I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: இசையோடு எனது பயணம்

Saturday, 8 September 2018

இசையோடு எனது பயணம்


மனதோடு பேசுகிறேன்

28.புதையல் மேல் அமர்ந்து
 யாசகம் கேட்டவன்  …

அதிகாலையில் யோகா வகுப்பிற்காக எனது எளிய வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது சில நாட்களில் எனக்குள்ளே ஒரு பாடல் கேட்கும். அது ஏற்கனவே வந்த திரைப்பட பாடலாக இருக்காது. இயற்கை,தமிழ்,யோகா,இறைநிலை உணர்வு என்று ஏதோ ஒரு தளத்தில் அது இராகமெடுத்து எனது பயிற்சியகம் வந்த பின்னே அடங்கும்.

முதலில் " உடலெனும் பொருள் கடந்து மனமெனும் கடல் கடந்து அருளெனும் ஆதியில் நுழைந்தேன் "

என்ற பாடலும் அதன் பின் " தேடுவதை நிறுத்து தேடியது கிடைக்கும் "

" கண்ணே பாப்பா கேளு
உணவில் இருக்கு வாழ்வு "

என்று பல்வேறு பாடல்கள் எனது இதய வீணையை மீட்டிக்கொண்டே வரும். இந்த பாடல்களை ஓய்வு நேரத்தில் சற்று ஒழுங்குப்படுத்தி  கைப்பேசியில் எனது குரலிலேயே பாடி பதிவு செய்து வைப்பேன்.

 இப்படியே ஒரு ஆறு பாடல்கள் சேர்ந்ததும் ஒரு சில எளிய இசையமைப்பாளர்களை நாடி இதை நானே பாடி வெளியிட வேண்டும். என்ற எனது எண்ணத்தை சொன்னதும் ஆளாளுக்கு ஒரு விலையை கூறினார்கள். சிலர் மட்டும் நேர்மையாக "நீங்க பாடினா யாரு கேட்பார்கள்? "
என்று கூறி மறுத்துவிட்டனர்.

அங்கே இங்கே சுத்தி நிறைவில் ஒருநாள் எனது பார்வதிபுரம் பயிற்சிமையம் அருகே இசை பள்ளி வைத்திருக்கும் ஜெபாவிடம் இதுபற்றி கூறியதும்.

"தாராளமா பண்ணலாம் " என்றதோடு; "எவ்வளவு ஆகும்" என்ற எனது அடுத்த கேள்விக்கும்; "பார்த்துக்கலாம்" என்ற இன்னொரு ஆறுதல் வார்த்தையும் கூறினார்.

அப்போது;
"ஒருவேளை நம்மை வைத்து ஏதாவது சிரிப்பு கிரிப்பு செய்து விடுவாரோ?" என்ற அச்ச உணர்வும் ஏற்பட்டது.  பிறகு அவர் ஏற்கனவே இசையமைத்து புஷ்பவனம் குப்புசாமி அய்யா பாடியுள்ள "என்னடா பழக்கம் தம்பி தம்பி அன்னைத் தமிழும் உன்னை நம்பி "  பாடலை கேட்டதும் தான் முழு உற்சாகம் ஏற்பட்டது.உடனே பணிகளை ஆரம்பித்து விட்டோம்.

நேற்று- முதல் பாடலாக " கண்ணே பாப்பா கேளு " பாடலை படக்காட்சியுடன் youtube சேனலில் வெளியிட்டு விட்டோம்.

பாடலும் காட்சியும் வெகு அருமையாக வந்துள்ளது.

இப்படி ஒரு பாடலையும் காட்சியையும் வேறு யார் எடுப்பதாய் இருந்தாலும் குறைந்தது ஒரு லட்சம் தேவைப்படும்.
அடியேன் அதில் பத்து சதவீதம் கூட செலவழிக்கவில்லை.

என்னோடு பாடிய இரு பாடகிகளான அக்சரா,அரோன் பெஃரின் இருவருமே பணம் வேண்டாம். என்றதோடு  பயணச்செலவை கூட பெற்றுக்கொள்ள மறுத்து விட்டனர்.

அரோன் பெஃரின் என்னோடு  தான் பாடிய வரிகளில் சிலவற்றுக்கு வீடியோவில் நடிக்கவும் செய்துள்ளார்.

இந்தப் பாடலில் நடித்ததோடு இதற்கு நடனமும் அமைத்து கொடுத்த எனது யோக மாணவி இயற்கை குழந்தை ரிதன்யா. என்னோடு நடித்த யோகாசன சாம்பியன் நவ்யா,திவ்யா, அனு, ராகேஷ் போன்ற பலரும் மிக அருமையாக இந்தப் பணியில் ஒத்துழைத்துள்ளனர்.

ஒளிஓவியர் சகோதரர் தினேஷ் மிக அழகான காட்சி கோணங்களை அமைத்து தனது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். இடையில் அவர் குடும்பத்தில் ஒரு துக்கம் நிகழ்ந்து விட்டது அந்த பாதிப்பும் கூட பாடலில் சில  துண்டுக்காட்சியில் பதிவாகி உள்ளதை பாடலை பார்த்தாலே தெரியும்.

அது போலவே அன்னை ஆஸ்ரமம் சுகுமாரன் அய்யா அவர்களும் மிக கனிவாக பாடல் காட்சி பதிய தனது இடத்தை தந்து உதவினார். இப்படி பலரும் அருமையான முறையில்  உதவியதாலேயே இந்தப் பணி எளிய முறையில் சிறப்பாக நடைபெற்றது.

நிறைவு பகுதியில் பாடலுக்கான சில காட்சிகள் எடுக்க இயலாமல் போன போது தனது கல்விக்கு விடுமுறை விட்டு வந்து காட்சிகளை எடுத்து தந்த எனது மகன் இஜாஷ். மற்றும் நடித்துள்ள பல்வேறு மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் என்று  அனைவருக்கும் அகம் குளிர்ந்த நன்றிகள்.!

தலைப்பிற்கு வருகிறேன் இசையமைப்பாளர் ஜெபாவிடம் "நான்  கேட்டது இசை யாசகம் அவர் எனக்கு கொடுத்துள்ளதோ பெரும் இசைப்புதையல் " உண்மையில் அவர் ஒரு சகலகலா வித்தகர்; பாடலின் சில வரிகளை  நீக்கி, சில வாக்கியங்களை சேர்த்து,எழுத்தை அழுத்தி, அழகாக்கி என்று தனது பணிகளில் மிக திறமையாக இயங்கி உள்ளார்.
இசை கோர்ப்பு பணிகளில் உள்ள  அத்தனை ஆழங்களிலும் அநாயசமாக புகுந்து வந்து ஜாலம் செய்ததோடு
காட்சி தொகுப்பிலும் பல வித்தைகள் செய்துள்ளார்.!

இதோ,எங்களது அடுத்த பாடலும் தயாராகி விட்டது.

" பிறந்து சிறந்த மொழிகளுள் சிறந்தே பிறந்த தமிழே நான் இறந்து மீண்டும் பிறப்பினும் என் நாவில் மலர்ந்து ஒளி கொடு "

இந்த அற்புத படைப்போடு விரைவில் வருகிறோம்.

அதுவரை; "கண்ணே பாப்பா கேளு உணவில் இருக்கு வாழ்வு" பாடலை எனது, ஆதிமருத்துவம் youtube சேனலிலும் ஜெபாவின், JE publication you tube சேனலிலும் கண்டு மகிழுங்கள். உங்கள் குழந்தைகளுக்கும் காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.!
நன்றியும், வாழ்த்துகளும் … இயற்கையோடு இயைந்து இன்பமாய் வாழ பிராத்தனைகளும் …!

-ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்
www.aumherbals.com

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...