#இழந்த_சொர்க்கம்
முன்பொரு ஊரிருந்தது
ஊரில் ஒரு ஆறிருந்தது
ஆற்றில் ஆயிரம் மீனிருந்தது
மீன் குதித்தோட மணலிருந்தது …
நிலமெங்கும் வயலிருந்தது
வயலில் கதிர் விளைந்திருந்தது
கதிர் கொத்த கிளி இருந்தது
கிளிபாடும் பாட்டிருந்தது
பல்லாயிரம் நெல்லிருந்தது
காளைக்கும் சுகமிருந்தது
வீதியெங்கும் மரமிருந்தது
அணில் கொத்திய கனியிருந்தது
பருவத்தில் மழை இருந்தது
சுட்டெரிக்காத வெயிலிருந்தது
உணவெல்லாம் உயிரிருந்தது
மருந்தெனும் நஞ்சு கலவாதிருந்தது
வீடெங்கும் திண்ணை இருந்தது
சுற்றிலும் நிறைய இடமிருந்தது
உயிர்காக்கும் மூலிகை செடிகள்
நடுவீட்டில் வளர்ந்து வந்தது
ஆடு மாடு கோழிகளெல்லாம்
உறவினர் போல பழகிவந்தது
ஒரு வீட்டில் அடுப்பெரிந்தால்
அடுத்த வீட்டிலும் பசிபோனது
இரு கண்ணில் நீர் வழிந்தால்
இருபது கைகள் துடைக்க வந்தது
பொன் பொருளை தொலைத்தால்
கூட வீடுதேடி ஓடி வந்தது
குலச்சாமி நீதான் என்று
பெண்ணை போற்றும் பண்பிருந்தது
பஞ்சாயத்து மரமிருந்தது
தப்பை திருத்த மனமிருந்தது
மாமன் மச்சான் உறவிருந்தது
மானம் காக்கும் நட்பிருந்தது
புலி துரத்தும் பெண்ணிருந்தனள்
களிர் பிடிக்கும் ஆணிருந்தனன்
சாதி மதம் கடந்த அன்பிருந்தது
மூத்தோர் சொல்லிற்கு மதிப்பிருந்தது
உண்மையை உணரும் அறிவிருந்தது
ஊருக்கு உழைக்கும் நிலையிருந்தது
இயற்கையே எங்கும் செழித்திருந்தது
இறையை போன்று அரசிருந்தது.!
அந்த ஊரு எங்கே போச்சி
ஆறெல்லாம் ஆலை
கழிவாய் ஆச்சி …
குடிநீரை கூட கேனில் வாங்கி
குடிச்சி பிராணன் இறந்தேப்போச்சி
வயலும் வாழ்வும் நஞ்சாய் ஆச்சி …
வனங்களெல்லாம் மடமாயாச்சி
வஞ்சமும் சூதும் ஆண்மீகமாச்சி
உயிர் மீட்கும் காலம் வருமோ,
இயற்கை வாழ்வை மீண்டும் தருமோ?
--ஏகப்பிரியன்---
No comments:
Post a Comment