்பிளந்து வானத்தைப் பார்த்தபடி விழுந்துவிடுவான்.மூன்றே முக்கால் நாழிகைக்குள் < 80 நிமிடம் >அந்த வர்மத்தை இளக்கினால் பிழைத்துக்கொள்வான்.அவனின் குடுமியைப் பிடித்துத் தூக்கி உட்கார வைத்து உச்சியில் ஒரு தட்டு தட்ட வேண்டும்.பின் தலையையும் காதையும் சேர்த்துப் பிடித்துக் கொண்டு சுக்கை மென்று அவன் வலது காதிலும் மூக்கிலும் ஊத வேண்டும்.சூடு கஞ்சி வடித்த நீரில் சுக்கைத்தட்டிப் போட்டு குடிப்பதற்கு கொடுக்க வேண்டும்.!
வர்மத்தை இளக்குவதற்கு வல்லாரைச்சாறு,நொச்சியிலை,வெற்றிலை போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.!
வர்மத்தை இளக்கும் திருமேனி எண்ணெய் தயாரிக்கும் முறை
குப்பை மேனிச்சாறு
தைவேளையின் சாறு
ஆவாரைச்சாறு
குலாமலிவ் சாறு
மரக்கொடிச்சாறு
நாயுருவிச்சாறு
வேலிப்பருத்தி சாறு
குறுந்தொட்டி சாறு
கரிசாலைச்சாறு
முசுமுசுக்கை சாறு
எலுமிச்சை சாறு வகைக்கு
250 மில்லி எடுத்துக்கொண்டு
கஞ்சாவேர்,
கருடக்கொடி வேர்
நன்னாரிவேர்,சாதிக்காய்,
சாதிப்பத்திரி,கருஞ்சீரகம்,
தக்கோலம்,துத்தம்,
துருசு,கோஷ்டம்,சீரகம்,
விளாமிச்சம்வேர்,
தேவாதாரம்,சந்தனம்,
கஸ்தூரி,கோரோசனை,
அதிமதுரம்,அபின்,
வெள்ளைகுங்கிலியம்
வகைக்கு பத்துகிராம் இடித்து வைத்துக்கொண்டு முதலில் சாறுகளை ஒன்றாக கலந்து இரும்புச்சட்டியில் ஊற்றி அடுப்பேற்றி நீர் சுண்டியபின் பொடித்து வைத்துள்ள கடைச்சரக்குகளைப் போட்டு அதோடு ஒன்றரை லிட்டர் நல்லெண்ணெய் ஊற்றி காய்ச்சி நீரடங்கியதும் இறக்கி வடிகட்டி
வைத்துக்கொண்டு உச்சிவறுமம்,சன்னி,மண்டைக்குத்து,இடி,நரம்புப்பிடி,தாதுநஷ்டம்,திமிர்வாதம்,கிறுக்கு,கபம்,உள்வர்மம் போன்ற நோய்களுக்கு தேய்த்து அரைமணி சென்று சூடுநீரில் குளித்துவர இவைகள் குணமாகும்.!
இந்த முறையும் போகர் வர்ம சூத்திரத்தில் உள்ளது தான். இந்த எண்ணெயை ஒரு முறை நான் தயாரித்து சில நோயாளிகளுக்கு கொடுத்து நல்ல குணம் கிடைத்துள்ளது. சிலப்பொருட்கள் இப்பொழுது தடை செய்யப்பட்டுள்ளது. அதோடு கோரோசனை போன்றவற்றை வாங்கும் விலையில் இல்லை. அவற்றை தவிர்த்து மருந்தை செய்தாலும் நல்ல பயன்கிடைக்கும்.!
வர்மக்கலை சிறந்த தற்காப்புக்கலை ஆகவும் இருக்கிறது. குறிப்பிட்ட வர்மப்புள்ளியை தட்டித் திருகி விடுதல்,வர்ம இடத்தில் அடித்து மூர்ச்சையாக்குதல்,வர்ம இடத்தில் அடித்து கைகால்களை அசைக்க முடியாமல் நிறுத்துவது,பார்வையாலேயே எதிரியை நிலை குலைய செய்தல் போன்ற பல்வேறு வர்ம நுட்பங்கள் தற்காப்பு கலையில் உள்ளது. வர்மம் படித்தவர்களிடம் அடி இடி கொண்டால் அதை குறிப்பிட்ட நேரத்திற்குள் இளக்காவிட்டால் காசநோய் முதல் மரணம் வரை சம்பவிக்கும் வாய்ப்புள்ளது. காது மடல், புருவமத்தி, மூக்குத்தண்டு,பிடரி போன்ற ஏதேனும் ஒரு இடத்தில் அடிபடும் போது மின்னல் வெட்டியது போல் ஒரு உணர்வு அடிபடுபவருக்கு ஏற்பட்டாலோ அல்லது
மூர்ச்சையாகி விழுந்து விட்டாலோ
வர்ம இடம் தாக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.! தற்போது வர்மக்கலை என்ற பெயரில் பல ஆசான்களும் சிலம்பம்,குத்துவரிசை,மல்யுத்தம் போன்றவற்றில் உள்ள நுட்பங்களையே அதிகம் கற்பிக்கிறார்கள்.! அதோடு வர்ம இடங்களையும் கற்றுக் கொடுக்கிறார்கள். நுட்பமான விசயங்களை கற்பிப்பது இல்லை.! நுட்பமான விசயங்களை பழக பல ஆண்டுகள் தீவிர பயிற்சி மேற்கொண்டால் கூட ஒரு சிலருக்கு மட்டுமே அது சித்திக்கும்.! பழைய காலத்தில் அரசர்கள், தளபதிகள்,சித்த மருத்துவர்கள்,யோகிகள்,ஜோதிடர்கள் போன்ற அனைவருமே வர்மக்கலையை உள்வாங்கியவர்களாகவே இருந்தனர்.தசவாயு,நாடி,நாழிகை, போன்ற பல விசயங்கள் சித்த மருத்துவம்,யோகா,ஜோதிடம் போன்றவற்றில் ஒரே விதமாக குறிக்கப்பட்டுள்ளது. பத்மாசனம்,யோகமுத்ராசனம்,மயூராசனம்,சர்வாங்காசனம், சிரசாசனம்,நாடிசுத்தி,மந்திர தியானம் போன்ற நுட்பங்களை அறிந்தவர்கள் மட்டுமே முழுமையான வர்மானி ஆக முடியும். என்று எனது யோக குரு பண்டிதர் கிருஷ்ணமூர்த்தி அய்யா சில முறை என்னிடம் கூறியுள்ளார்.!
அவருக்கு வர்மம் முழுமையாக தெரியும். ஆனாலும்,அவர் யாருக்கும் அதை கற்பிக்கவில்லை.சிலருக்கு வைத்தியம் செய்யும் போது சில வர்ம நுட்பங்களை பயன்படுத்துவார். அது நோயாளிக்கும் கூட தெரியாது.!
நான் கூட சில நேரங்களில் வர்ம சூட்சுமங்களை கையாண்டு திடீர் அற்புதங்கள் பலவற்றை செய்துள்ளேன்.! நமது ஆதி இயற்கை மருத்துவ முறையில் பனிரெண்டு முக்கிய வர்மப்புள்ளிகளை பயன்படுத்தக் கற்பிக்கிறோம்.
1.குந்திக்காலம்
< ஆசனவாயின் மேல் நடுவில் >
2.மேல் சுழியாடி வர்மம்
முதுகிலிருந்து கழுத்து ஆரம்பிக்கும் இடத்தின் நடுவில்>
3.பிடரிக்காலம்
<தலையின் பின்பகுதி
முடியும் இடம்>
4.பூட்டெலும்பு வர்மம்
<உச்சந்தலை>
5.திலர்தகாலம்
புருவமத்தியின் நெல்லிடைக்கீழ்>
6.தும்மிக்காலம்
<கழுத்து குழியின் கீழ்>
7.நேர்வர்மம் <சங்கு குழியின்
இருவிரல் கீழ்>
8.கூம்பு வர்மம்
<மார்பெலும்பு முடிந்த இடத்தில் நடுப்பள்ளம்>
9.மூத்திரக்காலம்
<தொப்புளிலிருந்து
இருவிரல் கீழே>
10.தட்சணை வர்மம்
<உள்ளங்கையின் நடுப்பள்ளம்>
11.கவளிக்காலம்
<கைப்பெருவிரலின் வெளிப்பள்ளம்>
12.பூழிக்காலம் கால்கட்டை விரலின் நடுப்பகுதி>
உடலில் உள்ள 108 வர்மப்புள்ளிகளில் எங்கு அடி இடி கொண்டு மனக்குழப்பம், உயிருக்கு ஆபத்தான நிலை,சொட்டு மூத்திரம்,கைகால் செயலிழத்தல் போன்ற எந்த பாதிப்பாய் இருந்தாலும் மேற்கண்ட பனிரெண்டு வர்மப்புள்ளிகளில் ஒன்றில் 21 முறை
இடது புறமாகவும் 21 முறை வலது புறமாகவும் ஆள்காட்டி விரலால் அழுத்தித் தொட்டு சுற்றிவிட்டு பிறகு மீண்டும் ஒரு முறை இடமாக பத்து சுற்றுகள் அழுத்தித் தொட்டு எடுத்துவிட்டு அந்த இடத்தில் கையை பட்டும் படாமல் வைத்து கீழ் நோக்கி நமது கையை மூன்றுமுறை கொண்டு வர உடலில் எங்கு பிராணத்தடை ஏற்பட்டிருந்தாலும் உடனே மாறும்.! இதுபோலவே உடலில் எங்கு அடி பட்டிருந்தாலும் உச்சி,தோள்ப்பட்டை போன்ற பகுதியில் மெலிதாக தட்டிக்கொண்டே இருப்பது, சுக்கை மென்று வலது காதிலும் மூக்கிலும் ஊதுதல் கஞ்சி வடித்த நீரில் சுக்குப்போட்டு குடிக்கக் கொடுத்தல்,நொச்சியிலையை வேக வைத்து ஆவிப்பிடித்தல் போன்றவற்றை செய்து வந்தால் மரண அபாயம் முதல் கைகால் முடக்கம் வரை வராமல் தடுக்கும்.!
பொதுவாக யாராவது கீழே விழுந்து அடிப்பட்டு விட்டால் உடனே அவர்களே எழுந்து மூன்றுமுறை குதிகால் தரையில் அடிக்க குதித்து விட்டால் வர்மம் இளகிவிடும்.! உடனே சிறிது சுக்குக் காசயம் வைத்துக் குடித்தால் இரத்தக்கட்டு,வீக்கம் போன்றவை ஏற்படாது.! எப்பொழுதுமே சாதாரணமாக அமரும் போதும் சரி,வாகனம் ஓட்டுவது,சாப்பிடுவது போன்ற நேரங்களிலும் சரி முதுகுத்தண்டை நேராக வைத்தே அமர வேண்டும். <இறுக்கமாக அல்ல> அதுபோலவே ஒரே இடத்தில் அதிக நேரம் அமராமல் இருப்பது,மேடு பள்ளத்தில் வாகனங்களை மெதுவாக ஓட்டுதல்,நிற்கும் போது நேராக நிற்றல் போன்றவற்றை கடைப்பிடித்தால் உடலில் உள்ள வர்மப்பகுதிகள் சீராக இயங்கும்.அது போலவே சட்டைப்பாக்கெட்டில் செல்போன்,பேனா போன்றவற்றை வைப்பது, பேன்ட் பின் பாக்கெட்டில் பர்ஸ் வைப்பது போன்ற செயல்களை தவிர்த்தால் உடல் வர்மப்பகுதிகள் சீராக இயங்கி முதுகுவலி, மார்பு வலி போன்றவை ஏற்படாமல் இருக்கும். இரவில் தூங்கு போது கிழக்கு,மேற்கு,தெற்கு போன்ற திசைகளில் மட்டுமே தலைவைத்து படுக்க வேண்டும். வடக்கில் தலை வைத்துப் படுத்தால் உடலில் உள்ள காந்த ஆற்றல் பாதிக்கப்பட்டு வர்மப்புள்ளிகளும் பாதிப்புக்குள்ளாகும்.! இரவில் தூங்கும் போது இடது பக்கம் சாய்ந்தோ,நிமிர்ந்தோ, அல்லது கமுந்தோ நிறைய நேரம் ஒரே நிலையில் தூங்கக்கூடாது. நேராக,வலது புறமாக,இடது புறமாக மூன்று நிலைகளிலும் மாற்றிமாற்றி தூங்கிவந்தால் உடலில் பிரணா இயக்கம் சீராக இருக்கும்.!
உடல் வலி,கழுத்துவலி,முதுகுவலி உள்ளவர்கள் தலைக்கு தலையணை வைக்காமல் சிறிய பெட்சீட்டை வைத்தோ அல்லது எதுவுமே வைக்காமல் வெறும் விரிப்பில் படுத்தால் கூட வலி போய்விடும்.!
நலம் பெருகட்டும் …
-ஏகப்பிரியன் DYT
amyogatrust.blogspot.in
aumherbals.blogspot.in
பகிர வேண்டாம்
No comments:
Post a Comment