-ஏகப்பிரியன்
ஊசியையும் மருந்தையும் உள்ளுக்கு
அனுப்பினால் எல்லாம் சுகமாகும்;
பக்க விளைவுகளை தவிர்க்க
முடியாது,என்பது ஒரு முறை.
கழிவை நீக்கி மூலிகைகளை
தின்றால் ரோகம் நாசம்
என்றது சித்தஞானம்.
மனதை குவி,மந்திரம் சொல்லு,
உடலை வளை,உணவைப்பேணு
உயிரை வளர்த்தென்றது யோகநெறி.
இயற்கை காய் கனிகளை தின்று
கால் கைகளை ஆட்டு போதும்
உணவே மருந்தென்றது இயற்கை
வாழ்வியல் வழி.
இதெல்லாம் பழையன;
புதிய பம்மாத்து கேளுங்கள் …
உழுந்தவடை தின்றால் பித்தப்பை கல் கரையுமாம்,கோவைக்காய் என்றாலே கொழுப்பு காலியாம்,மிருகங்களை மட்டும் தின்றால் உடல் எடை கரைந்து விடுமாம். உணவே இல்லையென்றாலோ சக்கரை,முதல் இரத்த அழுத்தம் வரை சர்வமும்
நாசமாம்,பாதத்தில் அழுத்தினால் பார்வை தெரியுமாம்,கைகளை பிசைந்தால் கல்லீரல் கொழுப்பு கரையுமாம்,மீனை உயிரோடு முழுங்கினால் இழுப்பு நின்று விடுமாம்,மாதம் முழுவதும் மாட்டு மூத்திரம் குடித்தால் புற்றுநோய்
புறமுதுகிட்டு ஓடிவிடும்.இதுவரை இல்லாத புதிய உடற்பயிற்சியாக தரையில் படுத்து சிறுபிள்ளை அடம்பிடிப்பது போல் கைகால்களை உதறினால் மாரடைப்பு முதல் சிறுநீரக செயலிழப்பு வரை எல்லாம் காலி,எட்டில் சுற்றிச்சுற்றி நெளிந்து நடந்தால் நாலாயிரம் நோய்கள் நாலு தலைமுறைக்கும் வராதாம்,புரோட்டாவையும்,பர்கரையும் கூட பசித்து ருசித்து தின்றால் அமிர்தமாகி சர்வரோகங்களையும் போக்கி விடுமாம்.
ஹஹ் ஹா… உடலையும்,உணவையும், பேணத்தெரியாத அறிவிலிகள் உடல் சீர்கெட்ட பின்னே எத்தை தின்றால் பித்தம் தணியும் என்று ஆலாய் பறக்கிறார்கள்.அல்லோபதியின் பக்க விளைவிற்கும் பண அழிவிற்கும் தாக்கு பிடிக்க முடியாமல்,ஹீலர் என்ற ஹில்லர்களிடமும்,நியூட்ரிசியன்,
டயட்டீசியனிமும், தொழியோடு வைத்தியனிடமும், சிமோகா மடத்திலும் தஞ்சமடைகிறார்கள்.
நானே கடவுள் என்றவனும்;
இறை ஏகன் என்பவனும் அவன்
அனேகன் என்பவனும்;எவனும் இல்லை என்றவனும், எல்லாம் எல்லாம் வெற்று இயந்திரங்களையும், வெறும் அளவீடுகளையும்,அமெரிக்க ஆராய்ச்சியையும், ஆண்டியப்பன் சொன்னதையும் வைத்து மூத்திரம் பிடித்து,மலத்தை சுமந்து,இரத்தம் பிழிந்து,கதிர்வீச்சில் குளித்து நித்தம் நித்தம் சத்தை இழந்து சாவை நோக்கும் சரித்திர மடையர்களாய் வாழ்கிறார்கள்.
" உயிர் நீட்டும் வழி இரண்டு ஒன்று சரியான உணவு,மற்றொன்று முறையான உடற்பயிற்சி"
இவை தவிர்த்த காரணத்தாலேயே இன்று வதைப்பிடித்து அலைகிறாய். மீண்டும் கவனம் கொள்; எதை திண்ண வேண்டும், இயற்கையோடு இயைந்து எப்படி வாழவேண்டும்? என்பதை மட்டும் கற்றுக்கொள்,தினமும் நல்ல உணவை உண்பதைப்போலவே உடலையும்,நல்யோகம் செய்யப்பழக்கு; இதுவே என்றும் மாறாத, தலைமுறைகளையும் தாண்டி வாழும் ஆரோக்கியச்சூத்திரம்.!
மற்றெல்லாம் உன் நோய்நீட்டி பிறர் வாழக்கண்டறிந்த தந்திரங்கள்.!
www.aumherbals.com

No comments:
Post a Comment